அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். – (லூக்கா 6:12).
.
ஒரு விமானத்தில் ஆப்ரிக்க கண்டத்திலிருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு ஒரு பெரிய பெட்டியில் விஷ பாம்புகளை அடைத்து வைத்து எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதை அடைத்த மனிதன் அதை பூட்டுப் போட மறந்து விட்டான்.
.
விமானம் கீழே இருந்து மேலே எழும்பினபோது, பெட்டி திறந்து பாம்புகள் வெளிவர தொடங்கின. அது பயணிகள் இருக்கும் இடத்திற்கு வேகமாக ஊர்ந்து வர ஆரம்பித்தன. அதைக் கண்ட பயணிகள் சிலர் மயக்கமடைந்தனர். சிலர் அது மேலே வராதபடி உயரமான இடத்திற்கு செல்ல முயற்சித்தனர். பாம்புகளைப் பற்றி செய்தி விமான ஓட்டிக்கு தெரியப்படுத்தப்பட்டது. சிலரை பாம்பு கடித்து அவர்கள் உடனேயே மரித்தனர். விமான ஓட்டி மிகவும் பயந்தவராக, கண்ட்ரோல் அறையை அழைத்து, விஷயங்களை சொல்லி, ‘எங்கு தரையிறக்க வேண்டும்’ என்று பதட்டமாய் கேட்டார். கீழே இருந்த கண்ட்ரோலர், ‘கீழே இறக்க வேண்டாம், ஒரு நிமிடம் தாரும், நான் யோசிக்க வேண்டும்’ என்றார். ஒரு நிமிடம் என்பது ஒரு யுகமாக இருந்தது அவர்களுக்கு.
.
ஒரு நிமிடம் கழித்து அந்த கண்ட்ரோலர் ‘எவ்வளவு உயரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு விமானி, ‘4000 அடி உயரத்தில்’ என்றுக் கூறினார். கண்ட்ரோலர் ‘இன்னும் உயர போங்கள்’ என்றார். விமானி போயும் ஒன்றும் நடக்கவில்லை, ‘இன்னும் உயர இன்னும் உயர’ என்று என்று கட்டளைக் கொடுத்துக் கொண்டே இருந்தார் கண்ட்ரோலர். கடைசியாக மிக உயரத்தில் சென்றபோது, பாம்புகள் செயலிழந்துப் போயின. அதை ஒரு பொம்மையை தூக்குவதுப் போல தூக்க முடிந்தது. பயணிகளில் ஒருவர், ‘இந்த கருநாகம் என்னை எப்படி துரத்தியது, இப்போது அதை நான் எப்படி இலகுவாக தூக்குகிறேன்’ என்றார். எல்லா பாம்புகளையும் மீண்டும் பெட்டியில் போட்டு அடைத்தப்பின் பெரிய பூட்டுப் போடப்பட்டது. மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் காக்கப்பட்டார்கள்.
.
பிரியமானவர்களே சாத்தானின் வல்லமைகளுக்கு நாம் தப்ப வேண்டுமானால் நாம் உயர செல்லத்தான் வேண்டும். இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நாம் இந்த உலகத்தில் கீழே இருக்கும் காலம் வரைக்கும் நம்மை உபத்திரவத்திற்குள்ளும், சோதனைக்குள்ளும் உள்ளாக்கி பாழ்ப்படுத்திக் கொண்டேதான் இருப்பான். ஆனால் நாம் நம்; ஜெபத்தில் கர்த்தரை நோக்கி உயரே செல்ல செல்ல அவன் செயலிழந்துப் போவான். அவனுடைய தந்திரங்களும், அஸ்திரங்களும் தேவனை நோக்கி மேலே மேலே போகிறவர்களிடம் பலிப்பதில்லை.
.
அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் என்று வேத வாக்கியம் கூறுகிறது. அவர் கீழேயே இருந்து ஜெபிக்கலாமே, ஏன் மலைக்கு சென்றார்? அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல், இராத்திரி முழுவதும் தேவனை நோக்கி ஜெபித்து, பெலத்தின் மேல் பெலத்தை பெற்றுக் கொண்டார்.
.
‘நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ’ (ஆதியாகமம் 19:17) என்று லோத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டதல்லவா? நாமும் அழியாதபடி கன்மலையாகிய கிறிஸ்துவினிடத்தில் ஓடிப்போய் விடவேண்டும். அவரை பற்றிக் கொள்ளும்போது, உலகத்தின் எந்த அழிவிற்கும், பிசாசின் எந்த சோதனைகளுக்கும் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
.
நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு உதவி வரும் கன்மலையாகிய கிறிஸ்துவை நோக்கி ஜெபத்தில் முன்னேறி செல்வோமா? வருடத்தின் இறுதியில் வந்திருக்கிற நாம் இந்த வருடம் முழுவதும் எத்தனை நேரம் ஜெபத்தில் தரித்திருந்தோம் என்று பார்த்தோமானால் எத்தனை குறைவாய் காணப்படுவோம்? ஒருவர் எழுதினார், ‘ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் ஜெபித்தால் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு நாளைக்குத்தான் ஜெபித்திருப்போம்’ என்று.
.
ஒவ்வொரு உலக காரியத்திற்கும் மணிக்கணக்கில் செலவழிக்கிற நாம், ஜெபத்திற்கு எத்தனை நேரம் செலவழிக்கிறோம்? நாம் எத்தனை நேரம் ஜெபித்தோம் என்பதை பொறுத்துதான் நாம் உலகத்தின் மீது ஜெயம் கொள்வது அமையும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கூட ஜெபிக்காமல் இருந்தால் எப்படி நாம் சாத்தானை ஜெயிக்க போகிறோம்? கர்த்தரிடம் சென்று பரலோகத்தில் நித்திய நித்தியமாய் சேவிக்கப் போகிறோம்? இந்த வருடத்தின் கடைசி நாட்களில் நிற்கிற நாம் நம்மையே ஒரு விசை ஆராய்ந்து ஜெபிப்பதற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமா? ஆமென் அல்லேலூயா! :
.
கன்மலை உச்சியில் ஏறிடுவேன்
கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன்
மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே
முகமுகமாய் நான் பேசிடுவேன்
. அதிகாலையில் சீனாய் மலையினில்
என் ஆண்டவரோடு உலாவுவேன்
இந்நாளிலும் என் இயேசுவின் பாதம்
விழுந்து நான் தொழுகுவேன்
.
|