உண்மையான ஊழியன்
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். – (எபேசியர் 6:8) .
ரோட்டின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருபபு தைத்துக் கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக் கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்தபிறகு, அவனது தாயை கவனிக்க அது கைக்கொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ் போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய் நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான்.
எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், ‘மிகவும் சிரத்தை எடுத்து, கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும் மற்றவர்களிடம இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் காணப்படுகிறதே அது என்ன?’ என்று கேட்டார். சிறுவன் மகிழ்ச்சியோடு, ‘ஐயா நான் ஒரு கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின் குணநலன்களை என் வாழ்விலும் செயல்படுத்த பிரயாசப்படுபவன், அதோடு ஒவ்வொருவருடைய காலணிகளை நான் பழுதுபார்க்கும்போதும், இயேசுராஜா என்னிடம் வந்து என் காலணிகளுக்கு பாலிஷ் போடு, என்று சொன்னால் நான் எப்படி செய்து கொடுப்பேனோ அப்படித்தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் செய்கிறேன்’ என்று கூறினான். அந்த நபர் இவனது வார்த்தையின் மூலம் கிறிஸ்துவைக் குறித்த அறிந்து வேதத்தை வாசித்து, கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள் என்று பவுல் அப்போஸ்தலன் எபேசு சபையிலுள்ள விசுவாசிகளுக்கு ஆலோசனையாய் சொல்கிறார். எபேசியர் ஆறாம் அதிகாரத்திலே, பிள்ளைகளுக்கு, பெற்றோருக்கு, வேலைக்காரர்களுக்கு என வரிசையாய் அன்பின் ஆலோசனை கூறும்போது, மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்று நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள் என்று கூறுகிறார்.
பிரியமானவர்களே, நாம் எந்த தொழில் செய்தாலும், எந்த வேலை செய்தாலும் நமக்கு மேலுள்ள அதிகாரிகளுக்காக, அரசாங்கத்திறகாக செய்வோமானால் வேலைப்பளு அதிகமாகும்போது அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் வரும். அநேக நேரங்களில் அரசாங்க வேலையிலும் சுயலாபத்தை தேடுகிறர்களாய் இருப்போம். ஆனால் வேதம் கூறும் இந்த ஆலோசனையை நமக்குரியதாக்கிக் கொண்டு ஒரு நாளில் நாம் செய்யும் எந்த வேலையையும் ‘நான் இதை கர்த்தருக்கென்று செய்கிறேன். அவர் இதை காண்கிறார்’ என்ற சிந்தையோடு செய்வோமானால் அந்த வேலையில் உண்மை, நேர்மை, நேர்த்தி, சிறப்பு யாவும் நாமறியாமலேயே வந்து விடும். கிறிஸ்து நம்மூலம் அந்த அலுவலகத்தில் மகிமைப்படுவார். இப்படி உத்தம கிறிஸ்தவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். ஆமென் அல்லேலூயா!
உத்தமமாய் முன்செல்ல
உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களின் உலக வேலையில் மற்றவர்களும், அதிகாரிகளும் பார்க்கிறார்கள் என்பதற்காக செய்யாமல், தேவன் எங்களை காண்கிறீர் என்ற உணர்வோடு உண்மையோடும், உத்தமத்தோடும் எங்கள் வேலைகளை செய்ய தேவன் கிருபை செய்வீராக. பேர் புகழுக்காக செய்யாமல், தேவன் எங்கள் இருதயத்தை பார்க்கிறீர் என்கிற பயத்தோடும், மற்றவர்களுக்கு உம்மை வெளிப்படுத்ததக்கதாக எங்கள் கிரியைகள், செய்கைகள் இருக்கும்படியாக தேவன் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.