தேவன் தங்கும் ஆலயம்

தேவன் தங்கும் ஆலயம்
….
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். – (அப்போஸ்தலர் 7:48).

பண்டைய காலம் தொட்டு, இன்று வரையுள்ள பல்வேறு மதங்களின் சரித்திரத்தை பார்ப்போமானால், ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புகழ் பெற்ற கோவில் அல்லது கட்டிடங்கள் இருந்தததை காணலாம். ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் புகழை உலகம் அறிய வேண்டுமெனப்பதற்காக பெரிய பெரிய கோவில்களை கட்டடினர். இதில் போட்டியும் நிலவியது. ஆனால் மெய்யான தேவன் தமக்கொரு ஆலயத்தை கட்ட சொன்னது எவ்வளவு பெரிய இடத்தில் தெரியுமா? யாத்திராகமம் புத்தகத்திலே தனக்கு ஒரு ஆசரிப்பு கூடாரத்தை கட்டும்படி மோசேக்கு கட்டளையிடுகிறார். ஆசாரியர்கள் பலி செலுத்தவும், தூப வர்க்கமாகிய ஜெபங்களை ஏறெடுக்கவும் அமைக்கப்பட்ட ஆசரிப்பு கூடார்தின் மொத்த நீளம் 45 அடி, அகலம் 15 அடி மட்டுமே. இதனருகே பலிபீடம் உண்டு. இவைகளை சுற்றி திரைச்சீலையினால் வேலி போல அமைக்கப்பட்டிருக்கும். வானாதி வானங்களும் கொள்ளாத தேவன் தமக்கு கட்ட சொன்ன ஆலயம் இதுவே.
.
பின்நாட்களில் சாலமோன் தேவனுக்கென்று பெரிய ஆலயமொன்றை கட்டினதை அறிவோம். வேதத்தை நன்றாக வாசித்து பார்ப்பீர்களென்றால் தேவன் தமக்காக ஆலயத்தை கட்ட சொல்லவில்லை. மாறாக தாவீதிற்கும், சாலமோனுக்கும் விருப்பமாய் இருந்த அந்த பணியை தேவன் அனுமதித்தார் என்பதே உண்மையாகும். ஆம், அது தேவனுடைய பூரண சித்தமல்ல, தேவனால் அனுமதிக்கப்பட்ட காரியமே! அந்த ஆலயத்தை எதிரி ராஜாக்கள் அநேக முறை உடைத்து நொறுக்கியதை அறிவோம்.
.
இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியதென்ன? இந்நாட்களில் சபைபோதகர்களுக்குள் யார் பெரிய சபையை கட்டுகிறார்கள் என்ற போட்டி நிலவுகிறது. சுவிஷேகர்ககளில் பலர் தங்கள் ஸ்தாபனத்தில்தான் பிறர் வியக்கத்தக்க பெரிய கட்டிடங்கள் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இந்த சிந்தை வேதத்திற்கு விரோதமானது.
.
புதிய ஏற்பாட்டிலே ‘எனக்கொன்று பெரிய கட்டிடங்களை கட்டி என் நாமத்தை மகிமைப்படுத்துங்கள்’ என்று கர்த்தர் எங்கும் கூறவில்லை. மாறாக தாழ்மையுள்ளவர்களிடத்தில் வாசமாயிருப்பேன்’ என்றே கூறுகிறார். ஆயிரம் பேர் கூடக்கூடிய ஒரு பெரிய சபையை விட 50 பேர் கூடக்கூடிய சபைகளே சிறந்தது. ஏனெனில் சிறு குழுவாக இருந்தால் விசுவாசிகளை போதகர் கரிசனையோடு நடத்த முடியும். ஆதி திருச்சபை விசுவாசிகள் வீடுகளில்தான் கூடினார்கள் என்று அப்போஸ்தலரில் வாசிக்கிறோம்
.
பிரியமானவர்களே, அளவை வைத்து ஆவிக்குரிய வாழ்வை அளவிடாதிருங்கள். ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கூடும் ஆலயங்களில் ஒருவேளை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு விசுவாசியையும் தனித்தனியே சந்தித்து, அவர்களின் தேவைகளுக்காக ஜெபித்து, அவர்களை தொடர்ந்து கர்த்தருக்குள் வழிநடத்துவது என்பது கடினமான காரியமாக இருக்கலாம்.
.
உங்கள் காணிக்கைகளை புகழுக்காக கட்டப்படும் கட்டிட திட்டங்களுக்கு கொடுத்து வீணாக்காதீர்கள். நடைமுறைக்கு பிரயோஜனமான ஒரு கட்டிடத்திற்கு காணிக்கை கொடுப்பதில் தவறில்லை. கட்டிட திட்டங்களுக்கு கொடுத்ததினால் எனக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்பதற்காக காணிக்கை அனுப்பாதீர்கள். தேவ சிந்தைக்கும், உலக சிந்தைக்கும் உள்ள வித்தியாசத்தை நிதானித்து அறிந்து பின் உதவி செய்யுங்கள். அல்லேலூயா!
.
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
...
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே
...
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தேவன் மனிதர்கள் கட்டும் பெரிய பெரிய ஆலயங்களில் வாசமாயிருப்பதை காட்டிலும், தம் ஜனத்தாரின் மத்தியில் வாசம் செய்வதையே விரும்புகிறவராய் இருக்கிறபடியால் உம்மை துதிக்கிறோம். சிறிய கூட்டமாயிருந்தாலும், உண்மையுள்ளவர்களாக, தேவனை உண்மையாய் தொழுது கொள்ளுகிறவர்களாக, தேவன் விரும்பி வாசம் செய்யும் தேவ ஆலயமாக இருக்கும்படிக்கு கிருபை செய்யும். பெயருக்காக புகழுக்காக கட்டப்படும் கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபடி, உம்மை உயர்த்துகிற சிறுசபைகளில் உண்மையாயிருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.