கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்.. – எபேசியர் 4:11.
. கிறிஸ்துவுக்குள் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டுமெனறு தேவன் எதிர்ப்பாக்கிறார். சிலர் எத்தனையோ வருடங்களாக இரட்சிக்கப்பட்டிருந்தும் இன்னும் ஆவிக்குரிய வாழ்வில் குழந்தைகளைப் போலவே இருக்கிறார்கள். கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் பூரண புருஷராக வேண்டும் என்றும் தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். அப்படியென்றால் நாம் எதில் வளர வேண்டும்? ஆவிக்குரிய வாழ்வில், வேத சத்தியத்தில், நற்செயல்களில், தேவனோடுள்ள ஐக்கியத்தில், ஆழமான ஜெப ஜீவியத்தில்… என சொல்லிக் கொண்டே போகலாம். . இப்படி படிப்படியாக வளர்ந்து ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர்களாக நாம் மாற வேண்டுமெனறு தேவன் விரும்புகிறார். ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம் என்ன? அதை எப்படி கண்டுக் கொள்ளக்கூடும்? என கேட்போமானால், ‘குறைக்குடம், கூத்தாடும், நிறைகுடம் நீர்த்தழும்பாது’ என்ற பழமொழிக்கேற்ப ஆவிக்குரிய வாழ்வில் வளராதவர்களிடத்தில் குறைக்குடத்தைப் போல சிறு சிறு காரியங்களிலும் மனத்தாங்கல் அடைந்து, அவர்கள் என்னை மதிக்கவில்லை, என்னிடம் பேசவில்லை, என்னை விசாரிக்கவில்லை, கிறிஸ்தவனாகிய எனக்கு ஏன்பாடு, எனக்கெதற்கு உபத்திரவம் என சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அங்கலாய்ப்பின் சத்தத்தை எப்போதும் அவர்களிடம் கேட்க முடியும். ஆனால் ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர்களோ, தேவ அன்பினால் நிரப்பப்பட்டவர்களாக நிறைக்குடத்தைப் போல நீர்த்தழும்பாமல் நிதானமாய் இருப்பர். . ஒரு சில காரியத்தை சிந்தித்து, நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்துப் பார்ப்போமா? பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாயிருக்க வேண்டும். எந்த தாழ்ந்த நிலையிலும் ஊழியம் செய்ய முன்வருபவர்களாக இருக்க வேண்டும்;. அதாவது தன்னுடைய நிலையை விட்டு, எல்லாருக்கும் கடையனாக அனைவரது கால்களையும் கழுவுமளவிற்கு பணிபுரியும் சிந்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். வேதத்திலே யோனத்தான், சவுல் இராஜாவின் சொந்த மகனாய் இருந்தாலும், தான் சிநேகித்த தாவீதிடம், ‘நீர் இஸ்ரவேலின் மேல் இராஜாவாயிருப்பீர், அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்’ (1 சாமுவேல்23:17) என்றாரே! இவர் நமக்கு மாதிரியல்லவா? . மற்றவர்கள் எல்லாரையும் தன்னை விட மேலானவர்களாக எண்ண வேண்டும். படிக்காதவர்கள், ஏழைகள், இரட்சிக்கப்படாதவர்கள், அப்படி யாராயிருந்தாலும் அவர்களை தன்னை விட மேன்மையாய் எண்ணி, முழு கனத்தையும் அவர்களுக்கு கொடுத்து, அவர்களோடு நட்பு பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும். ‘மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்’ (பிலிப்பியர் 2:3) . கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ள வேண்டும். இவன் என்னை விட வயதில், படிப்பில், பதவியில், செல்வாக்கில் குறைந்தவன்தானே! ஆகவே முதலில் அவன் பேசட்டும், பின் நான் பேசுவேன் என்ற எண்ணம் கடுகளவும் கொண்டிராதவர்களாக இருக்க வேண்டும். காரணம் அப்படிப்பட்டவர்களுக்கு தங்களை குறித்த எந்த பெருமையான எண்ணமும் இராததால், எந்த வித தடையுமின்றி பிறரை கனம் பண்ண முந்திக் கொள்வார்கள். ‘கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்’ (ரோமர் 12:10) . நம்மிடம் இப்படிப்பட்ட முதிர்ச்சி உண்டா? அல்லது எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சிறிய காரியத்தையும் பெரிதாக எடுத்து, தன்னோடுள்ளவர்களையெல்லாம் புகார் செய்யும் குழந்தையைப் போல இருக்கிறோமா? நம்மையே ஆராய்ந்துப் பார்ப்போம்.
. கர்த்தருக்குள் வளருவோம், ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா! .
தேவ ஆவியில் நிறைந்த மனிதரெல்லாம்
அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப்போல்
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே
. தூய ஆவியே என்னை நிரப்பிடுமே
தேவ ஆவியே என்னை நடத்திடுமே
ஆவியில் நடக்கணுமே – தேவ
வார்த்தையில் நிலைக்கணுமே |