நன்மையானதையே அருளும் தேவன்

நன்மையானதையே அருளும் தேவன்
‘நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே’. – (எரேமியா 29:11).

ஒரு விவசாயிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஒருவளை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒரு முறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது, அவள் தன் தகப்பனிடம், ‘அப்பா, தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டி கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடி போய் கொண்டு இருக்கின்றன’ என்று கூறினாள்.
.
அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது, அவள், தன் தகப்பனிடம், ‘அப்பா நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள். அப்போதுதான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாக காய முடியும்’ என்று கேட்டு கொண்டாள்.
.
இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக, ‘தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது’ என்று ஜெபித்தார்.
.
நம் தேவன் நம்முடைய காலங்களை அறிந்தவரல்லவா? நம் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஒரு சிறு பிள்ளை கத்தி வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை அந்த பிள்ளைக்கு அதனுடைய பெற்றோர் தருவார்களோ? நிச்சயமாக இல்லை. அதுப்போல நாம் அநேக தேவைகளை குறித்து ஆண்டவரிடம் கேட்கலாம். ஆனால் நமக்கு எது நன்மை என்று தேவன் அறிந்திருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு ஒப்புவித்து நாம் ஜெபிக்கும்போது, அவர் நமக்கு நன்மையானதையே நிச்சயமாய் கொடுப்பார்.
.
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று நமக்கு வாக்குதத்தம் செய்த ஆண்டவர், தீமையானவற்றை அல்ல, நன்மையானவற்றையே கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.
.
ஒருவேளை நமக்கு கிடைத்திருக்கும் எந்த ஒரு காரியமும் நம்முடைய விருப்பமில்லாததாக இருக்கலாம். ஆனால், அவருடைய சித்தத்திற்கு ஒப்பு கொடுத்து ஜெபித்து, அதன்படி பெற்று கொண்டதை குறித்து, சோர்ந்து போகாமல், தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே செய்வார் என்று நம்பிக்கையோடு, வாழ முயற்சிக்க வேண்டும். ஒருவேளை தற்போது நமக்கு தெரியாவிட்டாலும், பிற்காலத்தில் அது எத்தனை நன்மையானது என்று தெரியவரும்போது, கர்த்தரை துதிக்காமல் நம்மால் இருக்க முடியாது. ‘..கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’ என்று வாக்குதத்தம் செய்தவர், நிச்சயமாகவே நம் சந்தோஷம் நிறைவாகும்படியே தந்தருளுவார். ஆமென் அல்லேலூயா!
.
ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
...
கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசிர்வதித்தீர் 
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், எங்கள் தேவைகள் விருப்பங்கள் அனைத்தையும் அறிந்த நல்லவரே, எது எங்களுக்கு நலமானது என்றும் நீர் அறிந்திருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் விருப்பங்களல்ல, உம்முடைய விருப்பமே எங்கள் வாழ்வில் நிறைவேறட்டும் தகப்பனே. நீர் உமக்கு சித்தமானதை கொடுக்கும்போது, அது இன்னும் நிறைவானதாக ஆசீர்வாதமாக இருக்குமே. அப்படிப்பட்டதை பெற்று கொண்டு, நிறைவாய் வாழ கிருபை தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.