நமது வெற்றிக் கொடி

நமது வெற்றிக் கொடி
…..
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா. 40:31.

ஒரு உற்சாகமான வாலிபன் இல்லினோயிஸின் (Illinois) சட்டசபை தேர்தலில் நின்று வெகு சொற்ப ஓடடுகளை எடுத்து படுதோல்வியடைந்தான். மனம் சோர்வடையாமல், தன் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினான். ஆனால் அவனுடன்கூட இருந்து வியாபாரம் செய்தவன் அவனை ஏமாற்றியபடியால் பணமெல்லாம் செலவாகி, கடனை வாங்கி, அவற்றை செலுத்தி முடிக்க 15 நீண்ட வருடங்கள் ஆனது.
.
பின் அவர் வாழ்வில் வந்த ஒரு அழகிய பெண் வசந்தத்தைக் கொண்டு வருவாள் என்று எதிர்ப்பார்த்தார். அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவளுக்கு மலேரியா காய்ச்சல் வந்து அவள் மரித்துப் போனாள். கடைசியாக, திரும்பவும் அரசியலில் நுழைந்து, மாநில அளவில் அவர் நின்று ஜெயித்தபடியால், அவருக்கு தேசிய அளவில் நிற்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் அதுவோ அவருக்கு எட்டாதக் கனியாகத் தோன்றிற்று. ஆனால் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் நின்று ஜெயித்தார். ஆனால் அவருக்கு போதிய அளவு அவையில் ஆதரவு இல்லாததால், இரண்டு வருடங்கள் கழித்து, வாஷிங்டனை விட்டே வெளியே செல்ல நேரிட்டது.
.
இத்தனை நடந்தும் அவர் மனம் சோர்ந்துப் போகவே இல்லை. திரும்பவும், அமெரிக்க பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினராக போட்டியிட்டார். தோற்றுப் போனார். இரண்டாவது முறையாக நின்றும் தோற்றுப் போனார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஒரு நாள் தான் எப்படியும் வெற்றிப் பெறுவோம் என்று நம்பிக்கையோடு விடாது முயற்சி செய்தார். அவரது முயற்சி வீண் போகவில்லை. இறுதியாக வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் ஜனாதியதியாக நுழைந்தார். அவர் தான் கறுப்பர்களின் விடுதலைக்காக போராடிய அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆவார். அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருந்தபடியால் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இன்று வரைப் போற்றப்படுகிறார்.
.
ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வியா? மனம் சோர்ந்துப் போகாதீர்கள். என்ன வாழ்க்கை என்று கசந்துக் கொள்ளாதிருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்று இப்போது புகழ் பெற்று விளங்குகிறவர்கள் யாருக்கும் வெற்றி உடனே வந்து விடவில்லை, அவர்களுடைய விடா முயற்சியும், கர்த்தர் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஏசாயா 40:31 என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமானால், தோல்வியைக் கண்டு துவள மாட்டோம். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சங்கீதம் 37:5 -ல் வாசிக்கிறோம். நமது தேவன் யெகோவா நிசி, நம் ஜெயக் கொடியானவர். நமக்கு ஜெயத்தை தராமல் யாருக்கு ஜெயத்தை தரப் போகிறார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் ரோமர் 8:28. ஆகையால் மனம் கலங்காதீர்கள். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது. யெகோவாநிசியையே நோக்கிப் பார்ப்போம் வெற்றி நமக்குத்தான். அல்லேலூயா!
.
யெகோவாநிசி யெகோவாநிசி
எங்கள் கொடி வெற்றிக் கொடியே! 
ஜெபம்
எங்கள் வெற்றிக் கொடியாகிய யெகோவாநிசியே, எங்களுக்கு வெற்றியை எப்போதும் தருகிறவரே, உம்மைத் துதிக்கிறோம். தோல்வியைக் கண்டு நாங்கள் சோர்ந்துப் போகாமல், உம்மையேப் பற்றிக் கொண்டு வெற்றியை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.