மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். – (1 கொரிந்தியர் 15:3-5)
‘அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்’ (மத்தேயு 26:31-32) என்று இயேசுகிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்று ஆணித்தரமான விசுவாசம் இருந்தது.
ஆனால் ஒரே இராத்திரியில் எல்லாம் மாறுதலாக முடிந்தது. வியாழனன்று இராப்போஜனத்தை ஆசரித்த சில மணி நேரங்களில் யூதாஸ்காரியோத் கிறிஸ்துவை காட்டிக் கொடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, ஏரோதின் அரண்மனைக்கும், பிலாத்துவின் நியாயாசனத்திற்கும் முன்பு நிறுத்தப்பட்டு, அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிப் போல அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்தும் போனாரே என்று ஆதங்கத்தோடு பேதுரு நடந்த நிகழ்ச்சிகளை சிந்தித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவரோடு எந்த சீஷனும் இருக்கவில்லை யோவானைத்தவிர. பேதுருவும் கூட்டத்தோடு கூட்டமாக போய் விட்டிருந்தார்.
இயேசுகிறிஸ்துவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்டபோது, ஒரு சீஷரும் இருக்கவில்லை. ‘சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான். அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்’ (மத்தேயு 27:57-61). ஒரு சீஷனும் அவரை அடக்கம் செய்யும்வரைக் காத்திருக்கவில்லை.
பேதுரு நடந்த காரியங்களை நினைத்தபடி ஆதங்கத்தோடு நடந்து கொண்டிருந்தார். கர்த்தரை மறுதலித்து விட்டோமே என்று மனதில் குற்ற உணர்ச்சியோடும், மனம் நிறைந்த துக்கத்தோடும், சனிக்கிழமை இரவு நெடுநேரம் தூக்கம் வராமல், திரும்பி திரும்பி படுத்து, கடைசியாக கண் அயர்ந்தபோது, விடிய ஆரம்பித்திருந்தது. அப்போது திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அதை கேட்டவுடன் பேதுருவின் இருதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது. ஐயோ அரசாங்க வீரர்கள் தன்னை கைது செய்துப்போகத்தான் வந்திருக்கிறார்கள் என்று பயப்பட ஆரம்பித்தார்.
அதற்குள் மகதலேனா மரியாளின் சத்தம் கேட்டது. ‘நான்தான் கதவை திறவுங்கள்’ என்ற சத்தம் கேட்டு, எழுந்து கதவை திறந்து, ‘என்ன இந்த காலையிலே’ என்று கேட்டார். அதற்குள் மரியாள், மேல் மூச்சு வாங்க, ‘இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து விட்டார்’ என்று கூறினபோது, பேதுருவின் தூக்கம் எங்கோ ஓடிப்போனது. பக்கத்தில் படுத்திருந்த யோவானை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கல்லறை இருந்த இடத்திற்கு வேகமாக ஓடினார்.
கிறிஸ்து வைக்கப்பட்டிருந்த கல்லறையை மூடியிருந்த கல் புரட்டபட்டு இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கு இயேசுகிறிஸ்துவை சுற்றி வைக்கப்பபட்டிருந்த சீலைகள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. ‘பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்’ (லூக்கா 24:12) ஆம், மீண்டும் பேதுரு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்காமல், இயேசுகிறிஸ்து நிஜமாகவே உயிர்த்தெழுந்து விட்டாரா என்று சந்தேகமும், வியப்பும், கலக்கமும் உடையவராக நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று இயேசுகிறிஸ்து அவருக்கு முன் தோன்றினார். ‘கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்’ (1கொரிந்தியர் 15:5).
இயேசுகிறிஸ்து அவர் முன் தோன்றிய உடனேயே பேதுருவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கர்த்தரை மறுதலித்த தனக்கு, தகுதியில்லாத தனக்கு முன், தான் நேசித்த ஆண்டவர், தான் மரித்ததாக எண்ணியிருந்த கர்த்தர் தனக்கு முன் நிற்பதை கண்ட பேதுரு அவருடைய காலில் விழுந்து, சந்தோஷ மிகுதியால் கண்ணீர் விட்டார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை கண்ட பேதுரு இயேசுகிறிஸ்து கர்த்தரை கண்டோம் என்று அப்படியே இருந்து விடவில்லை. மீண்டும், ‘மீன்பிடிக்கப் போகிறேன்’ என்று தன்னோடு சீஷர்களையும் அழைத்துக்கொண்டு சென்றபோது, இயேசுகிறிஸ்து தாம் அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தும்படி அவரை அழைத்து மீண்டும் தம் ஊழியத்தில் நிலைநிறுத்தினார். அதன்பின் பேதுரு திரும்பி போகவில்லை. கர்த்தருக்கு உண்மையாக இறுதிவரை வாழ்ந்து, தன்னை கிறிஸ்துவைப்போல சிலுவையில் அறையும்படி கொண்டுப்போகப்படும்போது, தான் கிறிஸ்துவைப்போல தன் தலை நேராக வைத்து அடிக்கப்பட பாத்திரவான் அல்ல என்று சொல்லி, தலைகீழாக தன்னை சிலுவையில் வைத்து அறையும்படி சொல்லி, அப்படியே அறையப்பட்டு, இரத்தசாட்சியாய் மரித்தார்.
பிரியமானவர்களே, இது ஒரு கதைப்போல இருந்தாலும், இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்தப்பின் பேதுருவிற்கு தனிப்பட்ட முறையில் தரிசனமானார் என்று 2 கொரிந்தியர் 15:5லும், லூக்கா 24:34லிலும் பார்க்கிறோம். கர்த்தரை மறுதலித்த பேதுருவையும் அன்புக்கூர்ந்து தம்முடைய ஊழியத்தில் நிலைநிறுத்தின கிறிஸ்து, ஒருவேளை அவரை விட்டுப்பிரிந்து தூரப்போயிருக்கிற நம்மையும் கூட திரும்ப அவருக்குள் நிலைநிறுத்த வல்லவராகவே இருக்கிறார்.
ஒருவேளை நான் அதற்கு தகுதியல்ல என்று நினைக்கிறோமா? பேதுருவை அழைத்த தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். மீண்டும் அவருடைய அழைப்பிற்கு செவி சாய்த்து அவருடைய அன்பிற்குள் வந்து விடுவோம். கர்த்தர் ஒருபோதும் நம்மை தள்ளிவிட மாட்டார். அவருடைய ஊழியத்தில் நம்மை நிலைநிற்க வைத்து நிச்சயமாகவே அநேகருக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். ஆமென் அல்லேலூயா!
ஜெபம்:
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்துவை விட்டு பின் வாங்கி சென்ற பேதுருவிற்கு தரிசனம் கொடுத்து, மீண்டும் அவரை ஊழியத்தில் நிலைநிறுத்தின கிறிஸ்துவின் அன்பிற்காக நன்றி செலுத்துகிறோம். அதுப்போல கிறிஸ்துவின் மேல் வைத்திருந்த ஆதி அன்பை இழந்தவர்களாக அவருடைய ஊழியத்தில் நிலை நிற்காமல் பின்மாற்றத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தேவன் தாமே தொடுவீராக. மீண்டும் உம்முடைய அன்பிற்குள் அவர்கள் வந்துவிட அவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்வீராக. உமக்கென்று உண்மையாய் இறுதிநாள் வரை ஊழியம் செய்ய கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.