ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. …என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். – (நீதிமொழிகள் 8:18,20,21).
. ஒரு இராஜா அநேக போர்களை நடத்தி வெற்றிக் கண்டார். அவருடைய நான்கு அமைச்சர்கள் இந்த போர்களை அவருக்காக நடத்தி வெற்றியின் வழியில் இராஜாவை நடத்தினர். ஆகையால் அந்த இராஜா நான்கு அமைச்சர்களையும் கனப்படுத்த விரும்பினார். . ஆகவே தனது பக்கத்து நாட்டு மன்னர்களையும், நாட்டின் பெரிய பதவியிலிருப்பவர்களையும் அழைத்து பெரிய விருந்து செய்தார். அந்த விருந்தில் அந்த நான்கு அமைச்சர்களையும் கனம் பண்ணி, ‘உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், அதை தருகிறேன்’ என்று கூறினார். . முதல் அமைச்சர் வந்தார், அவர் சொன்னார், ‘இராஜா அவர்களே, நான் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பணம் இல்லாததால் அநேக நாட்கள் உணவு இன்றி தவித்தேன். எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே எனக்கு பணம் கொடுங்கள், அதுப்போதும் என்றார். அதன்படியே போதும் என்று சொல்லும் அளவிற்கு அவரக்கு இராஜா பணத்தை கொடுத்தார். . இரண்டாவது அமைச்சர், ‘எனக்கு வீடு இல்லை. இந்த அரண்மனையைப்போல வீடு ஒன்று கட்டித்தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். வீடு கட்டித்தர இராஜா அரண்மனை வேலைக்காரரிடம் கட்டளையிட்டார். . மூன்றாவது அமைச்சர், ‘எனக்கு வீடும் உண்டு. பணமும் உண்டு, ஆனால் நான் போகும் வழி சரியாக இல்லை. எங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நல்ல பாதை போடப்பட வேண்டும்’ என்றுக் கேட்டுக் கொண்டார். அதன்படி இராஜா பாதைப் போட்டுக் கொடுப்பதாக வாக்களித்தார். . நான்காவது அமைச்சரை கேட்டபோது, அவரது கண்கள் கலங்கியது. பேச்சு வரவில்லை. அதைக்கண்ட இராஜா ‘உனக்கு என்ன வேண்டும்? கேள், பாதி இராஜ்யமானாலும் தருகிறேன்’ என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர் கண்களில் கண்ணீர் வழிந்தபடி, ‘இராஜா எனக்கு பணமோ, வீடோ அல்லது வேறு எதுவுமே வேண்டாம்;. நீங்கள்தான் எனக்கு வேண்டும். உங்களுக்கு சரியென்றால் என் வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இராஜா உடனே, ‘இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, நான் வந்து உன் குடும்பத்தோடு இரண்டு நாட்கள் தங்குகிறேன்’ என்றுக் கூறினார். . அதன்படி இராஜா போய் தங்க திட்டங்கள் போட்டபோது, அந்த அமைச்சரின் வீடு பழைய வீடு, போக சரியான பாதை இல்லை என்று அறிந்து, இராஜா போய் தங்கியிருக்கும்படி அரண்மனைப் போன்ற வீட்டை கட்டச்சொல்லி, சரியான பாதை போடப்பட்டு, அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்கள் இராஜாவுக்கு தேவையானதை செய்து கொடுக்கும்படி பணமும் நிறைய அந்த அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. அவர் கேட்காமலேயே மற்றவர்கள் பெற்றுக் கொண்ட அத்தனை ஆசீர்வாதங்களையும் இந்த அமைச்சர் இராஜாவை தன் வீட்டிற்கு அழைத்ததால் பெற்றுக் கொண்டார். . பிரியமானவர்களே, நாமும் கர்த்தரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று பெரிய லிஸ்டுகளை போட்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோமா? நமக்கு வேண்டியது இன்னதென்று அவருக்கு தெரியும், ஆனால் நம்முடைய கணக்கற்ற தேவைகளை அவரிடம் சொல்லி, தாரும் தாரும் என்றுக் கேட்டுக் கொண்டே இருக்கிறோமா? . நாம் உலக காரியங்களை கேட்பதற்கு முன், அதை கொடுப்பவரை நாம் நம் உள்ளத்தில் வரும்படி கேட்டால், அவர் வரும்போது, எல்லா தேவைகளும் சந்திக்கப்படுமல்லவா? ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்’ (மத்தேயு 6:33) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! . இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்னென்ன தேவை? ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு என்று அனைத்தையும் படைத்த தேவன் கூறுகிறார். அவரை சிநேகிக்கிறவர்கள் அவற்றை பெற்றுக் கொள்ளும்படி தேவன் கிருபை செய்கிறார். . பிரியமானவர்களே, உலக காரியங்களை கேட்பதற்கு முன், அவற்றை கொடுக்கும் தேவனை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் வாரும் என்று கேட்போமா? அவரை நாம் முழு இருதயத்தோடு தேடும்போது, மற்ற காரியங்கள் நமக்குக்கூட கொடுக்கப்படுமே! இயேசு வந்த வீட்டிலே சந்தோஷம் வருமே, சமாதானம் வருமே, சண்டை இல்லையே சச்சரவு இல்லையே அப்படிப்பட்ட தேவனை தேடுவோம். அவரிடத்திலிருந்து ஐசுவரியம், கனம், நிலையான பொருள், நீதியை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா! .
வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
|