அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.– (மத்தேயு 25:40).
. ஒரு முறை ஒரு கல்லூரியில் பேராசிரியர் புதிதாய் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு கேள்வி பதில் பகுதி வைத்தார். ஒரு மாணவி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தவளாக அதில் இருந்த கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. . அவளுக்கு அதன் பதில் தெரியவில்லை. அதில் கேட்டிருந்த கேள்வி, உங்கள் வகுப்பறையை தினமும் சுத்தம் செய்யும் பெண்ணின் பெயர் என்ன? என்பதே. அவளுக்கு மட்டுமல்ல, அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை. . பதில் தாள்களை பேராசிரியர் எடுத்து சென்றபோது, ஒரு மாணவி அவரிடம் ஐயா, கடைசி கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லையே, அதனால் எங்கள் மதிப்பெண்கள் குறையுமா? என்றுக் கேட்டாள். அதற்கு அவர், ‘ஆம், உங்கள் வாழ்வில் ஒவ்வொருவரும் உயர்ந்த, தாழ்ந்த மக்களை சந்திக்க கூடும். ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். ஒரு புன்னகை செய்து, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாலே அவர்கள் முகம் மலரும். நீங்கள் இப்போதிருந்தே இதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த கேள்வியை வைத்தேன்’ என்றார். . பிரியமானவர்களே, நம்மில் அநேகர் நமக்கு கீழ் தாழ்ந்த வேலை செய்யும் ஒருவரையும் கண்டுக்கொள்வது கிடையாது. அவர்களோடு நான் பேசினால் என் தராதரம் என்ன ஆவது என்று நாமே அவர்களோடு இணைந்து கொள்வதை தடுத்து விடுகிறோம். அநேகருக்கு தங்களுக்கு காபி கொண்டு வந்து வைக்கும் ஊழியனின் பெயர் தெரியாது. வாசலில் நிற்கும் செக்யூரிட்டியின் பெயர் தெரியாது. அவர்களோடு பேசினால் நம்மிடம் பணம் கேட்டு விடுவார்களோ என்று அநேகருக்கு பயம். நம்மிலும் தாழ்ந்தவர்களோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டால் நாமும் அவர்களில் ஒன்றாக மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று சிலருக்கு பயம். . அவர்களும் மனிதர்கள்தான் என்பதை நினைக்க வேண்டும். அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, எப்படி இருக்கிறீர்கள், உங்கள் குடும்பம் சுகம்தானே என்று விசாரித்துப் பாருங்கள். அடுத்த முறை வரும்போது உங்களுக்காக எதையும் செய்வதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். ‘என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்’ (யாக்கோபு 2:5-6) என்று யாக்கோபு கூறுகிறார். . ‘நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்’ (நீதிமொழிகள் 29:7) என்று வேதம் கூறுகிறது. ஏழைகளையும். சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நாமும் ஒரு நாள் தாழ்வில் இருந்துதான் இப்போது கர்த்தருடைய கிருபையால் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது. . ஏழைகளை விசாரிக்கிற தேவன் நம் தேவன். அவர் நியாயமாய் அவர்களுடைய வழக்கை விசாரித்து நியாயம் செய்கிறவர். அவருடைய பிள்ளைகளாய் இருக்கிற நாமும் ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் தரித்திரரையும் அன்போடு விசாரித்து நம்மால் இயன்ற அளவு உதவ வேண்டும். வருடத்தில் ஒரு முறையாவது நாம் குருடர்களையும், ஊனர்களையும், ஏழைகளையும் விருந்துக்கு அழைத்து உணவு கொடுப்போமா? அவர்கள் மீண்டும் நமக்கு விருந்து தர மாட்டார்கள். ஆனால் நமக்கு பலன் கர்த்தரிடத்திலிருந்து வரும். ‘நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்’(லூக்கா 14:13-14) . பிரியமானவர்களே, ஏழைகளை நேசிப்போம், அவர்களுக்கு உதவி செய்வோம் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் நமக்கு பதில் செய்யப்படும். ஆமென் அல்லேலூயா! .
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்
. வறுமையில் வாழ்பவன் என் நண்பன் வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் அல்லல் படுபவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் என் சகோதரன் காரணம் அவனும் மனிதன் |