இருதய கடினம்
‘குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்’. – (எரேமியா 18:4).
ஒரு குயவன் ஒரு மண்பாண்டத்தை வனைகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அப்படி செய்யும்போது, அவன் கையில் இருக்கும் களிமண் ஈரமாகவும், பதமாகவும் இருந்தால்தான் அவன் நினைத்த பாண்டமாக வனைய முடியும். அதே களிமண் இறுகிப்போய் காய்ந்து போய்விட்டால் அதை அவனால் வனைய முடியாது. அதை தூக்கி எறியத்தான் வேண்டும்.
அதைப்போலத்தான் நம் இருதயமும் கர்த்தருடைய வழிகளில் நடக்கும்படி உணர்வுள்ளதாகவும், ஆவியானவர் சொல்லுகிற பேசுகிற காரியத்திற்கு கேட்கும் வகையில் இருந்தால் நம்மோடு கர்த்தர் பேசுவதை நம்மால் உணர முடியும். நாம் பாவம் செய்யும்போதும், கர்த்தர் சொல்லும் காரியத்திற்கு செவிகொடாமல் போகும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கண்டித்து உணர்த்துவதை நம் இருதயம் உணர்வுள்ளதாக இருந்தால் அதை நிச்சயமாக உணர முடியும். ஆனால் இருதயம் கடினப்பட்டு போய் விட்டால் ஆவியானவர் என்னதான் பேசினாலும், கடிந்து கொண்டாலும், அதை கேட்கும் தகுதியை நாம் இழந்து போய் விடுவோம்.
‘கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது’ (யாத்திராகமம் 7:22) என்றுப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் தேவனுடைய ஜனத்தை விடாதபடி அவனுடைய இருதயம் கடினப்பட ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து அவன் கடினப்பட கடினப்பட அவனிடமிருந்த கிருபை எடுத்துக்கொள்ளப்பட்டு, ‘..கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்..’ (யாத்திராகமம் 9:12) என்ற வார்த்தையின்படி தேவனே அவனுடைய இருதயத்தை கடினப்படுத்தினார். ஆரம்பத்தில் நாம் அவருடைய வார்த்தையை கேட்காதபடி கடினப்படுத்த ஆரம்பிக்கும்போது, கர்த்தர் நாம் திரும்பி வந்து விட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். ஆனால் தொடந்து நாம் நம் இருதயத்தை கடினப்படுத்தினோமானால், அவருடைய கிருபை நம்மை விட்டு எடுபட்டுப்போய் விடும் நிலைமைக்கு சென்று விடுவோம்.
பிரியமானவர்களே, கிருபையின் காலத்தில் வாழும் நமக்கு தேவன் கிருபையாய் நாட்களையும், ஜீவனையும் கூட்டிக் கொடுத்து, நாம் அவருடைய எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு அவரிடம் வந்து விடுமாறு அழைக்கிறார். ஆனால் அந்த சத்தத்தை கேட்காதபடி, ‘பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்’ (சங்கீதம் 58:4) என்ற வார்த்தையின்படி நாம் நம் செவியை அடைத்துக் கொண்டு நம் இருதயத்தை கடினப்படுத்தினோமானால், ஒரு நாள் வரும், யாரும் உதவி செய்யமுடியாத நிலைமை ஏற்படும். தன் இருதயத்தை மீண்டும் மீண்டும் கடினப்படுத்தின பார்வோனின் நிலையைக் குறித்து நாம் அறிவோம். ஆகவே நாம் ஜாக்கிரதையாய் நம் இருதயங்களை கடினப்படுத்தாதிருப்போம். ‘இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்’ (சங்கீதம் 95:8)
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். அவருடைய வருகைக்கான அறிகுறிகள் அதிகமாய் நடந்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில் நாம் நம் இருதயங்களை கடினப்படுத்தாதபடி, தேவையற்ற வைராக்கியங்களை புறம்பே தள்ளிவிட்டு, மன்னிக்க வேண்டியவர்களுக்கு மன்னித்து, கர்த்தருடைய சத்தத்திற்கு செவிக்கொடுத்து, அவருடைய மணவாட்டி சபையாக மாற நம்மை ஒப்புக் கொடுப்போம். தேவன் கிருபையாக நம்மை ஏற்றுக் கொண்டு அவரோடு நம்மை சேர்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!
உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியாலே நிரப்பிடுமையா
என் புகலிடமே என் புது பெலனே
உந்தன் சாயலாக மாற்றுமே
உந்தன் மார்பினில் சாய்ந்திடுவேன்
ஜெபம்:
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் இருதயம் எப்போதும் நீர் சொல்லும் வார்த்தைகளுக்கு கேட்கும்படியான மனப்பான்மையோடும், பக்குவத்தோடும், உணர்வுள்ளதாகவும் இருக்கட்டும் ஐயா. எந்த நிலையிலும் நாங்கள் எங்கள் இருதயத்தை கடினப்படுத்தி, உமக்கு பிரியமில்லாதவர்களாக மாறிப் போய் விடாதபடி, உணர்வுள்ள இருதயத்தை தாரும் தகப்பனே. கர்த்தருடைய வருகை சீக்கிரமாய் இருப்பதால் எப்போடும் நாங்கள் உம்மோடும், மற்ற அனைவரோடும் சமாதானமாய் ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.