மூலைக்கு தலைக்கல்

மூலைக்கு தலைக்கல்

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. –  (சங்கீதம் 118:22,23).
1968-ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ்சர்லாந்து நாட்டின் கைகெடிகாரங்கள் (Wrist  Watches) மிகவும் புகழ் பெற்றவையாயிருந்தன. உலக பங்கு சந்தையில், 68 சதவீதமும் பங்கு விற்பனையிலும்  80 சதவீதம் லாபத்திலும் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின், பங்கு விற்பனையில் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் அந்நாட்டின் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர்.
 
இன்று கைகடிகாரம் செய்வதிலும்,  விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள்,  கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz)  வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
 
இந்த மின்னணுக்களால் படிகத்தை வைத்து,  கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது,  அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள்,  அதை உலக அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த போது,  ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால்,  இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.
 
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்கு தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று,  அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று வேத வசனத்தில் காண்கிறோம். ஒரு வேளை நீங்கள் இருக்கும் இடத்தில் அற்பமாய் எண்ணப்படுகிறீர்களோ? உங்கள் ஞானத்தையும்,  உங்களுடைய வேலை திறனும் அற்பமாய் எண்ணப்படுகிறதோ?  உங்கள் சிருஷ்டிக்கும் யோசனைகள் புறம்பாய் தள்ளப்படுகிறதோ? கவலைப்படாதிருங்கள்! ஒரு நாள் வரும், வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,  மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்பது போல உங்கள் யோசனைகளும், உங்கள் திறமைகளும் பெரிதாக எண்ணப்படும் நாட்கள் நிச்சயமாய் வரும்.
 
யோசேப்பு ஒரு தவறும் செய்யாமல்,  சிறைச்சாலையில் தள்ளப்பட்டு,  அங்கு வேதனையில் இருந்தபோது,  இரண்டு பேரின் சொப்பனத்திற்கு கர்த்தருடைய கிருபையால் அர்த்தம் சொல்லி கொடுத்தான். அவன் சொன்னபடியே பானபாத்திரக்காரன் விடுதலையாகும்போது இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து,  என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். (ஆதியாகமம் 40:14) என்று வேண்டிக்கொண்டான், ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். ஆனால் அது அப்படியே போய் விடாமல் ஒரு நாள் வந்தது,  அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி,  அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான். அவனைத் தீவிரமாய்க் காவல் க டங்கிலிருந்து கொண்டு வந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு,  வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். (ஆதியாகமம் 41:12,13,14). சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது, யோசேப்பு நினைத்தான் தான் உடனே வெளியே வந்துவிடுவோம் என்று. ஏனெனில் அவன் சொன்ன அர்த்தத்தின்படியே நடந்ததால். ஆனால் அந்த பானபாத்திரக்காரனோ, இரண்டு வருடங்களாக மறந்து விட்டான். அவன் செய்த காரியங்கள் மறக்கப்பட்டு போயின. ஆனாலும் ஓரு நாள் வந்தது, தேவன் தன் பிள்ளைகளை மறந்து போகிறவர் அல்ல, ‘தாய் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை’  என்று சொன்ன தேவன்,  ‘நீ என்னால் மறக்கப்படுவதில்லை’  என்று வாக்குதத்தம் செய்த தேவன், யோசேப்பின் பரிசுத்தத்தை, அவன் தேவனுக்காக பாராட்டின வைராக்கியத்தை மறந்து போகவேயில்லை. பார்வோனுக்கு சொப்பனத்தை கொடுத்து, அதன் அர்த்தத்தை வெளிப்படுத்தும்படியாக யோசேப்பை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர செய்து,  யோசேப்பு பார்வோனின் சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது,  பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,  உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்;  உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். (ஆதியாகமம் 41:39,40). ஆம் தேவன், அவனை மேலாக உயர்த்தினார்.
 
உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் செய்த நன்மையான காரியங்கள் மறக்கப்பட்டு போயிற்றோ? அது அப்படியே போய் விட போவதில்லை, நிச்சயமாய் கர்த்தர் ஒரு நாள் உங்களையும் உயர்த்துவார். யோசேப்பை சிறையிருப்பிலிருந்து மாற்றி அவனை எகிப்து தேசமெங்கிற்கும் அதிபதியாக உயாத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். ‘ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு,  அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்’ – (1 பேதுரு 5:6) என்று வேதம் நமக்கு போதிக்கிறபடி நாம் காத்திருப்போம் கர்த்தர் மேல் நம் பாரங்களை வைத்து விட்டு, அவர் நம்மை உயர்த்தும்படியாக நாம் காத்திருப்போம். ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார். உங்களை ஆகாதவனென்று தள்ளினவர்களே,  உங்களை மூலைக்கல்லாக, உங்களை உயர்த்தும் நாட்கள் வரும். ஆமென் அல்லேலூயா!
 
யாருக்கும் அடிமையில்லை – நீ
எவரிலும் தாழ்வதில்லை
ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்
என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே  

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று என்ற வார்த்தையின்படி, நீர் எங்களை உயர்த்தப்போகிற தயவிற்காக உமக்கு நன்றி. யேசேப்பை உயர்த்தின தேவன் எங்களுடைய சிறையிருப்பிலிருந்தும் எங்களுடைய தாழ்மையிலிருந்தும் எங்களை உயர்த்தப் போகிற தயவிற்காக நன்றி. இந்த வேளையிலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால், உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்காக உம்மை நோக்கி பார்க்கிறோம். தகப்பனே, சகலவித ஆறுதல்களின் தேவன் அவர்களுக்கு ஆறுதல் செய்வீராக. உம்முடைய மாறாத கிருபை அவர்களை சூழ்ந்து கொள்வதாக. மற்றும் தமிழகம் முழுவதும் பெய்த கனமழையினால் வீடுகளை இழந்து தவிக்கிற ஒவ்வொருவரின் குடும்பங்களையும் நினைத்து அவர்களின் தேவைகளை சந்திப்பீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.