என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. – (பிலிப்பியர் 4:13).
. ஒருகிளென் கன்னிங்காம் (Glen Cunningham) என்னும் எட்டு வயது சிறுவன் தினமும் தான் படிக்கும் பள்ளிக்கு மற்ற எல்லாரையும் விட சீக்கிரமாய் வந்து, குளிர்காலத்தில் தான் படிக்கும் வகுப்பை மண்ணெண்னை அடுப்பை சூடுப்படுத்தி, மற்றவர்கள் வரும்போது கதகதப்பாய் வைப்பது வழக்கம். அப்படி அவன் ஒரு நாள் செய்யும்போது, யாரோ மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியிருந்தபடியால், நெருப்பு பட்டவுடன் அது வெடித்து, அந்த பள்ளியே பற்றி எரிய ஆரம்பித்தது. பாதி உயிருடன் மூச்சுப்பேச்சில்லாமல் இருந்த கிளெனை மற்றவர்கள் வெளியில் எடுத்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். . வைத்தியர்கள் அங்கு அவனை பார்த்து, இடுப்புக்கு கீழே முற்றிலும் எரிந்து போய் விட்டது. ஆகவே இவன் உயிரோடு இருப்பதிலும், சாவதே மேல், அப்படி உயிரோடு இருந்தாலும் அவனால் எழுந்து நடக்கவே முடியாது, ஆகவே காலை வெட்டி எடுத்து விடலாம் என்று அவனுடைய தாயாரிடம் கூறிவிட்டார்கள். அதற்கு அவனுடைய தாயார் காலை வெட்டி எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை. அதை கேட்டுக் கொண்டிருந்த கிளெனுக்கு சாவது பிடிக்கவில்லை. . அவனுக்குள் ஒரு எண்ணம் வந்தது, ‘நான் ஒரு நாளும் இப்படி படுத்துக் கொண்டிருக்க போவதில்லை, நிச்சயமாக நடக்க போகிறேன்’ என்று தீர்மானித்தவனாக, இடுப்புக்கு கீழ் செயலிழந்த தன் கால்களை நோக்கி பார்த்தான். அவனுடைய தீர்மானம் உறுதியாக இருந்தபடியால் சீக்கிரமாய் குணமாகி வீடு வந்து சேர்ந்தான். . பின் அவனது காலை தினமும் நீவிவிட்டு, அழுத்தி தேய்த்து, அவனுடைய தாயார் பின், அவனை வீல் சேரில் உட்கார வைத்து அவர்கள் வீட்டை சுற்றி வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி அவன் செல்லும்போது, வீல் சேரிலிருந்து தன்னை கீழே விழச் செய்து, தன் கால்களை தேய்த்தபடி அவன் வீட்டை சுற்றியுள்ள வேலியைச் சுற்றிலும் செல்ல ஆரம்பித்தான். தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தான். எப்படியாவது நடக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் வந்தது. அவன் அப்படி செய்ய செய்ய அவனுடைய கால்களுக்குள் சக்தி வந்து, அவனை நிற்க வைத்தது. முதலில் நிதானமாக நடந்து, பின் வேகமாக நடந்து, அதன்பின் அவன் ஓட ஆரம்பித்தான். அவன் பள்ளிக்கு ஓடியே செல்ல ஆரம்பித்தான். அதன்பின் அவன் காலேஜில் சேர்ந்தபோது, ஒரு ஓடுகின்ற குழுவையே ஆரம்பித்தான். . 1934 ஜுன் மாதம் 16ம் தேதி ஒரு மைல் தூரத்தை 4:06.8 நிமிடங்களில் வேகமாக ஓடி, உலக சாதனையையே முறியடித்தான். இடுப்புக்கு கீழே செயலிழந்து போன ஒருவரால் விடாத தன்னம்பிக்கையுடன் ஓடி, உலக சாதனையையே முறியடிக்க முடியும் என்றால், அது நிச்சயம் அவருக்குள் இருந்து வைராக்கியத்தையும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும் குறிக்கிறது. . ஒரு சாதாரண மனிதனால் இப்படி செய்ய முடியும் என்றால், எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம் பக்கத்தில் இருக்கும்போது, நம்மால் இதைவிட பெரிய காரியங்களை செய்ய முடியுமல்லவா? நாம் நமக்கு சிறிய தலைவலி வந்தாலே சோர்ந்துப் போய் விடுகிறோம். அதை விரட்டவே வாழ்நாள் எல்லாம் போதுமானதாக இருக்கிறது. நாம் எப்படி பவுலைப் போல உலகத்தை கலக்குகிறவர்களாக முடியும்? . நம்முடைய எண்ணம், நம்முடைய தீர்மானம், நம்முடைய தன்னம்பிக்கை என்று நம்மை முதலாவது வைத்தோமானால், நாம் ஒருவேளை தோல்வியையே தழுவ வேண்டி வரும். ஆனால் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்று பவுலைப்போல கர்த்தரை சார்ந்துக் கொள்வோமானால், நிச்சயமாகவே நம்மாலும் பெரிய காரியங்களை செய்ய முடியும். . நெகேமியா எருசலேமின் அலங்கத்தை கட்ட ஆரம்பித்தபோது, ‘நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்’(நெகேமியா 4:1-3) என்று நெகேமியாவின் எதிரிகள் அவர்கள் அலங்கம் கட்டுவதை கண்டு பொறாமைக் கொண்டு, கேலி செய்தார்கள். ஆனால் ‘அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது’ (நெகேமியா 6:15).தேவன் மேல் உள்ள வைராக்கியமும், கர்த்தரை சார்ந்து அவர்கள் தங்கள் காரியத்தை செய்தபோது, அத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் 52 நாட்களுக்குள்ளாக அலங்கத்தை கட்டி முடிக்க தேவன் கிருபை செய்தார். . பிரியமானவர்களே, மற்றவர்கள் என்னதான் கேலி செய்தாலும், நம்மை சலிப்படைய வைத்தாலும், சோர்வுற செய்தாலும் கர்த்தர் நம்மை ஒரு காரியத்தை செய்யும்படி அழைத்திருந்தால் அவரை நாம் சார்ந்து செய்யும்போது, கேலியும் பரிகாசமும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நம்மைக் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை தேவன் நம்மைக் கொண்டே செய்து முடிக்க வைப்பார். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்று நாம் விசுவாசத்தோடு அறிக்கையிட்டு,அவரை சார்ந்து நாம் செய்யும்போது, அவர் நமக்கு வெற்றியை கட்டளையிடுவார். அப்படி கர்த்தருக்காக காரியங்களை செய்ய தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிர செய்வார் வெற்றி காணச் செய்வார்
. என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
|