இழந்ததை திரும்ப பெறுதல்

இழந்ததை திரும்ப பெறுதல்
…..
தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். – (1 சாமுவேல் 30:6-ன் பின்பாகம்).

தாவீது சவுல் தன்னை எப்படியாகிலும் கொன்றுபோடுவான் என்று பயந்து, பெலிஸ்தியரின் தேசமாகிய காத் என்னுமிடத்தில் ஆகீஸ் என்னும் ராஜாவினிடத்தில் தஞ்சம் புகுந்தான். அந்த இராஜா தாவீதின் மேல் நம்பிக்கை வைத்து, இஸ்ரவேலுக்கு விரோதமான யுத்தத்தில் அவனையும் பங்கு பெறும்படி அழைத்தான். தாவீதும் அதற்கு ஒப்புக்கொண்டு, இருக்கையில், ஆகீஸ் ராஜாவின் பிரபுக்கள், அவன் தங்களோடு வரக்கூடாது என்று கோபப்பட்டபடியால், ஆகீஸ் ராஜா தாவீதை தங்களோடு போருக்கு வரவேண்டாம் என்று சொல்லி, அவனுடைய இடமாகிய சிக்லாகிற்கு திரும்ப போக சொன்னான்.
.
அதன்படி தாவீது சிக்லாகிற்கு தன்னுடைய போர் வீரர்களோடு, தங்கள் குடும்பத்திற்கு திரும்ப வந்தபோது, அந்தோ, அவர்களுடைய பிள்ளைகளும், மனைவிகளும் சிறைபிடித்து போகப்பட்டதையும், சிக்லாக் பட்டணம் கொள்ளையடிக்கப்பட்டு, அந்த பட்டணம் தீ வைக்கப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
.
இந்த இடத்தில் யோசித்து பார்ப்போம், ஒருவன் களைப்போடு தன் குடும்பத்திற்கும், பிள்ளைகளிடத்திற்கும் திரும்பி வரும்போது, அவர்கள் கொள்ளையடிக்கப்பட்டதோடு, மனைவியும், பிள்ளைகளும் சிறைபிடிக்கப்பட்டிருப்பார்களென்றால், அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஒருவனுக்கு அவனுடைய குடும்பம் தான் எல்லாவற்றிலும் பெரியது. அவன் யுத்த வீரனாயிருந்தாலும் சரி, அவன் சாதாரண தொழிலாளியாயிருந்தாலும், அவனுடைய குடும்பம் என்பது யாருக்கும் மிகவும் விசேஷித்த காரியமாகும். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (வசனம் 4) என்று வசனம் சொல்கிறது. அப்படியென்றால் அவர்களின் மனத்துயரம் எவ்வளவு என்று பாருங்கள்!
.
ஜனங்கள் எல்லாரும் தாவீதை கல்லெறியும்படி கற்களை எடுத்து கொண்டார்கள். தாவீது இவை எதையும் செய்யவில்லை என்றாலும், அவன் தான் காரணம் என்று தவறாக மற்ற மனிதர்கள் நினைத்து, அவன் மேல் கல்லெறியும்படி நினைத்தார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். தாவீதிற்கும் அவனுடைய மனைவிகள் பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்ற துயரம் அளவுக்கதிகமாகவே இருந்தது.
.
இங்கு விசேஷித்த தலைவனின் குணாதிசயத்தை பார்க்கிறோம். தாவீது அப்படியே மனம் உடைந்து போய் என்ன செய்வது என்று சோர்ந்து போய் விடவில்லை. அளவுக்கதிகமான துயரமும், துக்கமும் இருந்தாலும், தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான் (வசனம் 6). அல்லேலூயா! கர்த்தரை அண்டி கொண்டவர்களுக்கு பிரச்சனைகள் வரலாம், துன்பங்கள் வரலாம், மனம் உடைந்து போகும் அளவிற்கு துக்கங்கள் ஏற்படலாம். ஆனால் தாவீது தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்தி கொண்டது போல உண்மையான ஒரு கர்த்தரின் பிள்ளை சோர்ந்துபோய், ஒன்றுமில்லாமற் போய் விடாமல், நம்மை திடப்படுத்தி கொள்ள வேண்டும். தேவன் அதையே விரும்புகிறார். தாவீது ஒரு தலைவன் என்பதை அந்த இடத்தில் நிரூபித்தான்.
.
தாவீது பின் கர்த்தரிடம் போய் கேட்கிறான், நான் அவர்களை பின்தொடர்ந்து சென்றால், எனக்கு வெற்றி கிடைக்குமா என்று. இது மற்றொரு குணாதிசயம். நமக்கு பிரசச்னை என்றால், உடனே போன் போட்டு, பெரிய ஊழியக்காரர்களையோ, போதகர்களையோ கூப்பிட்டு, ஒரு அழுகை அழுதுவிட்டு, எனக்காக மன்றாடுங்கள் என்று கேட்கிறோம். தாவீது அந்த நிலையிலும், மனித உதவியை நாடாமல், தேவனை பற்றி கொண்டு, அவரிடம் கேட்கிறான். அப்போது கர்த்தர் சொல்கிறார், ‘நீ போ, எல்லாவற்றையும் திருப்பி கொள்வாய்’ என்று. உடனே அறுநூறு பேரோடு அவன் அந்த அமலேக்கியரிடம் போராடி எல்லாவற்றையும் திருப்பி கொள்ள போகிறான். பாதியில் நானூறு பேர் களைப்பினால் அவனோடு செல்ல முடியாமற் போகிறது. இருநூறு பேரோடு அவன் எப்படியாவது தங்கள் குடும்பங்களை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு அவர்களை அழைத்து கொண்டு போகிறான்.
.
அவர்கள் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில், ஒரு எகிப்தியன் அங்கு உயிர் போகும் நிலையில் இருப்பதை கண்டார்கள். அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, அத்திப்பழஅடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான் (வசனம் 11-12). அப்படி அவர்கள் மிகவும் துயரத்தோடும், மனைவி பிள்ளைகளை இழந்த துக்கத்திலும் செல்லும்போது, அந்த நிலையிலும். சாகக்கிடந்த ஒரு எகிப்தியனுக்கு உதவி செய்தததினால், அவன் உயிர் அவனுக்கு வந்தது. தாவீதின் மன இரக்கத்தை காட்டுகிறது.
.
அவன் அப்படி உதவி செய்ததினால், அந்த எகிப்தியன், அவர்களுக்கு அமலேக்கியர் இருந்த இடத்தை காட்டினான். அங்கு அமலேக்கியர் தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியை கொண்டாடி, குடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தபோது, தாவீது அவர்களை அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நாநூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்(வசனம் 19)
.
கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்தி கொண்ட தாவீது, படிப்படியாக அவன் செய்ய வேண்டியதை ஒழுங்காக செய்தான். இழந்து போன எல்லாவற்றையும் அவன் திரும்ப பெற்று கொண்டான். அப்பொழுது எத்தனை எத்தனை மகிழ்ச்சி இருந்திருக்கும் பாருங்கள்! அவர்கள் எல்லாவற்றையும் திருப்பி கொண்டு வந்த போது, அவைகளை கொண்டு வந்தவர்கள் இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
.
பிரியமானவர்களே, தாவீதை போல உங்களுக்கிருந்த எல்லாவற்றையும் சத்துரு கொள்ளை கொண்டு போனானோ? உங்கள் சுகத்தை கொள்ளை கொண்டு போனானோ? உங்கள் சொத்துக்களை கொள்ளை கொண்டு போனானோ? உங்கள் குடும்ப சந்தோஷத்தை கொள்ளை கொண்டு போனானோ? உங்களுக்கு பெலனில்லாமல் போகுமட்டும் கதறி அழுகிறேன் என்று சொல்கிறீர்களோ? மற்றவர்கள் உங்கள் மேல் காரணமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்களோ? தாவீதை போல கர்த்தருக்குள் உங்களை திடப்படுத்தி கொள்ளுங்கள். கர்த்தரிடம் போய் என்ன செய்வது என்று அவருடைய பாதத்தை பற்றி கொள்ளுங்கள். அவர் என்ன செய்வது என்று உங்களுக்கு கூறுவார். உங்களோடு மற்றவர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாய் இருந்தால் கர்த்தர் உங்களோடு கூட இருப்பார். நீங்கள் போய் சகலவற்றையும் திருப்பி கொள்வீர்கள். இழந்து போன எல்லாவற்றையும் தேவன் உங்களுக்கு திருப்பி தருவார். அன்று தாவீதிற்கு உதவின தேவன், இன்றும் மாறாதவராக இருக்கிறபடியால், நிச்சயமாக நீங்கள் இழந்து போன அனைத்தையும் பெற்று கொள்ள தேவன் கிருபை செய்வார். அவரை மாத்திரம் விடாமல் பற்றி கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!
.
கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்
..
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலை கண்ணீர் எல்லாம் மறைந்து விடும்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் தாவீது தான் இழந்து போன அனைத்தையும் திருப்பி பெற்று கொண்டது போல நாங்களும் எதை இழந்து போனோமோ அதை திருப்பி தர வல்லவர் என்பதை நாங்கள் உணர்ந்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. தாவீதை போல எங்களை திடப்படுத்தி கொள்ளவும், அவரை போல எந்த சூழ்நிலையிலும் உம்மை மாத்திரம் சார்ந்து கொண்டு, உம்மையே நோக்கி பார்த்து, ஜெயத்தை பெற்று கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.