அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். – (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).
. உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு காரியத்தை மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கும் இயல்புடையவர்களாய் இருக்கிறார்கள். அதாவது ஒரு மனிதன் பாவத்தில் பெருகி கொண்டேயிருப்பான். அல்லது பரிசுத்தத்தில் நாட்டம் கொண்டு அதில் வளர்ந்து கொண்டே இருப்பான். . முதலாவது பாவ உலகத்தின் மீது நாட்டம் கொண்ட மனிதர்களை பார்க்கும்போது, எப்பொழுதாவது ஒரு சிகரெட் பிடிக்கும் மனிதன், கொஞ்ச நாட்களில் தினமும் ஒன்று என்றாகி, பின்பு ஒரே நாளில் பல சிகரெட்டுகளை பிடிக்க ஆரம்பிக்கிறான். கடைசியில் அவன் வேண்டாம் என்று நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடியாதவனாகி விடுகிறான். இதேப்போலத்தான் பணம் சம்பாதிப்பதும், பொருள் சேர்ப்பதும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் எந்த நிலையிலும் ‘போதும்’ என்ற மனநிலைக்கு வருவதே இல்லை. இன்னும் சம்பாதிக்க வேண்டும், இன்னும் இடம் வாங்க வேண்டும் என்ற அவர்களது ஆசை முடிவுக்கு வருவதேயில்லை. . அடுத்ததாக கிறிஸ்துவின் சிந்தனையோடு வாழ்கின்ற தேவ மனிதர்களை சற்று நோக்கினால், தேவனையும் வேதத்தையும ;அதிகமாய் நேசிக்கும் ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு பரிசுத்தமாய் வாழ்ந்தாலும் இன்னும் பரிசுத்தமாக வேண்மென்று பிரயாசப்படுகிறான். மணிக்கணக்காக ஜெபித்தாலும் இன்னும் ஜெபிக்க வாஞ்சிக்கிறான். காணிக்கை எவ்வளவு கொடுத்தாலும் அவனால் திருப்தி அடைய முடிவதில்லை. தான் ஒரு சிலரை ஆண்டவருக்கும் நடத்திவிட்டோம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளாமல் அநேகருக்கு தொடர்ந்து சுவிசேஷம் அறிவிக்கிறான். . பிரியமானவர்களே, வேத வசனம் சொல்கிறது, ‘அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்’ என்று. நாம் அநியாயம் செய்கிறவர்களானால், அதினால் நமக்கு பயன் எதுவும் இல்லை. நித்திய நரகமே மறுவாழ்வில் காத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் இன்னும் அதிக பரிசுத்தம், இன்னும் பரிசுத்தம் என்று பரிசுதத்ததையும், நீதியையும் வாஞ்சிப்போமானால், மறுவாழ்வில் கர்த்தரோடு என்றென்றும் ஆனந்தமாய் வாழும் பாக்கியத்தை பெறுவோம். . ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திரிக்கும்போது, ‘இந்த நாளில் பரிசுத்தம் என்னை சூழ்ந்து கொள்ளட்டும் ஆண்டவரே, என் சிந்தை பரிசுத்தமாய் இருக்கட்டும், என் பார்வை பரிசுத்தமாயிருக்கட்டும், என் பேச்சு பரிசுத்தமாய் இருக்கட்டும்’ என்று நம்மை ஒப்புக் கொடுத்து ஜெபித்து, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற வாஞ்சிப்போம். ‘உம்மைப்போல என்னை மாற்றுமே’ என்பதே நம் இருதயத்தின் நினைவாகவும், ஜெபமாகவும் அமையட்டும். அநியாயம் செய்கிறவர்கள் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தத்தில் வாழ்கிறவர்கள் இன்னும் அசுத்தமாகட்டும், நாமோ தேவன் விரும்பும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து, கர்த்தருடைய வருகையில் காணப்படுவோமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா! .
கண்களை பதியவைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன் |