கிறிஸ்துவின் உறவினர்கள்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். – (மத்தேயு 12:50).
நம்மில் அநேகருக்கு பிரபலமானவர்களின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறவர்களாக இருக்கிறோம். ஒரு வேளை ஒரு மந்திரி மிகவும் தூரத்து உறவினராக இருந்தாலும், நம்ப நாட்டு இந்த துறையின் மந்திரி, என்னுடைய அப்பாவினுடைய, அண்ணனுடைய, மனைவியினுடைய, தம்பியினுடைய மனைவியின் தம்பிக்கு மாமனார் என்று எப்படி எப்படியோ உறவின் முறையை சொல்லி, அந்த மந்திரி எனக்கு உறவினர் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் உண்டு. அந்த மந்திரிக்கு அவர் யாரென்றே தெரியாதாயிருக்கும்!
ஒருமுறை இயேசுகிறிஸ்து ஜனங்களோடு அமர்ந்து அவர்களுக்கு போதித்து கொண்டிருந்தபோது, அவருடைய தாயாரும் சகோதரரும் வெளியே நின்று அவரிடத்தில் பேச வேண்டுமென்று நின்றிருந்தார்கள் (மத்தேயு 12:46). இயேசுகிறிஸ்து ஓய்வுநாளில் ஒரு சூம்பின கையுடைய மனிதனை சுகப்படுத்தினபடியால் அதை பார்த்த பரிசேயர் அவரை கொலை செய்யவேண்டுமென்று ஆலோசனை பண்ண ஆரம்பித்தார்கள். அவரை பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூல் என்று சொன்னார்கள். அதனால் அவர் அவர்களை விரியன் பாம்பின் குட்டிகளே என்று அழைத்து, கடினமாக பேசி, வேதபாரகருக்கும், பரிசேயருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஒருவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, ‘உமது தாயாரும், சகோதரரும் வெளியே உமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னான்.
ஒருவேளை அவர்கள் இயேசுவிடம் ‘நீ வேதப்பாரகரையும், பரிசேயரையும் பகைத்துக் கொள்ளாதே, அவர்கள் உன்னை கொலை செய்யும்படி ஆலோசனை செய்கிறார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இரு’ என்று எச்சரித்து போகும்படி வந்திருக்கலாம். ஆனால் ‘தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு இயேசு பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்’ (மத்தேயு 12:48-50).
நமக்கெல்லாருக்கும் நாம் இயேசுகிறிஸ்துவின் உறவினர் என்று சொல்லி கொண்டால் மிகவும் அருமையாகத்தான் இருக்கும். நாம் அவருடைய உறவினர் என்று சொல்லிக் கொண்டாலும், இயேசுகிறிஸ்து நம்மைக் குறித்து என்ன சொல்கிறார் என்று நாம் அறிந்து அதன்படி நடக்க கவனமாயிருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்து என் அப்பா, என் சகோதரர் என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின்படி, பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு சகோதரியும், சகோதரனுமாய் இருக்கிறார்கள். அப்படியானால் பிதாவின் சித்தம் என்ன?
1. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது (யோவான் 6:39)
2. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென் பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 4:3)
3. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்ளூ அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:18)
4. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது – (1 பேதுரு 2:15).
5. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் – (1தீமோத்தேயு 2:4)
இந்த வார்த்தைகளின்படி அவருடைய சித்தத்தின்படி செய்வோமானால் நாம் அவருடைய சகோதரிகளும், சகோதரர்களுமாய் இருப்போம். கிறிஸ்துவும் நம்மை அவருடைய சகோதரன் அல்லது சகோதரி என்று சொல்லி மகிழ்வார். அவருடைய சித்தத்தின்படி வாழ்ந்து, கிறிஸ்துவின் உறவினர்களாக இருக்க தேவன் தாமே நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கின்றாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தை பார்க்கும்போது
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கிறாரே
ஜெபம்:
எங்கள்அன்பின் நேச தகப்பனே, பிதாவின் சித்தத்தை செய்வதினால் உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் சகோதரனாக, தாயாக, சகோதரியாக நாங்கள் ஜீவிக்கும்படியாக எங்களுக்கு உணர்த்தும். எந்த காரியத்திலும் உம்முடைய சித்தத்தை அறிந்து அதன்படி செய்ய கிருபை தாரும். தேவ சித்தமில்லாமல் எங்கள் வாழ்வில் ஒன்றும் செய்யாதபடி உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.