தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். – (யோவான் 3:16).
. முதலாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஒரு தகப்பன் தன் மகனை கூட்டி கொண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு மகன் போருக்கு சென்றிருப்பதை குறிக்கும் வகையில் அடையாளமாக ஒரு நட்சத்திரத்தை மாட்டி இருந்தார்கள். அந்த மகன் தன் தகப்பனாரிடம், ஏன் அப்பா, இந்த நட்சத்திரத்தை மாட்டி வைத்திருக்கிறார்கள் என்று கேட்டான். அதற்கு தகப்பன் அதன் முக்கியத்தை அவனுக்கு விளக்கினார்.
.
அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எந்த வீட்டில் நட்சத்திரம் தொங்கி கொண்டிருந்ததோ, அந்த வீட்டை கண்டவுடன் அந்த சிறுவன் நின்று, தன் கைகளை உற்சாகமாய் தட்டி நடந்து வந்து கொண்டிருந்தான். திடீரென்று வானத்தில் இருந்த ஒரு நட்சத்திரத்தை காட்டி, ‘அப்பா, அப்பா இங்க பாருங்க, தேவனும் தம்முடைய மகனை அனுப்பியிருக்கிறார்’ என்று தன் கரங்களை உற்சாகமாக தட்டினான்.
.
அநேகர் தங்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை கொடுத்தார்கள். ஆனால் தேவனோ இந்த உலகத்திற்காக தம்முடைய ஒரே பேறான குமாரனையே இரட்சிக்கும்படியாக கொடுத்து விட்டார். அல்லேலூயா!
.
வேறு எந்த மதத்திலும் தம் மகனை உலகத்தில் பாடுகளின் வழியாக சிலுவை மரணத்தின் வழியாக உலகத்திற்கு இரட்சிப்பை கொடுத்ததாக கூறப்படவில்லை. வேறு யாரும் பாவிகளுக்காக தங்களை ஒப்புக்கொடுத்ததாகவும் எந்த வேதத்திலும் இல்லை.
.
ஒரு தகப்பனுக்காகவது, தாய்க்காவது, தங்கள் மகனை தங்கள் நாட்டிற்காக ஒப்புகொடுப்பதும் போருக்கு அனுப்பி வைப்பதும் மிகவும் கடினமான காரியம் என்று நாம் யாவரும் அறிவோம். தங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் கண்களை போல. நம் தேவனுக்கும் தமது ஒரே பேறான குமாரனை அனுப்புவது மிகவும் எளிதாயிருந்திருக்குமா? இல்லை, அவருக்கும் அது மிகவும் கடினமான காரியமே! அதுவும், அவர் இந்த உலகத்தில் செய்த மூன்றரை வருட ஊழியத்தில் நன்மையான காரியத்தை தவிர வேறு எதையும் செய்யாத போதும், அவரை இகழ்ந்து பேசியும், அந்த ஊழியத்தின் முடிவில், அவரை துன்புறுத்தி, சாட்டைகளினால் அடித்து, பாரமான சிலுவையை அவர் சுமந்து, கொல்கதா மலையின் மேல் ஏற வைத்து, அவரை சிலுவையில் அவருடைய கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்த வைப்பார்கள் என்று அறிந்திருந்தும் அவரை இந்த பாழ் உலகத்திற்கு இரட்சகராக அனுப்பினார் என்றால் அந்த தியாகம் நாம் எத்தனை வரிகளில் எழுதினாலும் அது அடங்காதது. அந்த தியாகத்தை எந்த வார்த்தைகளாலும் சொல்லி முடியாதது. நம் பிள்ளைகள் பாடுபடுவார்கள் என்று அறிந்தால், நாம் அந்த இடத்திற்கு நம் பிள்ளையை அனுப்பி வைப்போமா? ஒருக்காலும் அனுப்பி வைக்கமாட்டோம். ஆனால், பரம தகப்பனை பாருங்கள், அவர் நம் மேல் வைத்த அன்பினால் அப்படி செய்தார் என்று வேதம் கூறுகிறது.
.
அவர் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று வாசிக்கிறோம். தம் குமாரனை உபத்திரவப்படுத்த போகிற உலகத்தில், அவரை அனுப்பி வைத்ததினால், அவர் நம் மேல் வைத்த அன்பை விளங்க பண்ணுகிறார். அந்த அன்புக்கு நாம் எவ்வளவேனும் பாத்திரர்கள் அல்ல, அல்லவே அல்ல! பாவத்திலும், சாபத்திலும், கர்த்தருக்கு துரோகம் செய்பவர்களும், அவரை விட்டு தூரம் போகிறவர்களுமாகிய நமக்காகவே அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பி வைத்தார். எதற்காக, அவரை விசுவாசிக்கிறவர்கள் யாரும் கெட்டு போகாமல், அதாவது நரகத்திற்கு செல்லாமல், நித்திய ஜீவனை பெற்று கொள்ளும்படியாகவே அவரை நமக்காக அனுப்பினார். அல்லேலூயா!
.
நம் ஆத்துமா அத்தனை விலையேறப்பெற்றது. நாம் அவரை விசுவாசியாவிட்டால், நித்திய நரகம் என்பது அவருக்கு தெரியும். நாம் நரகத்தில் சென்று நித்திய நித்தியமாய் அவியாத அக்கினியில் தவிக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தமது ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பினார். நாம் அதை அறிந்திருக்கிறோமா? உணர்ந்திருக்கிறோமா? இயேசுகிறிஸ்துவின் சிலுவையில் சிந்திய அந்த விலையேறப்பெற்ற இரத்தமே, நம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்க வல்லது. நம் பாவங்களை மன்னிக்கவல்லது. வேறு எந்த பரிகாரமும், எந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்வதும், புண்ணிய நதியில் குளிப்பதும் பாவத்தை போக்காது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே எந்த பாவத்தையும் போக்க வல்லது. அவரால் கழுவ முடியாத பாவம் எதுவும் இல்லை. அவரால் மன்னிக்க முடியாத பாவமும் எதுவும் இல்லை. நாம் செய்யும் ஒரு சிறிய ஜெபமே நம்முடைய பாவத்தை கழுவி, நமக்கு நித்திய ஜீவனை தரவல்லது. தேவன் அத்தனை எளிதாக வைத்த இரட்சிப்பை சாத்தான் பெரிய பெரிய நம்மால் செய்ய முடியாத பரிகாரங்களால் முடியும் என்று நம்ப வைக்கிறான். அவனுடைய தந்திரங்களில் விழுந்துபோகாமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே இரட்சிப்பு உண்டு என்பதை உணர்ந்து, அவரிடத்தில் மன்னிப்பை பெற்று கொள்வோம். நித்திய ஜீவனை பெற்று கொள்வோம். அல்லேலூயா!
.
இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் இரட்சிப்பில்லை
கூப்பிடு இயேசு இயேசு என்று – உன்
குறையெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்
|