எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். – (சங்கீதம் 121:1-2).
. ஒரு சர்வ தேச மிஷனெரி ஸ்தாபனத்தினர், தென் ஆப்ரிக்க தேசத்தில் ஒரு வேதாகம கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டனர். அதற்காக அங்கு ஒரு பெரிய இடத்தை குறித்து, அதை வாங்க வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதற்காக ஒரு மிஷனெரியை அனுப்பியிருந்தனர். அந்த இடம் ஒரு கிராமத்தின் அளவு பெரியதாயும், சுமார் ஏழாயிரம் பேர் தங்கக்கூடிய பெரிய விஸ்தாரமான கட்டிடங்களாலும் நிறைந்திருந்தது.
.
அதை சுற்றி பார்க்க அந்த மிஷனெரியும், அவரது நண்பரும் சென்று நடக்க ஆரம்பித்தனர். கொஞ்ச நேரம் நடந்து எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோமென்று அவர்கள் பார்த்த போது, ஒரு கிலோ மீட்டர் தூரமே நடந்திருந்தனர். அதற்குள் களைப்பும் சோர்வும் ஏற்பட்டு, ‘ஐயோ இவ்வளவு பெரிய இடத்தை எப்படி சுற்றி பார்க்கபோகிறோம்’ என்ற தொய்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. ‘இவ்வளவு பெரிய இடத்தை எப்படி வாங்குவது? அப்படியே வாங்கினாலும், எப்படி இதை நிர்வகிப்பது? இங்கு தங்கும் மாணவர்களுக்கென எவ்வளவு நாற்காலிகள், மேஜைகள், கட்டில்கள் வாங்குவது? இதெல்லாம் சாத்தியமா’ என்று அவர் எண்ண ஆரம்பித்தார்.
.
அவர் அப்படி சிந்திப்பதை கண்ட நண்பர், ‘என்னிடத்தில் பெரிய வயல்களுக்கு பூச்சு மருந்து அடிக்கும் சிறிய ரக விமானம் ஒன்றுள்ளது நாம் அதில் சென்று இந்த இடத்தை காண்போம்’ என்று கூறினார். ஆகவே அதன்படி அல்ட்ரா லைட் ரக சிறிய விமானத்தில் பறந்து சென்று, அந்த இடத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். மேலே செல்ல செல்ல கீழே உள்ள அந்த பெரிய கட்டிடங்கள், மைதானங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக தோன்றலாயிற்று. இதை கண்டவுடன் அவருக்குள் புத்துணர்ச்சியும், விசுவாசமும் பெருகலாயிற்று.
.
இந்த பெரிய இடம் பரலோகத்தின் தேவனுடைய பார்வையில் ஒரு சிறிய இடம் தான். இதை வாங்கவும், பயன்படுத்தவும், நிர்வகிக்கவும் தேவனுடைய பெலத்தினால் சுலபம் என்று அவருக்குள் விசுவாச எண்ணம் பெருகிற்று. தரை மட்டத்திலிந்து அல்லது மனுஷீக எண்ணத்தில் மிகப்பெரியதாக தோன்றிய அந்த இடம் விமானத்திலிருந்து பார்த்த போது, சிறியதாக தோன்றினது. அப்படியென்றால் பரலோகத்திலிருந்து பார்த்தால் இன்னும் எத்தனை சிறியதாயிருக்கும் என யோசித்து பார்த்தார். அந்த விசுவாசத்தினால் அந்த இடம் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கும் வேதாகம கல்லூரியாக விளங்குகிறது.
.
பிரியமானவர்களே, உங்கள் வாழ்வில் வரும் பிரச்சனைகள் ஒருவேளை உங்கள் பார்வைக்கு பெரியதாக தோன்றலாம், ‘ஐயோ இவ்வளவு பெரிய கடன், இத்தனை பெரிய வியாதி! இவையெல்லாம் மாறும் என நம்ப முடியாத அளவிற்கு பெரியதாயிருக்கிறதே’ என அங்கலாய்க்கலாம். ஆனால் அத்தனை பெரியதாக நமக்கு தோன்றுகிற காரியங்கள் எல்லாம் நம்முடைய பரலோக தேவனுக்கு முன்பாக மிக சிறியதுதான். எப்பொழுதெல்லாம் நம் உள்ளம் பிரச்சனையின் பூதாகார தன்மையை பார்த்து மயங்குகிறதோ, அப்பொழுதெல்லாம், தேவனை நோக்கி பார்ப்போம். அவரோடு ஆவியில் இணைந்து இருக்கும்போது, அவருடைய சிங்காசனத்திலிருந்து நம் பிரச்சனை எப்படிப்பட்டதென்று நமக்கு காண்பிப்பார். பெரிய மலையை போன்ற பிரச்சனைகள் எல்லாம் பனியை போல விலகி மாறி போகிறதை காண்போம். அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்பதை உணர்வோம். நமக்கு ஒத்தாசை வரும் பர்வதமாகிய அவரையே நோக்கி பார்ப்போம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்தே நமக்கு ஒத்தாசை வரும். ஆமென் அல்லேலூயா!
.
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்களை ஏறெடுப்பேன்
.
|