கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. – (எபேசியர் 2:8-9).
.
ஒரு ஏழைப் பெண் தன்னுடைய வியாதியில் தவிக்கும் சிறுப்பிள்ளைக்கு திராட்சை கொண்டு வரும்படி பக்கத்தில் இருந்த ஒரு திராட்ச தோட்டத்தில் போய் அங்கிருந்த காவல்காரனிடம் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து, கொஞ்சம் திராட்சை கொடுக்கும்படி வேண்டினாள். ஆனால் அந்த காவல்காரனோ, அந்த பெண்ணின் ஏழை நிலையைக் கண்டு, விரட்டினான். கொஞ்சமும் கொடுக்க முன்வரவில்லை.
.
அந்த சமயத்தில் அந்த பக்கம் வந்த அந்த நாட்டு இராஜாவின் மகள், நடந்த காரியத்தை கண்டாள். அந்த பெண்ணை அழைத்து, என்ன நடந்தது என்று விசாரித்தாள். அப்போது அந்தப் பெண், தன்னிடமிருந்த சிறுப்பணத்தை அந்த இளவரசியிடம் கொடுத்து, ‘அம்மா, இந்த பணத்தை எடுத்துக் கொண்டு, என் மகளுக்கு திராட்சை பழம் தாருங்கள்’ என்று வேண்டினாள்.
.
அப்போது அந்த இளவரசி, அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘உனக்கு புரியவில்லையா? இந்தத்தோட்டம் என்னுடைய தகப்பனாருடையது. என் தகப்பனார் ஒரு வியாபாரி அல்ல, அவர் இந்த நாட்டின் இராஜா, அவர் பணத்திற்கு கொடுப்பவர் அல்ல, உனக்கு வேண்டிய மட்டும் திராட்சைப் பழங்களை எடுத்துக் கொள்’ என்று கூறினாள். அந்தப் பெண் தன் மகளுக்கு வேண்டிய திராட்சைப்பழங்களை எடுத்துச் சென்றாள்.
.
தேவன் கொடுக்கும் இரட்சிப்பும் இலவசமே! அது இலவசமாய் இருப்பதால்தான் அநேகர் அதைப் பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. அதையே உங்கள் சரீரங்களை கொடூரமாய் கீறிக் கொள்பவர்களுக்கு பரலோக இராஜ்யம் உண்டு என்றால் அநேகர் முன்வருவார்கள். அல்லது சில காரியங்களை நீங்கள் செய்தால்தான் இரட்சிப்பு உண்டு என்றால் அதையும் செய்ய ஆட்கள் முன்வருவார்கள். ஆனால், இரட்சிப்பு இலவசம் என்றால், மனிதனுடைய மூளையில், ‘அது எப்படி நான் எதுவும் செய்யாமலே எனக்கு பரலோக இராஜ்யம் எப்படி கிடைக்கும்?’ என்று யோசிக்கிறார்கள்.
.
எந்த கிரியைகளினாலும் அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு சிலர் மிகவும் நல்லவர்களாக, மற்றவர்களுக்கு வாரி வழங்குபவர்களாக, அவர்களது தேவைகளில் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். அதைக் காணும் மற்றவர்கள் இவர்களுக்கு நிச்சயம் பரலோகம் உண்டு என்று நினைப்பார்கள். இவர்களுக்கு கிடைக்காவிட்டால் வேறு யாருக்கு என்று சொல்வார்கள். ஆனால் வேதம் திட்டவட்டமாக சொல்கிறது, ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல என்று.
.
இயேசுகிறிஸ்து சிலுவையில் கோரப்பாடுகள் பட்டு, தம்முடைய மாசில்லாத இரத்தத்தை சிந்தி, நமக்கு இந்த இரட்சிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதை நாம் எந்த விலைக் கொடுத்தும் வாங்க முடியாது. நம்முடைய எந்த நல்ல கிரியைகளும் அதற்கு எந்த வகையிலும் ஈடாகாது. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு என்று வேதம் கூறுகிறது.
.
அந்த விலையேறப்பெற்ற ஈவாகிய இலவசமான இரட்சிப்பை நாம் விசுவாசித்து பெற்றுக் கொள்வோமா? நாம் செய்யும் எந்த காரியங்களும் நம்மை பரலோகத்தில் சேர்க்கவே முடியாது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, விசுவாசத்தினாலே அந்த இரட்சிப்பை நாம் பெற்றுக் கொள்வோமாக. எந்த பணமும், உடலை வருத்துதலும், நற்கிரியைகளும் செய்ய முடியாதததை நம் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவின் இரத்தத்தில் வைத்துவிட்டார். அந்த இரத்தத்தினால் கழுவப்பட்டாலே போதும், நாம் இரட்சிக்கப்படுவோம், பரலோக இராஜ்யத்திற்கு தகுதியாவோம்.
.
மேலே உள்ள கதையில் அந்த இளவரசி சொன்னதுப்போல, பரலோக இராஜ்யம் முழுவதும் நம் பரம தகப்பனுக்குத்தான் சொந்தம். அதை பெற்றுக் கொள்ள நாம் எந்த கிரயத்தையும், எந்த சம்பிரதாயங்களையும் செய்ய வேண்டியதில்லை. நம் பாவங்களை கர்த்தரிடம் அறிக்கையிட்டு இரட்சிப்பை இலவசமாகப் பெற்றுக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!
.
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
நன்றி உமக்கு நன்றி
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
|