கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி

கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். –  (2 கொரிந்தியர்4:4). 
ஒரு மனிதர் பார்வையற்றோர் தங்கி இருந்த இடத்தை காணும்படி சென்றிருந்தார். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை ஒன்று இருந்தது. அந்த மனிதர், அந்த பார்வையற்றோர் எப்படி பல்வேறு அலுவல்களை செய்ய அந்த நெருக்கடியான மற்றும் விரைவு வண்டிகள் செல்லும் நெடுஞ்சாலைகளை கடக்கின்றனர் என்பதை பார்த்து வியந்தார். மேலும் அவர்களை பார்த்து, ‘எப்படி உங்களால் இந்த வாகன நெருக்கடி மிகுந்த சாலைகளில் விபத்திற்கு பயப்படாமல் இவ்வளவு தைரியமாய் கடக்கமுடிகிறது?’ என்று கேட்டார். உடனே பார்வையற்றோரில் ஒருவர் சாதுரியமாக பதில் சொன்னார், ‘இதுவரை விபத்துகளில் அகப்பட்டோரில் பார்வையில்லாதவர்கள் யாரும் உண்டா? பெரும்பாரும் பார்வையுள்ளவர்கள்தான் விபத்தில் மாட்டிக் கொண்டு அங்கவீனத்தையோ, உயிரிழப்பையோ சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் பார்வையுள்ளவாகளாக இருந்தாலும், அவசர புத்தியே என்பது தெளிவாகிறது’ என்றார். அதைக் கேட்ட அந்த மனிதர் அப்படியே அசந்து போனார்.
 
யோவான் எழுதின சுவிசேஷம் 9ம் அதிகாரம் முழுவதும் பிறவிக்குருடனை பற்றியதே! அதில் சரீரப்பிரகாரமாக கண்பார்வையடைந்த பிறவிக்குருடன், ஞானப்பார்வையும் அடைந்தவனாக, 31ஆவது வசனத்தில் ‘பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை.. ஒருவன் தேவ பக்தியுள்ளவனாக இருந்து அவருக்கு சித்தமானதை செய்தால் அவனுக்கு செவிகொடுப்பார்’ என்று சொல்வதைக் காண்கிறோம்.
 
ஆனால் அந்த நாட்களில் பரிசேயரும், வேத பாரகரும் இயேசுவே இரட்சகர் என்ற உண்மையை உணராத அளவிற்கு அவர்களுடைய மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. ஆகவே பாவத்திலிருந்தும், அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. ‘அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது என்றார்’ (யோவான் 9:39-41). இதில் கிறிஸ்துவின் பார்வையில், பார்வையற்றோராய் இருப்பவர்கள் தங்கள் பாவத்தை உணராதவர்களே ஆவார்கள்.  பிரியமானவர்களே, சரீரபிபரகாரமாக குருடாயிருந்தாலும் சரி, மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருந்தாலும் சரி, இருதயத்தில் சுத்தமுடையவர்களே பாக்கியவான்கள். அவர்களே தேவனை தரிசிக்க முடியும். பாவத்தை மறைத்து வைத்தால் அவன் வாழ்வடைய முடியாது. அவற்றை அறிக்கை செய்து விட்டுவிட்டால் மட்டுமே தேவ இரக்கத்தை பெற முடியும்.
 
‘தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்’ (2 கொரிந்தியர் 4:4) என்ற வார்த்தையின்படி இந்நாட்களில் அநேகருடைய மனக்கண்களை இப்பிரபஞ்சத்தின் தேவன் என்னப்படும் சாத்தான் குருடாக்கி வைத்திருக்கிறான். அவர்கள் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷமாகிய அவரே வழி, சத்தியம், ஜீவன் என்கிற உண்மைகளை உணராதபடி குருடாயிருக்கிறார்கள். அவர்களை ஒளியினிடத்திற்கு அழைத்தாலும் வரமுடியாதபடி, உணராதபடி குருடர்களாயிருக்கிறார்கள். அவர்கள் சடுதியாய் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
 
தங்கள் பாவ வாழ்க்கையை விட்டு, குருட்டாட்டமான நம்பிக்கைளை விட்டு, கண் திறக்கப்பட்டவர்களாக, கிறிஸ்துவை இரட்சகராக காண்பவர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டுமே என்கிற ஆத்தும பாரத்தோடு நாம் ஒவ்வொருநாளும் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை ஒளியை இவர்கள் காண வேண்டும். பிரகாசமான ஒளியாகிய கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை இவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விடாமல் ஜெபிக்க வேண்டும். 
 
நாமும் கூட நம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருந்தால், பாவ வாழ்க்கையிலே ஜீவித்துக் கொண்டிருந்தால் இந்த நாளில் நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று சொன்ன கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்கு வந்து விடுவோமாக. அவரிடமிருந்து பிரகாசமான ஒளியை பெற்று அவருக்கே சாட்சியாக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென் அல்லேலூயா!
 
உம்மோடு இருக்கணுமே – ஐயா
உம்மைப்போல் மாறணுமே
லகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே 

ஜெபம்:

எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இந்த பிரபஞ்சத்தின் தேவனான சத்துருவானவன் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியை காணக்கூடாதபடி குருடாக்கியிருக்கிற மனக்கண்களை திறக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் கிறிஸ்துவே தேவனென்று அறிந்து, அவருடைய பிரகாசமான ஒளிக்குள் வந்து விடும்படி ஜெபிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரமான மக்கள் அந்த ஒளியை பெறாதபடி, அறியாதபடி அழிந்து கொண்டிருக்கிறார்களே, அவர்கள் கிறிஸ்துவை அறிந்து மனம் திரும்பும்படி கிருபை செய்யும். இன்னும் கண்ணிருந்தும் குருடராக பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் கூட மனம் திரும்பி கர்த்தரிடம் வந்து விடுமாறு ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.