எதிர்பாராத நேரம்

எதிர்பாராத நேரம்
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். – (1யோவான். 2:28).

நம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரிந்த சத்தியமாகும். ஆனால் நாம் எவ்வளவு தூரம் ஆயத்தமாயிருக்கிறோம் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.
.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஈசன் ஹோவர் (Eisenhover) விடுமுறையில் இருந்தபோது, பத்திரிக்கையில் அவருக்கு என்று குறிக்கப்பட்டு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ஆறு வயது நிரம்பிய பால் என்னும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மரணதறுவாயில் இருப்பதாகவும், அவன் அமெரிக்க அதிபரை பார்க்க விரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் அந்த சிறுவனை போய் பார்க்க முடிவு செய்தார். அப்படியே ஒரு நாள் அந்த சிறுவனின் வீட்டிற்கு போய் கதவை தட்டினார்.
.
அச்சிறுவனின் தகப்பன் டொனால்ட் கதவை திறந்தபோது அமெரிக்க அதிபரைக்கண்டு அதிர்ச்சியுற்றார். சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன் செய்யாமல், மிகவும் சாதாரண உடைகளை உடுத்தியிருந்த அவர், அதிபரை உள்ளே அழைத்து, சிறுவனிடம் கொண்டு சென்றார். அதிபர் சற்று நேரம் அந்த சிறுவனிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
.
அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு அதுவே அந்த நாளின் பேச்சாக இருந்தது. ஆனால் டொனால்ட்க்கோ சந்தோஷமேயில்லை. ஏனெனில் அவர் அதிபரின் வருகையை எதிர்ப்பார்க்காததினால், சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன்கூட செய்யாமல் இருந்து விட்டோமே என்று, மிகவும் துக்கப்பட்டார். ஆம் பிரியமானவர்களே! நம் ஆண்டவர் நாம் எதிர்பாராத நேரத்தில் வருவார். நாம் ஆயத்தமா? கறைதிரையற்ற இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தியிருக்கிறோமா? அல்லது கறைகளோடு காணப்படுகிறோமா?
.
இயேசு வருகையை எதிர்ப்பார்க்கும் பக்தர்க்கு
அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி!
அவர் வருகையை எதிர்பாரா மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி!
.
ஜெபம்
எங்கள் நல்ல தகப்பனே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையில் நாங்கள் வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமாய் எதிர்க்கொள்ள, அவரில் நிலைத்திருக்க எங்களுக்கு உதவும். புத்தியுள்ள கன்னிகைகளைப் போல நாங்கள் காத்திருக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.