பாவ அறிக்கை

பாவ அறிக்கை
நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. – (1 யோவான் 1:8).

ஒரு நாட்டின் இளவரசன் தன்னுடைய பிறந்த நாளன்று ஒவ்வொரு வருடமும் சிறைச்சாலைக்கு சென்று யாராவது ஒரு கைதியை விடுதலையாக்குவது வழக்கம். ஒரு தடவை அப்படி அவர் சிறைச்சாலைக்குள் நுழைந்து ஒவ்வொரு கைதியுடனும் பேசி கொண்டு வந்தார். ஏறக்குறைய எல்லா கைதிகளும் தாங்கள் நிரபராதி என்றும் எங்களை அநியாயமாக சிறையிலடைத்து விட்டார்கள் என்றும் இளவரசனிடம் முறையிட்டார்கள். ஆனால் ஒரே ஒரு கைதி மாத்திரம் தான் குற்றவாளிதான் என்றும், தனக்கு கிடைத்திருக்கும் தண்டனை நியாயமே என்றும் இளவரசனிடம் கூறினான். இதை கேட்ட இளவரசன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து அறிக்கையிட்ட அந்த கைதியை உடனே விடுதலை செய்யும்படியாக கட்டளையிட்டான்.
,
நாமும் நமது பாவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் அவற்றை ஆண்டவரது சமுகத்தில் அறிக்கை செய்ய வேண்டும் வேதம் கூறுகிறது, தேவன், ‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’ (9ம் வசனம்) என்று கூறுகிறது. இதில் எல்லா அநியாயம் என்பது நாம் செய்துள்ள சிறிய பாவங்களிலிருந்து, கொலை கொள்ளை விபச்சாரம் வேசித்தனம் போன்ற பெரிய பெரிய பாவங்களையும் குறிக்கும் இந்த வசனத்தை விசுவாசிப்பவர்களுக்கு குற்றவுணர்விலிருந்து தேவன் அவர்களை விடுவித்து இரட்சிப்பின் சந்தோஷத்தை கொடுப்பது நிச்சயம். பாவ மன்னிப்பின் நிச்சயம் நமது உணர்ச்சியை சார்ந்து இருப்பதை விட தேவனுடைய வசனத்தின் மேல் இருப்பது சிறந்தது
,
நாம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுவதில் உண்மையாயிருப்போமானால், ஆண்டவர் இதை மன்னிப்பதிலும் உண்மையாயிருப்பார். உதாரணமாக தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன் என பெயர் பெற்ற தாவீது பத்சேபாளுடன் பாவத்தில் விழுந்தவுடன் தேவனிடம் மனம் கசந்து அழுது தன் பாவத்தை அறிக்கையிடுகிறார். தேவனும் அதை மன்னித்து அவரை தம் பிள்ளையாய் ஏற்று கொள்கிறார். இன்று நாம் தாவீதை குறித்து வேதத்தில் வாசிக்கும்போதோ அல்லது பிரசங்கத்தில் கேட்கும்போதோ அவரை ஒரு குற்றவாளியாக காண்கிறோமா? இல்லவே இல்லையல்லவா? இயேசுகிறிஸ்துவும் தாவீதின் குமாரன் என்றே இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
,
பிரியமானவர்களே, உங்கள் உள்ளத்தை அப்படியே தேவனிடம் திறந்து காண்பித்து விடுங்க்ள. அதில் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம். அவர் நம் உள்ளிந்திரியங்களை அறிந்தவராய் இருந்தாலும், நாமாகவே முன்வந்து நமது பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறார். நாம் நூற்றுக்கு நூறு நம் பாவங்களை அறிக்கையிட்டால், அவரும் நம்மை நூற்றுக்கு நூறு மன்னித்து விடுவார்.
,
சிலருடைய வாழ்வில் அறிக்கை செய்யாத பாவம் என்று சில பாவங்கள் இருக்கும். அதை தேவனிடம் அவர்கள் அறிக்கை செய்யாமல் இருப்பார்களானால், அவர்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ள முடியாது. நாம் முற்றிலும் அவரிடம் நம் உள்ளத்தை திறந்து கொடுத்து, ‘என் பாவங்களை மன்னியும் தகப்பனே’ என்று நாம் செய்த எல்லா பாவங்களையும் அறிக்கை செய்து விட்டு விடும்போது, அவரிடத்திலிருந்து இரக்கத்தை பெற்று, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும் பெற்று கொள்கிறோம். அப்படி அறிக்கை செய்து விட்டுவிடும்போது, ‘அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்’ (சங்கீதம் 103:10-12) என்ற கர்த்தருடைய அற்புதமான வாக்குதத்தங்கள் நம் வாழ்வில் நிறைவேறும். பாவத்தை அறிக்கை செய்து அவற்றை விட்டுவிடுவோமா! ‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’! ஆமென் அல்லேலூயா!
,
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
.,.
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்கள் பாவங்களை உம்மிடத்தில் அறிக்கையிடுகிறார்களோ, அவர்களின் பாவங்கள் மன்னித்து, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீர் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு விலக்குவதற்காக உமக்கு நன்றி. பாதியாக, அரைகுறையாக அறிக்கை செய்யாதபடி, முற்றிலுமாய் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உம்மிடத்தில் இரக்கம் பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.