நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். – (ரோமர் 8:17-18).
. ஒரு கிறிஸ்தவ விளையாட்டு வீரர், ஓட்டப்பந்தயத்தில் சிறுவயதிலிருந்தே நன்றாக ஓடி ஓடி பயிற்சி எடுத்து வந்தவர், எப்படியாவது வரப்போகிற மாநில அளவு ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்து கொண்டிருந்தார். அதற்காக அவர் உணவை குறைத்து, காலையில் எழுந்து, தன் பயிற்சியாளர் சொல்லி கொடுப்பதை அப்படியே செய்து, எப்படியாவது முதலாவது வர வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருந்தார். போட்டி நடக்க ஒரு வாரம் இருக்கும்போது, அவர் சென்ற கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி, அவர் கால் எலும்பு முறிந்து, அவர் பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாமற் போனது. அவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. நான் இப்படி என்னை ஒடுக்கி செய்த முயற்சி ஒன்றும் பிரயோஜனப்படாமல், நான் இப்படி படுக்கையில் கிடக்கிறேனே, நான் எதிர்ப்பார்த்தது ஒன்று, ஆனால் நடந்ததோ வேறொன்றாய் இருக்கிறதே என்று மிகவும் வேதனைப்பட்டார். அவரது பயிற்சியாளர், அடுத்தமுறை பார்க்கலாம் என்று அவரை தேற்றினார். அந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்கள் எல்லாரும் ஆனந்தமாய் இருந்தபோது, அவர்களை அறியாமல் அவர்கள் குடித்திருந்த பானத்தில் பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் எடுக்க கூடாத மருந்துகள் சேர்க்கப்பட்டு, அவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் அந்த மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எத்தனை வெட்கம்! எத்தனை ஏமாற்றம்! அப்போது தான் அந்த விளையாட்டு வீரருக்கு தெரிந்தது, தேவன் எதற்கு தனக்கு விபத்தை அனுமதித்தார் என்று.
.
ஒரு வேளை நாமும் கூட எதிர்ப்பார்த்திருந்த ஒன்று நடைபெறாதபடி, அதற்கு மாறாக நடந்திருக்கிறதோ? நான் இந்த மாதிரி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை என்று திகைத்து நிற்கிறீர்களோ? ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறீர்களோ? நான் எதிர்ப்பார்த்தது ஒன்று, நடந்ததோ மிகவும் மோசமானதாக இருக்கிறதே என்று கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? நீங்கள் மாத்திரம் இல்லை, வேதத்தில் அநேகருக்கு அப்படி நடந்திருக்கிறது!
.
யோசேப்பு கர்த்தருக்காக தான் பாராட்டின பரிசுத்த வைராக்கியம் தன்னை சிறையில் கொண்டு போய் சேர்க்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் முடிவோ எகிப்து தேசம் முழுவதிற்கும் இரண்டாவதாக கர்த்தர் அவரை மாற்றினார்
.
கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டின தானியேல், மூன்று வேளையும் ஜெபிப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து ஜெபித்த போது, தான் சிங்க கெபியில் வீசப்படுவோம் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், வெளிவந்த போதோ, புறஜாதியான ராஜா தேவனை பணிந்து கொள்ளும்படி செய்தார்.
.
எஸ்தர் ராஜாத்தி தான் ராணியாகும்போது நினைக்கவில்லை, தன்னால் மட்டுமே யூத ஜனங்கள் காப்பாற்றப்பட முடியும் என்று நினைக்கவில்லை, ஆனால், தன் உயிரை பணயமாக வைத்து, ராஜாவின் சமுகத்தில் அவள் சென்றபோது, தயவு கிடைத்து, அவளால் தன் ஜனம் முழுவதையும் காக்க முடிந்தது.
.
யோனா தன்னை கடலில் எறிந்து போடுங்கள் என்று சொன்னபோது, ஒரு மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் உயிரோடு இருப்போம், பின் வெளியே வந்து கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்வோம் என்று நினைக்கவில்லை. ஆனால் மீன் அவரை ஜீரணிக்காமல், வயிற்றிலேயே வைத்திருந்து, மூன்று நாட்களுக்கு பின் அவரை உயிரோடு கக்கி விட்டது. அவரது பிரசங்கத்தின் மூலம், ஒரு நகரமே விசுவாசத்திற்குள் வந்தது. (அவர் அதை விசுவாசியாவிட்டாலும்)
.
மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, தனது குல தொழிலை விட்டு விட்டு, கர்த்தரை பின்பற்றியபோது நினைக்கவில்லை, தன்னுடைய பிரசங்கத்தால் 3000 பேர், 5000 பேர் இரட்சிக்கப்படுவார்கள் என்று!
.
இப்படி எத்தனையோ உதாரணங்களை வேதத்தில் இருந்து எடுத்து காட்ட முடியும். அவர்கள் நினைத்தது ஒன்று, ஆனால் அவர்களுக்கு நடந்ததோ பெரிய காரியங்கள். அவர்கள் நினைத்தது தாங்கள் அவ்வளவு தான், இனி நன்மையான காரியங்கள் தங்கள் மூலம் நடக்காது என்று, ஆனால் தீமையானவற்றையும் நன்மையாய் மாற்றுகிற தேவன் நம் தேவன். ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’. – (ரோமர் 8:28) என்று வேத வசனம் நம்மை தேற்றுகிறது. நமக்கு நடக்கிற காரியங்கள் யாவும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது என்ற விசுவாசம் நம்முடைய உள்ளத்தில் பெருகட்டும்.
.
தேவன் நம்முடைய இருளான, பாடுள்ள, சூழ்நிலைகளை மாற்றி, அவற்றை நன்மையாக செய்து முடிப்பார். ‘நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்’ என்ற வசனத்தின்படி, இக்காலத்து பாடுகள் ஒரு நாளும் இனி வெளிப்பட இருக்கும் மகிமையான காரியங்களுக்கு ஒப்பிடவே முடியாத அளவு தேவன் அவற்றை மகிமையாக மாற்றி தருவார். ஆமென் அல்லேலூயா!
|