உபத்திரவத்தின் மூலம் பாடம்

உபத்திரவத்தின் மூலம் பாடம்
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். – (சங்கீதம் 119:71).
.
ஒருதேவனோடு நெருங்கி வாழ்நத ஒரு வியாபாரி தன் வியாபாரம் செழித்தவுடன் தேவன் விட்டு விலகி தூரமாய் சென்று விட்டார். சபையிலுள்ள மூத்தவர்கள் அவரை மீண்டும் தேவனண்டை வரும்படி புத்தி சொன்னார்கள். ஆனால் அவரோ தன் வியாபாரத்திலே முனைப்பாக இருந்துவிட்டார்.
.
ஒரு நாள் வியாபாரியின் மூன்று பிள்ளைகளில் மூன்றாவது மகனை ஒரு விஷப்பாம்பு கடித்ததால் அவன் மரணத்தருவாய்க்கு வந்தான். மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். இச்சூழ்நிலையில் இவர் மிகுந்த பாரத்தோடு சபை மூப்பர் ஒருவரை ஜெபிக்கும்படி அழைத்தார்.
.
வந்த மூப்பர் ஞானமுள்ள தேவ மனிதர், அவர் ஜெபிக்க தொடங்கி, ‘தேவரீர் நீர் இந்த பிள்ளையை கடிக்கும்படி ஒரு பாம்பை அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறேன். நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாய் இந்த குடும்பம் உம்மைத் தேடும்படி எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிகக்வில்லை. ஆனால் எங்களால் முடியாததை இந்த பாம்பு நொடிப்பொழுதில் செய்து முடித்து விட்டதே! இப்போதும் இவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். இயேசுவின் நாமத்தில் தயவு கூர்ந்து இந்த பிள்ளையை சுகமாக்கும், இனியும் இவர்கள் உம்மை நினைவுகூர்வதற்கு எந்த ஒரு பாம்பும் வரும் நிலை ஏற்படாதிருக்க அருள் செய்யும்’ என்று ஜெபித்து முடித்தார். சற்று நேரத்திற்குள் பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தேவன் அற்புத சுகத்தை கொடுத்தார்.
.
பொதுவாகவே மனித இயல்பு அப்படியாயிருக்கிறது. இப்பூமிக்குரிய வாழ்வு எந்த துன்பம் இல்லாமலும், தரித்திரம் இல்லாமலும், நோய் இல்லாமலும் சொகுசான வாழ்க்கை இருக்குமென்றால் தேவனைக் குறித்த சிந்தை கிட்டத்தட்ட ஒருவருக்குமே ஏற்படாது. இதன் நிமித்தமே தேவன் இவ்வுலகத்தில் பாதுகாப்பற்ற வாழ்வையும், துன்பங்களையும் உபயோகித்து, தேவையான நேரத்தில் நாம் அவரிடம் திரும்பவும், அவரை தேடவும் வைக்கிறார். காரணம் நம் சரீரத்தை விட ஆத்துமா மேன்மையானதல்லவா? இப்படித்தான் தீமைகளை நம் ஆத்துமாவிற்கு நன்மையாக மாற்றுகிறார்.
.
பிரியமானவர்களே, நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளும், வியாதிகளும், பாடுகளும் நம் அன்பின் தேவனால் அனுமதிக்கப்பட்டதே! தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இவைகள் இருக்கின்றன. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கூட கீழே விழுவதில்லை. ஆம், தீமைகளை தேவன் உபயோகித்து, அதன் மூலம் நம்மை பாவங்களிலிருந்தும், பின்மாற்றத்திலிருந்தும் திரும்பும்படி செய்கிறார். இதன் மூலம் பரலோகத்திலுள்ள நம் நித்திய வீட்டை கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார். ஆமென் அல்லேலூயா!
.
சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே
பெலன் தரும் தேவன் இருக்கிறார்
கிருபையால் உன்னை நிரப்பிடுவார்
.
காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்கள் நன்மைக்காவே தீமைகளையும், பாடுகளையும், துன்பங்களையும் அனுமதிக்கிறீர் என்று உணர்ந்து, உம்மை இன்னும் அதிகமாய் தேடவும், எங்களுடைய தீய வழிகளிலிருந்து நாங்கள் திருந்தி, உம்மிடம் நெருங்கி ஜீவிக்கவும் கிருபை செய்யும். பரலோக இராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக எங்களை மாற்றும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.