தசமபாகம்

தசமபாகம்
….
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். – (மல்கியா 3:10).
 
ஒரு முறை ஒரு வாலிபன் தன் போதகரிடம் தேவன் தனக்கு ஒரு வேலை தந்தால் தனக்கு வரும் சம்பாத்தியத்தில் எல்லாம் தசமபாகம் தருவதாக பொருத்தனை பண்ணிக் கொண்டான். அதன்படி அவனுக்கு வேலை கிடைத்து முதல் வாரம் பத்து ரூபாய் சம்பளத்தின்படி 1 ரூபாய் தசமபாகம் தந்தான். அடுத்த வாரம் 7 ரூபாய் கொடுத்தான். ஒரு மாதத்தில் 10 ரூபாய் கொடுத்தான் அடுத்த மாதம் அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்து, 100 ரூபாய் கொடுத்தான் இப்படி படிப்படியாக முன்னேறி 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டி வந்தது. அப்போது தனது போதகருக்கு போன் பண்ணி, ‘வாருங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும்’ என்று அழைத்தான். அவர் வந்தபோது, ‘நான் உங்களோடு ஜெபித்த போது; தசமபாகம்கொடுப்பதாக பொருத்தனை பண்ணினேன்’. அதிலிருந்து எப்படி மீள்வது? என்றுக் கேட்டான். அதற்கு போதகர் ‘எதற்கு மீள வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘நான் முதலில் 1 ருபாய் கொடுத்தேன். பின் 10 ரூபாய் கொடுத்தேன் அது சரி, இப்போதோ 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கொடுத்து கட்டுப்படியாகாது’ என்று கூறினான்.
.
அதற்கு போதகர், ‘ஒரு முறை பொருத்தனை பண்ணினால் அதை விடுவது ஆபத்தானது. வேண்டுமென்றால் நாம் ஒன்று செய்யலாம், கர்த்தரை மீண்டும் உன்னை பழைய நிலைக்கே கொண்டுபோய் விடச் சொல்லலாம்’ என்றார். அந்த வாலிபன் வாயடைத்து நின்றான்.
.
தசமபாகம் கொடுப்பதில் நாம் எப்படி இருக்கிறோம்? கர்த்தருக்கு உண்மையாக இருக்கிறோமா? சிலருக்கு வெளிநாடுகளில் சம்பாதித்து அப்படியே கை நிறைய பணம் போகிறதே என்கிற கவலை. இத்தனைக்கும் அவர்கள் கொடுப்பது பத்தில் ஒரு பங்குதான். என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். கடனே வாங்காமல் எல்லா ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். பண விஷயத்தில் மாத்திரம் அல்ல, உடல் சுகம் மற்றும் எல்லா வித்திலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. தசமபாகம் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் ஏழு மடங்கு ஆசீர்வாதத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு காணலாம்:
.
1. நமது இருதயத்தை கர்த்தருடைய சித்தத்தை செய்யும்படி ஆசீர்வதிக்கிறது.
.
2. நமது வாழ்க்கையை தேவகிருபையினால் நாம் எண்ண முடியாத உயரத்திற்கு கொண்டு வருகிறது.
.
3. நமது கைகளை கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு தயாராக்குகிறது.
.
4. நமது சிந்தனையில் கர்த்தருக்கென்று சரியான காரியத்தைச் செய்தோம் என்கிற திருப்தியை தருகிறது.
.
5. கர்த்தரை கனப்படுத்தியதால் மீதமிருக்கிற ஒன்பது பகுதிகளும் நமக்கு ஆசீர்வாதமாக்கப்படுகிறது.
.
6. தனிப்பட்ட ஊழியருக்கு தங்களுடைய ஊழியத்தை தடையின்று நடத்தப்பட ஆசீர்வாதமாகிறது.
.
7. சபையானது இன்னும் அதிக அளவில் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற உதவுகிறது.
.
இப்படி ஆசீர்வாதங்களைப் பெற காரணமாயிருக்கிற தசமபாகத்தை கர்த்தருக்கு தொடர்ந்து செலுத்துவோம். கர்த்தர் இதன் மூலம் கனப்படுகிறார். நம்மை ஆசீர்வதிப்பார்.
.
ஜெபம்
எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுடைய தசமபாகத்தை உமக்கு தடையின்றி கொடுக்க எங்கள் இருதயங்களை ஏவியருளும். அவற்றை உமது நாம் மகிமைக்காக பயன்படுத்தும். இதன்மூலம் நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் எங்களை ஆசீவதிப்பதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.