சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். – (பிலிப்பியர் 3:13-14).
.
இன்று பழைய வருடத்தை முடித்து விட்டு நாளை நாம் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க போகிறோம். எத்தனையோ பேர் இந்த புது வருடத்தை காண வேண்டுமென்று வாஞ்சித்தும் காணாமல் மண்ணுக்கு மண்ணாக போயிருக்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு கொடுத்த கிருபைகளுக்காக அவரை துதிப்போம்.
.
ஒருவேளை நாம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில தீர்மானங்களை எடுத்திருப்போம். நான் கர்த்தருக்குள் இதை செய்ய வேண்டும், வேதத்தை அதிகமாய் வாசிக்கவேண்டும், ஜெபிக்க வேண்டும், இன்னும் கர்த்தருக்காய் ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து கொஞ்ச காலம் அதை நிறைவேற்றி இருப்போம், ஆனால் நாளாக ஆக, வேலை பளு மற்றும் மற்ற காரணங்களினால், அதை நிறைவேற்றாமல் போயிருப்போம். வர போகும் புது வருடத்தில் நாம் எடுக்கிற தீர்மானங்களில் நிலைத்திருக்க புது வருடம் வருவதற்கு முன்பாகவே தீர்மானம் செய்வோம்.
.
நமக்கு இந்த வருடத்தில் தேவன் அநேக தருணங்களை கொடுத்து, கர்த்தருக்குள் வளர கிருபை செய்திருப்பார், ஆனால் அதை தட்டி கழித்திருந்தால், வரபோகும் புது வருடத்தில் கர்த்தருக்குள் வாழ முடிவெடுப்போம்.
.
இனிவரும் காலங்களில் சமாதானம் பூமியிலிருந்து எடுத்து போடப்படும். கர்த்தரின் வருகை சீக்கிரமாய் இருக்க போவதால், இந்நாட்களில் அக்கிரமம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. நாட்களும் வேகமாய் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிசாசானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரம் இருக்கிறதென்பதை அறிந்து, முழு பெலத்தோடு இக்கடைசி நாட்களில் மக்களை பாதாளத்திற்கு நேராக இழுத்து சென்று கொண்டிருக்கிறான். உலகத்தின் நிலைமை இன்னும் மோசமாகி கெணடிருக்கும் இந்நாட்களில், நாம் கர்த்தரை மாத்திரம் பிடித்து கொள்வோம்.
.
கர்த்தரை நாம் பிடித்து கொண்டால், எல்லா நன்மையான ஊற்றுக்கும் அவரே அதிகாரி. புது வருடத்தில் புது ஆசீர்வாதங்களும், புது வாக்குதத்தங்களும் வேண்டும் என்று நாம் வாஞ்சிக்கும் அதே வேளையில், நாம் கர்த்தரை பிடித்து கொண்டால் அவரே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்மைகளுக்கும் முற்றும் காரணர். அவர் நமக்குள் இருந்தால் எல்லா ஆசீர்வாதங்களும் நம்மை வந்தடையும். நாம் அவரை விட்டு விட்டால், நாம் எந்த இடத்திற்கு சென்று, ஜெபிக்க கேட்டு கொண்டாலும், அந்த ஆசீர்வாதம் நம்மை வந்தடையாது. வரபோகும் புது வருடத்தில் எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணராகிய இயேசுகிறிஸ்துவை பற்றி பிடித்து கொள்வோம். நாம் எந்த விதத்திலும் குறைவுபட மாட்டோம்.
.
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1 கொரிந்தியர் 5:8) என்ற வார்த்தையின்படி எல்லா துர்க்குணங்களையும் நாம் களைந்துவிட்டு ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின – (2 கொரிந்தியர் 5:17) என எல்லாவற்றையும் புதிதாக்கினவர்களாக நாம் புதிய வருடத்தில் பிரவேசிக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக.
.
இந்த வருடத்திலும் நாம் தவறவிட்ட காரியங்களையும், நாம் இழந்த காரியங்களையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிராமல், புது வருடத்தில் புது நம்பிக்கையோடு பிரவேசிப்போம். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்ற பவுலின் வார்த்தைகளின்படி, இந்த வருடத்தின் கசப்பான, வருத்தமான, வேதனையான, துன்பமான, துக்கமான காரியங்களை நாம் மறந்து, புது வருடத்தில் நமக்கு முன்பாக வரப்போகிற நன்மையான காரியங்களை எதிர்நோக்கி, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவோம். கர்த்தர் நம்மை எந்த வேளையிலும் கைவிடவே மாட்டார் என்பதை ஆணித்தரமாக நம் உள்ளத்தில் பதிய வைத்து, அவருடைய கரங்களை பிடித்தவர்களாக நாம் புது வருடத்தில் பிரவேசிப்போம். புது வருடம் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்கும் என விசுவாசித்து அந்த நம்பிக்கையோடே நாம் புது வருடத்திற்குள் பிரவேசிக்க தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக! புது வருடத்தில் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்வரை தேவனுடைய மாறாத கிருபை நம்மை சூழ்ந்திருப்பதாக! அல்லேலூயா!
.
புதிய ஆண்டுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
|