‘ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு’. – (உபாகமம் 8:10-11).
. நானூற்று முப்பது வருடங்களாய் எகிப்திலே அடிமைகளாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களை தேவன் பாலும் தேனும் ஓடுகிற ஒரு செழிப்பான தேசத்திற்கு அழைத்து கொண்டு வருகிறார். வரும் வழியிலே தேவன் செய்யும் அநேக அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்கிறார்கள். ‘நீங்கள் வசிக்கபோகும் தேசத்திலே நீங்கள் கட்டாத வீடுகளையும், நடாத திராட்சை தோட்டங்களையும் தோப்புக்களையும் தருவேன்’ என்று வாக்களிக்கிறார். அப்படி எல்லாவித ஆசீர்வாதங்களையும் மக்கள் பெற்று, அனுபவிக்கும்போது தேவனை மறந்து விட வாய்ப்பு அதிகமாயிருப்பதால் தேவன் முன்னதாகவே, ஆசீர்வாதத்தோடு அநேக எச்சரிப்புக்களையும் கொடுத்தார். ஏனென்றால் தாம் கொடுக்கும் ஆசீர்வாதம் தம்மையே மறந்து விட செய்வதாய் அமைந்து விட கூடாது என்பதற்காகவே. அவர் அநேக அதிசயங்களோடும், அற்புதங்களோடும், தாமே தேவனென்று நிரூபித்து, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கொண்டு வந்து, சகலவித ஆசீர்வாதங்களோடும் வாழ வைத்த கிருபையை அந்த இஸரவேலர் மறந்தவர்களாய், தங்கள் இருதயம் விரும்பிய தேவர்களை பணிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதினால் தேவ கோபம் அவர்கள் மேல் இறங்கி, அவர்களை உலக முழுவதும் சிதறடித்தார்.
.
அந்த எச்சரிக்கைகள் அனைத்தும் நமக்கும் உரியவைகளே. கசப்பான நம்முடைய பழைய வாழ்வை மதுரமாக மாற்றிய தேவனை நாம் மறந்து விடக்கூடாது. அதற்கான எச்சரிப்புக்கள் இதோ:-
.
நீங்கள் நல்ல வீடுகளை கட்டி குடியிருக்கும் போதும், புசித்து திருப்தியாகும்போதும் வறுமையிலிருந்து அதிசயமாய் நடத்தி வந்த தேவனை மறவாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
.
பிரச்சனையிலிருந்து வியாதியிலிருந்து விடுதலை பெற்றவுடன் தேவனை மறந்து விடாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
.
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தேவ சமுகத்தில் விழுந்து கிடந்த நீங்கள் அது சிறப்பாய் அமைந்தவுடன் தேவனை மற்ந்து விடாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
.
உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையும், பிள்ளைகளும் இருக்கும்போதும், கஷ்டங்களின்றி எல்லாம் நலமாய் இருக்கும்போதும் தேவனிடம் ஜெபிக்க ஒன்றுமில்லை என்று எண்ணி அவரை மறக்காதபடிக்கு எச்சரிக்கையிருங்கள்.
.
உங்கள் கடன் பிரச்சனையில் தேவனை இறுக பற்றி கொண்ட நீங்கள் பிரச்சனை மாறியவுடன் அவரை மறந்து விடாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள்.
.
வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்துடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, ஜெபித்து, விசா கிடைத்து வெளிநாடு சென்றவுடன் உங்களை அங்கு கொண்டு சென்ற தேவனை மறந்து விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
.
அநேகர் தங்கள் பிரச்சனைகளை தங்கள் சபை போதகரிடம் சொல்லி, அவர் விடாமல் அதற்காக ஜெபித்து, தேவனிடம் மன்றாடி, அவர்களுடைய தேவைகளை பெற்று தந்தவுடன், சபைக்கு செல்வதை மறந்து, சுய இஷ்டத்திற்கு வாழ்ந்து, தேவனை மறந்து விடாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள்.
.
பிரியமானவர்களே, தேவன் நமக்குத்தரும் ஆசீர்வாதங்களும் அவரையே மறக்க செய்யும் ஆபத்தில் கொணடு வந்து விட்டுவிடக்கூடும். ஆகவே நம் வீடு சகல வஸ்துக்களினாலும் நிறைந்திருக்கும்போதும், மனதிற்கு எல்லாம் ரம்மியமாயிருக்கும்போதும், இவையெல்லாவற்றையும் நாம் அனுபவிக்கும்படி அனுக்கிரகம் செய்த தேவனை மறந்து விடாதபடி கவனமாயிருப்போமானால், ஆசீர்வாமான சூழ்நிலையானாலும், ஆசீர்வாத குறைச்சல் போல தோன்றும் சூழ்நிலையானாலும் தேவனுடைய அன்பை விட்டு எவரும் நம்மை பிரித்து விட முடியாது. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை நாம் நம் உயர்வில் மறந்து விடவே கூடாது. நம்முடைய பழைய நிலையை நாம் மறந்து, தற்போது இருக்கும் உயர் நிலையை பெருமையாய் நினைத்து கொண்டு தேவனுக்கு நன்றி செலுத்தாமற் போவோமானால், நம்மை விட மோசமானவர்கள் யாரும் இருக்க முடியாது. தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களுக்காக அவரை எப்போதும் துதிப்போம். ஐசுவரியங்களின் மேல் நம் எண்ணத்தையும், கவனத்தையும் செலுத்தாமல், தேவனை துதிப்பதில் நம் கவனத்தையும், எண்ணத்தையும் செலவிடுவோம். அப்போது கர்த்தர் இன்னும் நம்மை அதிகமாய் உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!
.
பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே .. இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும்
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே
...
யாருக்காய் வாழ்கிறாய் நீ? இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம் யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இயேசுவுக்காய் வாழ்ந்திடு நீ இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம் இயேசுவுக்காய் வாழ்ந்திடு; நீ
|