நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். – (அப்போஸ்தலர் நடபடிகள் 16:25)
. இந்த கட்டுரை சற்று பெரியதாக இருந்தாலும், இதன் மூலம் கர்த்தர் நம்மோடு இடைபட இருப்பதால் தயவாய் பொறுத்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் சீலாவை தன்னோடு வைத்து கொண்டு, சுவிசேஷத்தை ஒவ்வொரு நாடாக பிரசங்கித்து வந்த போது, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார் (வசனம் 7)ஆவியானவர் அவர்களை பித்தினியா நாட்டுக்கு போகாதபடி தடை செய்தார்.
.
அப்போது ஒரு நாள் இரவிலே பவுல் ஒரு தரிசனம் கண்டு, ‘அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது’ (9ம் வசனம்) அதனால் பவுல் ஆவியானவர் தங்களை மக்கெதோனியாவிற்கு சுவிசேஷம் சொல்ல அழைக்கிறார் என்று உறுதிபடுத்தி கொண்டு, அங்கே செல்கிறார். ‘மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப்பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்’ (வசனம் 12)
.
அங்கு அவர்கள் சுவிசேஷத்தை சொல்லி, ஒரு இடத்தில் எப்போதும் கூடி ஜெபிக்கிறவராயிருந்தார்கள். ‘நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள் இப்படி அநேகநாள் செய்துகொண்டு வந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று(வசனம்16-18). அந்த பெண் குறி சொல்லுகிற ஆவியுடையவள்தான், அவள் பவுலை பார்த்து, உண்மையைதான் சொன்னாள். ஆனால் ஒரு அசுத்த ஆவி தங்களை குறித்து சொல்வதை விரும்பாத பவுல் அந்த அசுத்த ஆவியை அதட்டுகிறார். உடனே அது அவளை விட்டு போனது.
.
இந்நாட்களில் தங்கள் ஊழியத்தை குறித்து யாராவது மற்றவர்கள் முன் நன்மையாக சொல்ல மாட்டார்களா? அது அசுத்த ஆவியாயிருந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிற நாட்களில், பவுல் அந்த அசுத்த ஆவியை அதை கடிந்து கொண்டு அப்புறப்படுத்துகிறார்.
.
அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள்(வசனம் 19). இப்போது பவுலும் சீலாவும் பிரச்சனையில் சிக்கி கொண்டார்கள். அந்த குறிசொல்லும் ஆவியுடைய ஸ்திரீயினால் நிறைய பணத்தை சம்பாதித்த அவளுடைய எஜமான்களுக்கு பவுலின் மேலும், சீலாவின் மேலும் கோபம் வந்தது, உடனே அவர்கள் இருவரையும் அதிகாரிகளிடத்தில் கொண்டுபோய், பொய்யாய் அவர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள். அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்(வசனங்கள் 22-25). பவுலும் சீலாவும் செய்ததெல்லாம், அசுத்த ஆவியை அந்த பெண்ணை விட்டு அகற்றியதுதான். ஆனால் அதினால் அவர்கள் அநேக அடிகன் அடிக்கப்பட்டு, உட்காவலறையில், கால்களை தொழுமரத்தில் மாட்டி அங்கு இங்கு அசையாதபடி சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
.
அவர்கள் அந்ததேசத்திற்கு வந்தது, ஆவியானவரின் வழிநடத்துதலின்படிதான். ஆனாலும் பிரச்சனை வந்தது. அவர்கள் தவறு எதுவும் செய்யவில்லைதான். ஆனாலும் அடிக்கப்பட்டு, சிறையில் கடுமையாக நடத்தப்பட்டார்கள். ஒருவேளை நீங்களும் கூட ஆவியானவரின் சித்தத்தின்படிதான் அங்கு சென்றேன். ஆனாலும் அநேக பாடுகளை சந்திக்கிறேன் என்று சொல்கிறீர்களோ, கர்த்தர் உங்களுக்கு நன்மையானதொன்றை வைத்திருக்கிறார்.
.
‘நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்’ நடுராத்திரியில் பவுலும் சீலாவும் ஜெபம் பண்ணினார்களாம். ஒருவேளை நாமாக இருந்தால், ‘ஏன் ஆண்டவரே, உம்முடைய சித்த்தின்படிதானே நாங்கள் வந்தோம். இப்போது பாரும், எத்தனை அடிகள், எங்கள் கால்கள் சங்கிலிகளால் மாட்டப்பட்டிருக்கிறது, உடலெல்லாம் அநியாயமாய் வலிக்கிறது’ என்று முறையிட்டிருப்போம். ஆனால் அவர்களோ, தங்களுடைய நிலையை பொருட்படுத்தாமல், துதித்து பாட ஆரம்பித்தார்கள். அவர்களோடு காவலில் இருந்த மற்ற கைதிகளும் இவர்கள் பாடுவதை கேட்டு கொண்டிருந்தார்களாம். அப்படியென்றால் சத்தமாகத்தானே பாடியிருக்க வேண்டும்!
.
அப்படி அவர்கள் பாடி கொண்டிருக்கும்போதுதானே, சடுதியில், உடனடியாக, ‘சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று’ (வசனம் 26). சிறைச்சாலையின் அஸ்திபாரங்களே அசைந்தது. ஒருவேளை சிறைச்சாலை மேலாக அசைந்தால், யாருடைய கட்டுகளும் கழன்று போயிருக்காது. அஸ்திபாரங்களே அசையும்படி செய்பவர் நம் கர்த்தர். நாம் நம்முடைய பாடுகளின் மத்தியில் செலுத்தும் துதிகள் கர்த்தரை பிரச்சனையின் அஸ்திபாரத்தையே அசைக்க வைத்து விடுகிறது. அல்லேலூயா! கதவெல்லாம் திறவுண்டது. கர்த்தர் திறந்த கதவை யாரும் பூட்டவே முடியாது, அவர் பூட்டினால் யாராலும் திறக்கவே முடியாது. ஆமென். பவுலின் சீலாவின் கட்டுகள் மாத்திரமல்ல, எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று அல்லேலூயா! நாம் ஜெபிக்கும் ஜெபமும் துதிக்கும் துதியும் நம்முடைய பாவ சாப கட்டுகளை மாத்திரமல்ல, நம்மோடு கூட இருக்கிற மற்றவர்களின் கட்டுக்களையும் அவிழ்த்து விடும். தேவன் பெரிய காரியத்தை செய்து விடுவார். ‘சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்’ (வசனம் 27) பவுலையும் சீலாவையும் கட்டி வைத்து விட்டு நிம்மதியாக தூங்க சென்றிருந்த ‘சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து ஓடிவந்து நடந்தவைகளை கண்டு, மிகவும் பயந்து, தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம் என்றான்’ (வசனம் 28). அப்போது அதை கண்ட சிறைச்சாலைகாரன் அதுவரை அவர்களை அடித்தவன், தொழுமரத்தில் அவர்களை மாட்டி வைத்தவன், இப்போது நடுநடுங்கி, ஆண்டவன்மாரே என்று அழைக்கிறான். தன் குடும்பத்தின் இரட்சிப்பை பெற்று கொள்கிறான் அல்லேலூயா!
.
பிரியமானவர்களே, நீங்கள் துதிக்கிறவர்களாய் இருந்தால், உங்களுக்கு முன் நிற்பது எதுவும் இல்லை. அது பத்து பூட்டுகள் பூட்டப்பட்ட சிறையாக இருக்கலாம், கைகால்கள் அசையாதபடி கட்டி வைத்திருக்கிற சங்கிலிகளாயிருக்கலாம், அல்லது, குடும்பத்தின் சாபகட்டுகளாகவோ, பாவ கட்டுகளாகவோ, எந்த கட்டுகளாகவோ இருக்கலாம். நீங்கள் உங்கள் துதிகளின் பலிகளை செலுத்தும்போது, உங்கள் துன்ப, பாடுகளின் நேரத்தில் கர்த்தரை துதிக்கும்போது, தேவன் அஸ்திபாரங்களே குலுங்கும்படி, பூட்டுகள் உடைத்து கதவுகள் தானாக திறக்கும்படி, எல்லாருடைய, குடும்பத்தாருடைய கட்டுகள் கழன்று போகும்படி பெரிய காரியங்களை செய்வார். துதியின் மத்தியில் வாசம் செய்யும் நம் தேவன் நாம் ஜெபிக்கும்போது, நம் நாட்டிலுள்ள கட்டுக்களை உடைத்து, ஆத்துமாக்களை கொள்ளை பொருளாக கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!
.
சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் – நன்றியால்
...
நன்றியால் துதி பாடு உன் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றியால்
|