நாம் நினைப்பதற்கும் மேலானவர்

நாம் நினைப்பதற்கும் மேலானவர்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். – (எபேசியர் 3:20-21).

ஜான் ஜி வென்டல் என்னும் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ஆறு சகோதரிகள் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர் மிகவும் வசதி படைத்தவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அதிகமான சொத்துக்களை விட்டு சென்றனர்.
.
இந்த ஜான் வென்டல் தன் சகோதரிகளில் ஐந்து பேரை அவர்களோடு பேசி, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமலேயே அவர்களும் அந்த சகோதரனும் ஒரே பழைய வீட்டில் ஐம்பது வருடங்கள் வசித்தனர். அவர்களை போல கஞ்சத்தனம் செய்தவர்கள் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சரியான உணவில்லாமல், சரியான உடைகளை வாங்காமல், சரியான வீடு வசதிகளோடு வாழாமல், தங்கள் வாழ்க்கையை கழித்தனர். எவ்வளவு பணம் இருந்தும், அதை அப்படியே வைத்திருந்து, செலவழிக்காமல், மரித்தனர். அவர்களுடைய கடைசி சகோதரி 1931-ம் ஆண்டு மரித்தபோது, அவள் ஒரே ஒரு உடையை 25 வருடங்களாக அணிந்திருந்தாள் என்பது தெரிய வந்தது. அவளுடைய எஸ்டேட்டின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்கள் ஆகும். பணத்தை உடையவர்கள் அதின் மேல் ஆசை வைக்கும்போது, மற்றவர்களுக்கும் கொடுக்காமல், தாங்களும் அனுபவியாமல், மரிக்கும் சூழ்நிலை மிக கொடுமையானதாகும்.
.
கர்த்தருடைய வாக்குதத்தம் ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ என்பதாகும். கர்த்தர் குறைகளை நீக்குகிற கர்த்தர்தான். எல்லாவற்றையும் நிறைவாய் தருகிறவர்தான். ஆனால் ஜான் வென்டல் போன்றவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை மதிக்காமல், கடைசி வரை கருமிகளாக வாழ்ந்து, யாருக்கும் பயனில்லாமல், அவர்களுக்கே அந்த ஐசுவரியமும், நிறைவான வாழ்க்கையும் பயனில்லாமல் போனது போல வாழ்ந்து மரிக்கிறவர்களும் இந்த உலகத்தில் உண்டு.
.
‘வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்’ –(சங்கீதம் 112:9) என்று வேத வசனம் கூறுகிறது. ஏழைகளுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனிலும், தேவையிலும் வாழ்கிற சொந்த சகோதர சகோதரிகளுக்குக்கூட கொடுக்காமல் வாழ்கிற எத்தனையோ பணக்காரர்கள் நமது குடும்பங்களிலும், சபைகளிலும் உண்டு. கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த செழிப்பினால் என்ன பயன்? ஏழைகளுக்கு கொடுக்கிறவனுடைய நீதி என்றென்றைக்கும் இருக்குமாம். அவனது கொம்பு மற்றவர்களுக்கு முன்பாக மற்றவர்கள் வியக்கும் வண்ணம், மகிமையாக உயர்த்தப்படுமாம். அதே சமயம் அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு – (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் கூறுகிறது.
.
நம் தேவன் கருமியல்ல, அவர் ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்’ – (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. அன்னாள் ஒரு பிள்ளையை தான் கேட்டாள், ஆனால் அவளுக்கு சாமுவேலையும் சேர்த்து, ஆறு பிள்ளைகளை தேவன் கொடுத்தார். சாலமோன் இராஜா ஞானத்தைதான் கேட்டார். ஆனால் தேவன் அவருக்கு அவர் கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் கொடுத்தார். இப்படி நம் தேவன் நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் செய்ய வல்லவராயிருக்கிறபடியால், நாம் எதை குறித்தும் கலங்க தேவையில்லை.
.
நாம் அவருடைய பிள்ளைகளாயிருந்தால், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவன், நாம் வேண்டி கொள்வதற்கும் நினைத்து பார்ப்பதற்கும் அதிகமாக கொடுத்து ஆசீர்வதிப்பார். நான் புதிதாக வேலையில் சேர்ந்தபோது, எனக்கு குறைந்த சம்பளமே இருந்தது. எங்கள் குடும்பத்தின் சம்பளம் குறைவாக இருந்தபோதிலும், தேவன் அதை ஆசீர்வதித்தபடியால், எந்த குறைவும் எந்த கடனும் வாங்காமலேயே வீடு கட்டி முடிக்க கிருபை செய்தார். பின் சம்பளம் சற்று உயர்ந்தது. அதிலும் தேவன் ஆசீர்வதித்தபடியால், எந்த குறையும் அவர் வைக்கவில்லை. இப்போது முதலில் வாங்கியதைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குறைந்த சம்பளத்திலும் வாழ்ந்த வாழ்க்கையே இப்போதும் வாழ்ந்தாலும், கர்த்தருக்கென்று கொடுப்பதில் நாங்கள் குறைவுபட்டதே இல்லை. நாங்கள் கொடுக்க கொடுக்க தேவன் எங்களுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறார். நாங்கள் அவர் எங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்கிற எண்ணத்தோடு கொடுப்பதில்லை. அவர் மேல் வைத்திருக்கிற அன்பினால் நாங்கள் கொடுத்தாலும், தேவன் யாருக்கும் கடனாளி அல்ல, அவர் திருப்பி கொடுத்து கொண்டேதான் இருக்கிறார். அல்லேலூயா!
.
எனது நண்பர் அவர் செல்லும் சபை ஏதோ காரணத்தினால் பிரிந்த போது, அவர் உண்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கத்தில் சேர்ந்து, பின் சபை வளர்ச்சிக்காக தனக்கு இயன்றதை விட பல மடங்கு அதிகமாக கர்த்தருடைய ஊழிய விரிவாக்கத்திற்காக கொடுத்தார். அநேகர் அவரை தடுத்தனர். ‘நீ கொடுக்கிற பணம் உனக்கு திரும்ப கிடைக்காது’ என்று அவரை அதைரியப்படுத்தினர். ஆனால் அவரோ ‘இல்லை, நான் கர்த்தருக்கென்று கொடுப்பதாக தீர்மானித்து விட்டேன். அந்த பணம் எனக்கு கிடைத்தாலும் பரவாயில்லை, கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தீர்மானித்தது தீர்மானித்ததே’ என்று சொல்லி, அந்த பணத்தை கொடுத்தார். இரண்டு பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அந்த சபை எண்ணி எட்டே மாதங்களில் 230 குடும்பங்கள் அந்த சபையில் சேரவும், அவருக்கு வரவேண்டிய பணம் எட்டே மாதங்களில் திரும்ப கிடைக்கப்படவும் தேவன் கிருபை செய்தார். கடந்த நான்கு வருடங்களாக அவருடைய கட்டி முடிக்கப்படாதிருந்த வீடு மூன்றே மாதங்களில் கட்டி முடிக்க தேவன் கிருபை செய்தார். அவர் தன்னுடைய வீடு கட்டுவதை நினைத்து கூட பார்க்கவில்லை, ஆனால் தேவன் அற்புதத்தை அவருடைய வாழ்வில் செய்தார்! கர்த்தரை நேசித்து நாம் அவருக்காக ஒரு அடி எடுத்து வைக்கும்போது, கர்த்தர் நமக்காக எத்தனை செய்கிறார் பாருங்கள்! நாம் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக செய்ய வல்லவர் நம் தேவன். தேவனது கிருபைகளை ருசித்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், அவருடைய மகத்துவமான அற்புதமான செய்கைகளை குறித்து! கர்த்தருக்கென்று கொடுப்போம், தசமபாகம் மாத்திரமல்ல, நம்மால் எவ்வளவு முடியுமோ அவற்றை உள்ளன்போடு கொடுப்போம், அவரது இனிமையான ஆசீர்வாதங்களை ருசிப்போம்! ஆமென் அல்லேலூயா!
.
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை
அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தையை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக எங்களுக்கு செய்ய வல்லவரே உமக்கே மகிமை செலுத்துகிறோம். எங்களால் இயன்றதை உமக்கு மனவிருப்பத்தோடு கொடுக்க கிருபை செய்யும். நீர் கொடுப்பீர் என்ற எண்ணத்தோடு கொடுக்காமல், நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதத்திலிருந்து உமக்கென்று கொடுக்க எங்களை உற்சாகப்படுத்தும். அதினால் உம்முடைய அளவற்ற ஆசீர்வாதத்தை ருசி பார்த்து உமக்கு நன்றி சொல்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீங்கள் கேட்பது எதுவோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தால் அது உங்களுக்கு நடக்கும் என்ற வசனத்தின்படி, நாங்கள் விசுவாசத்தோடு உம்மிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் தகப்பனே, தேவரீர் தயவாய் கேட்டு பதில் தருவீராக.
.
கஜாக்ஸ்தானிலுள்ள சகோதரன் அகஸ்டின் அவர்களின் மனைவி ரின்சிஅவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டு, எந்த சத்தான உணவும் சாப்பிட முடியாமல், வெறும் திராவக உணவையே சாப்பிட்டும், அவ்வப்போது வயிற்றுவலியால் துடிப்பதாக எழுதியிருக்கிறார்களே, நாங்கள் ஒருமனப்பட்டு அந்த சகோதரிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, அந்த சகோதரிக்கு ஒரு விடுதலையை இப்போதே கட்டளையிடுவீராக. அவர்களுக்கு வயிற்று வலியை கொண்டு வரும் எந்த சத்துருவின் அந்தகார சக்திகளின் கிரியைகள் இருந்தாலும் அவற்றை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அப்பாலே போ என்றுக் கட்டளை கொடுக்கிறோம். தேவன் அந்த மகளை விடுதலை செய்வதற்காக ஸ்தோத்திரம். இன்றுக்கண்ட எகிப்தியனை என்றுமே காணாதபடிக்கு அந்த சகோதரியின் வாழ்வில் பெரிய காரியத்தை செய்வதற்காக அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.
.
ஒரு சகோதரி தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டு விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறார்களே, அவர்களுடைய குடும்பத்தில் கணவன் மூலமாக எந்த நாளும் பிரச்சனை என்றும், எத்தனை உபவாச ஜெபம் இருந்தும், இரட்சிக்கப்பட்டு பின்மாற்றமடைந்த அந்த கணவனால் ஒவ்வொரு நாளும் வேதனையும், கண்ணீரும் அனுபவிக்கிற அந்த சகோதரிக்காக உம்மிடம் மன்றாடுகிறோம் தகப்பனே, அந்த கணவரை சந்திப்பீராக. தன் மனைவியும் கொடுமைப்படுத்துகிறோம் என்கிற நினைவு அந்த கணவருக்கு வரும்படியாக ஜெபிக்கிறோம். அந்த கணவரை ஆட்கொண்டு, பொல்லாத காரியங்களை செய்ய வைக்கிற சத்துருவின் அந்தகார சக்திகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். அந்த குடும்பத்தின் சமாதானத்தை கெடுக்கிற எல்லா பொல்லாத ஆவிகளின் கிரியைகளும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அகன்று போவதாக என்று கட்டளைக் கொடுக்கிறோம். சந்தோஷமாய் அவர்கள் குடும்பமாய் உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்.
.
சகோதரன் ஷெல்டன் அவர்களின் தாயார் திருமதி மோட்சம் மேரிஅவர்கள் கடந்த 22ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்திருக்கிறபடியால், அவர்களை இழந்து தவிக்கிற குடும்பத்திற்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து காத்துக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி கரோலின் அவர்களின் மகன் நிதின் கில்பர்ட் பத்தாவது படிக்கிறபடியால், அந்த மகனுடைய படிப்பை ஆசீர்வதித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்கல்விக்கு செல்லும்படியாக கிருபை செய்யும். உமக்கு பயப்படுகிற பயத்தையும், கர்த்தருக்காக வாழும் வாஞ்சையையும் இந்த நாட்களிலேயே கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.