இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். – (2 கொரிந்தியர் 4:7).
. என் நண்பருடைய வீட்டிலே சிறந்த ஓவியர் ஒருவரால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு ஒன்றை பார்த்தேன். அது தெருவிலே விற்கப்பட்ட சாதாரண மண்பானையால் ஆனது. ஆனால் அந்த ஓவியர் தன் கலைத்திறனால் அதன் மீது மரங்களும், தாவரங்களும், பழங்களும், பூக்களும் நிறைந்த ஒரு சோலைவனம் ஒன்றை வரைந்திருந்தார். அதை அவர் வீட்டிற்கு வருகிறவர்கள் கண்டு ரசிக்கும்படியான ஓரிடத்தில் வைத்திருந்தார். அதை காண்கிறவர்கள் அனைவரும் அது எங்கு, என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது? எனறு கேட்டனர். அது மிகவும் அற்பமான ஒரு மண்பாண்டத்தை மூலப்பொளூக கொண்டு செய்யப்படடது என்பதை அறிந்ததும் மிகவும் வியப்படைந்தனர். அதன் மதிப்பு வெறும் பதினைந்து ரூபாய் தான். ஆனால் அதன் உண்மை மதிப்பை பணத்தினால் அளவிட முடியாது.
.
நாமும் கூட அற்பமான களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள்தான். ஆனால் தேவக்குமாரனுடைய இரத்தத்தாலே கிருபையாக மீட்கப்பட்ட வேளையில் தானே மிகவும் ஒப்பற்ற ஓவியராகிய தேவனின் கரங்களில் கொடுக்கப்படுகிறோம். நாம் அறியாத முறையில் நமது புத்திக்கெட்டாத வகையில் தேவன் அவற்றின் மீது விநோதமான அற்புத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அது ஒரு ஆவிக்குரிய ஓவியமாகும். இவ்வுலக மக்கள் நம்முடைய இலட்சணமில்லாத தோற்றத்தையும், கறுப்பு நிறத்தையும், சப்பை மூக்கையும் வேறு பல குறைபாடுகளையும் கண்டு அருவருக்கலாம். ஆனால் தேவன் அவ்விதமாக பார்ப்பதில்லை. இராப்பகலாக இடைவிடாது தமது சித்தத்தையும், விருப்பத்தையும் நம்மில் நிறைவேற்றி கொண்டே இருக்கிறார். வெகு சீக்கிரத்தில் அதை செய்து முடித்தவராக தம் தூதர்களுக்கும் சகல சிருஷ்டிகளுக்கும் காண்பிப்பார். ‘தூதர்களே பாருங்கள், நான் உருவாக்கிய பவுல் என்னும் இந்த பாத்திரத்தையும், பேதுரு, யாக்கோபு, யோவான் என்று அந்த பாத்திரங்களையும் உற்று பாருங்கள்’ என்பார். அவர்களோ, வியப்புடன், ‘இவர்களை அத்தனை அழகுள்ளவர்களாக, பூரணர்களாக எவ்வாறு சிருஷ்டித்தீர்! அவர்களை நாங்கள் உலகில் பார்த்திருக்கிறோமே, அப்போது அவர்கள் அழகற்றவர்களாக, குறைவுள்ளவர்களாகத்தானே இருந்தனர். மக்களும் இவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லையே’ என்று கூறுவார்கள். இது கற்பனையல்ல, கதையுமல்ல, வேதாகமம் கூறும் உண்மை! இந்த அருமையான சத்தியத்தை காலஞ்சென்ற பரிசுத்தவான் சகோ பகத்சிங் அவர்கள் கூறியதாகும்.
.
ஒன்றுக்கும் தகுதியில்லாத நம்மை தேவன் எவ்வாறு விண்ணோரும் மண்ணோரும் போற்றும் மகிமையான கிரீடமாக மாற்றுவார்? இந்த உலக வாழ்விலே நம்மை முழுவதும் தேவ கரத்தில் அர்ப்பணிக்கும்போது மாத்திரமே! ‘ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்’. – (2 தீமோத்தேயு 2:21) என்று வேதம் கூறுகிறது. எஜமானால் பயன்படுத்தப்படும் பாத்திரமாக நாம் மாற வேண்டுமானால், நம்மை கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் சுத்திகரித்து கொள்ளும்போது மாத்திரமே, நாம் அவருக்கு பிரயோஜனமான பாத்திரமாக மாற முடியும். குயவனாகிய அவருடைய கரத்தில் களிமண்ணான நம்மை ஒப்படைக்கும்போது, அவர் நம்மை அவருக்கு உகந்த பாத்திரமாக மாற்றுவார்.
.
கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மேற்கண்ட வசனத்தின்படி தங்களை குயவனாகிய தேவனிடத்தில் களிமண்ணாக படைத்து, அவருடைய சித்தத்திற்கு தங்களை வனையும்படி ஒப்புக்கொடுத்ததினால் மாத்திரமே அவரால் பயன்படுத்தப்பட முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரமாக நம் ஒவ்வொருவரையும் தேவனே வனைந்து, எஜமானாகிய அவருக்கு பிரயோஜனமுள்ள பாத்திரங்களாக நம்மை மாற்றுவாராக! ஆமென் அல்லேலூயா!
.
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
|