கர்த்தருக்காக தாகம்

கர்த்தருக்காக தாகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. – (சங்கீதம் 42:1).

இந்த வசனத்தை நாம் அடிக்கடி படிததிருக்கிறோம். பாடலாய் பாடியிருக்கிறோம். ஆனால் அதன் அர்த்தத்தை நாம் தியானித்திருக்கிறோமா என்றால், மிகவும் குறைவானவர்களே அதை குறித்து தியானித்திருக்கிறோம். நாம் மான்கள் நீரோடையில் நீரை குடிப்பது போல ஓவியங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நேரில் பார்த்திருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.
.
நாம் நாய் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கிறோம். எங்கள் வீட்டில் ஒரு நாயை வளர்த்தோம். அதற்கு தண்ணீர் தாகமாயிருக்கும்போது, நாக்கை வெளியே தொங்கவிட்டு, தண்ணீருக்காக அலையும். அது மூச்சு விடுவது வெளியே சத்தமாய் கேட்கும்.
.
அதை போலத்தான் இந்த மானானது தாகமாயிருக்கும்போது, நீரோடையின் அருகே ஒரு சிங்கம் தண்ணீர் குடித்து கொண்டிருப்பதை கூட பாராமல் தன் தாகத்தை தீர்த்து கொள்ள அங்கு ஓடி வருமாம். என் உயிர் போனாலும் பரவாயில்லை, என் தாகம் தீர வேண்டும் என்று எண்ணத்தோடு அங்கு நீரோடையை தேடி ஓடி வருமாம். வந்து ஆசையோடு அங்கு நீரை குடிக்குமாம்.
.
மேற்கண்ட வசனத்தில் சங்கீதக்காரன் சொல்கிறார், அவருடைய ஆத்துமா மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல கர்த்தரை வாஞ்சித்து கதறுகிறதாம். நான் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அது போல அத்தனை தாகத்தோடு நான் தேவனை தேடவில்லை என்பதே உண்மையாகும்.
.
நம்மில் அநேகர் அதுப்போலத்தான் இருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை நாம் எத்தனை தாகத்தோடு படிக்கிறோம்? ஏதோ கடமைக்கு படிக்க வேண்டுமே என்கிற எண்ணத்தோடு படிப்பவர்கள் எத்தனைபேர்? கர்த்தரை நோக்கி உம்மை நேசிக்கிறேன் ஆண்டவரே என்று உள்ளன்போடு, தாகத்தோடு அவருடைய சமுகத்தை நாடி தேடி சென்றிருக்கிறோமா? வேலைக்கு போகுமுன் சற்றுநேரம், ஜெபித்து விட்டு நம் வேலைக்கு சென்று விடுகிறோம். எத்தனை குறைவுள்ளவர்களாக நாம் காணப்படுகிறோம்?
.
கர்த்தருடைய சபைக்கு, ஆலயத்திற்கு, நம் தேவனுடைய வீடு என்கிற தாகத்தோடு செல்கிறோமா? போய் அங்கு அனைவரையும் காண வேண்டும், பேச வேண்டும் என்கிற எண்ணத்தோடு செல்கிறோமா? அல்லது தேவன் இந்த நாளில் எனக்கு என்ன சொல்ல போகிறார் என்கிற தாகத்தோடு அவருடைய வீட்டிற்கு செல்கிறோமா?
.
கர்த்தருக்காக நான் என்ன செய்ய போகிறேன் என்று தாகத்தோடு அவருக்கு ஏதாவது செய்ய துடிக்கிறோமா? அல்லது அதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள் நானும் போய் என்னத்தை செய்ய என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டு இருக்கிறோமா?
.
எவ்வளவாய் எல்லாவிதத்திலும் நாம் குறைவுபட்டு காணப்படுகிறோம்! இந்த வருடம் தொடங்கி இப்போது இன்னும் இரண்டு மாதங்களில் முடியவும் போகிறது. போன வருடத்தில் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இந்த வருடமும் இருந்திருந்தால் என்ன பயன்? தேவனுக்குரிய காரியத்தில் நம்மில் எத்தனை பேர் தாகத்தோடு இருந்தோம்? தாகத்தோடு இருந்தவர்களும் அந்த தாகத்தை ஒருதடவை இரண்டு தடவை தீர்த்து கொண்டு, அப்படியே மங்கி போய் கொண்டிருக்கிறோமா? ஒரு தடவை நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.
.
நாம் அநேக உலக காரியங்களில் தாகமாய் இருக்கிறோம். வேலை செய்து அதன் சம்பளம் கிடைப்பதற்காக ஆவலாய் எதிர் நோக்கி காத்திருக்கிறோம். நம் பிள்ளைகள் நல்ல மார்க் எடுத்து, நல்ல காலேஜில் சேரும்படியாக, நம் பிள்ளைகளின் ரிசல்ட்டுக்காக ஆவலாய் காத்து கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தவறில்லை, ஆனால் கர்த்தருடைய காரியங்களில் நாம் இத்தனை தாகமும் ஆவலும் காட்டுகிறோமா என்றால் அதுதான் இல்லை!
.
இயேசுகிறிஸ்து அன்று சமாரிய ஸ்திரீயிடம் ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது’ – (யோவான் 4:14)என்றவர், சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது நான் தாகமாயிருக்கிறேன் என்றார். அவருடைய தாகம் தீருவது எப்போது? அவரை அறியாத அவரை தெரியாதபடி கோடி கோடியாய் ஜனம் அழிந்து கொண்டிருக்கிறதே, அவர்கள் கர்த்தரண்டை வரும்வரைக்கும் அவருடைய தாகம் தீராது. நமக்காக தமது சொந்த இரத்தத்தை சிந்தினவருடைய தாகத்தை தீர்ப்பது நமது கடமையல்லவா? அவருடைய தாகத்தை தீர்க்கும்படியாக நாம் தாகத்தோடு அவருக்காக உலகத்தை கலக்குகிறவர்களாக மாறுவோமா?
.
கர்த்தருக்காக நாம் தாகம் மட்டுமல்ல, அவர் நம்மை திருப்தியாக்குமட்டும் அவரையே பற்றி கொள்வோம். நம்முடைய தாகம் தீர்க்கும் ஜீவநதியான பரிசுத்தஆவியானவர் நம்முடைய தாகத்தை தீர்க்க அவரையே சார்ந்து கொள்வோம்.
.
கர்த்தருக்கடுத்த காரியங்களில் நாம் தாகம் கொள்ளவும், தாகம் தீர்க்கும் ஜீவநதியாகிய நம் தேவன் நம்முடைய தாகத்தை தீர்க்கவும் மீதமிருக்கிற இந்த வருடத்தின் இரண்டு மாதங்களிலும் வரும் காலங்களிலும் கர்த்தருக்காக காரியங்களை செய்ய தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக! ஆமென் அல்லேலூயா!
.
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
ஆத்துமா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கின்றேன்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல எங்கள் ஆத்துமாவும் உமக்காக வாஞ்சித்து கதறும்படியாக நாங்கள் உம்மேல் தாகம் உள்ளவர்களாக எங்களை மாற்றும் தகப்பனே. சிலுவையில் கிறிஸ்து அன்று தாகமாயிருக்கிறேன் என்றவரின் தாகத்தை தீர்க்கும்படியாக, நாங்கள் கர்த்தருக்காக, தாகத்தோடு, ஆவலோடு செய்ய வேண்டிய காரியங்களை செய்ய எங்களுக்கு உணர்த்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, நீங்கள் ஜெபத்தில் கேட்பது எதுவோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள் என்று சொன்ன இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் தகப்பனே, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு பதில் தருவீராக.
.
சாப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்யும் சகோதரி ஜென்னி அவர்களுக்கும், பேங்கில் வேலை செய்யும் அவர்களுடைய சகோதரிக்கும் ஏற்ற துணைகளை ஏற்ற நேரத்தில் நீர் ஒழுங்கு செய்து தரும்படியாக ஜெபிக்கிறோம். இரட்சிக்கப்பட்ட, கர்த்தருக்கு பயப்படுகிற பிள்ளைகளை இவர்களுக்கு துணைவர்களாக கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
.
திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியமில்லாத சகோதரி பிரியங்காவிற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தேவரீர் இந்த குடும்பத்திற்கு இரங்கி, அவர்களுக்கு பெரிய அதிசயத்தை செய்வீராக. தன் இருதயத்தை உம் சமுகத்தில் ஊற்றிவிட்ட அன்னாளுக்கு கிருபை பாராட்டினீரே இந்த சகோதரிக்கும் கிருபை செய்வீராக.
.
சகோதரி பெட்டி பாக்ஸ்டர் அவர்கள் படிக்கிற சைக்காலஜியில் நல்ல ஞானத்தை கொடுத்து படித்து, நல்ல மதிப்பெண்களோடு தேறவும், அவர்கள் சிறுபிள்ளைகள் மத்தியில் செய்ய நினைத்திருக்கிற ஊழியத்தை தேவரீர் ஆசீர்வதித்து, அவர்கள் அநேக சிறுபிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.
.
தகப்பனே, இந்த வேளையிலும் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிற ஒவ்வொரு வாலிப பிள்ளைகளுக்காகவும் உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் தகப்பனே, பிசாசானவன் கட்டி வைத்திருக்கிற இவர்களை இயேசுவின் நாமத்தில் விடுவிக்கிறோம். தங்களையும் அறியாமல், இந்த கொடிய பழக்கத்தில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் விடுவிக்கும்படியாக ஜெபிக்கிறோம். குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள் என்று வசனம் சொல்கிறதே, இவர்களை விடுதலையாக்கும். இந்த கட்டிலிருந்து அவர்கள் வெளிவந்து, இரட்சிப்பின் சந்தோஷத்தையும், சுதந்தரத்தையும் அனுபவிக்கட்டும் ஐயா. தங்கள் வாலிப நாட்களை உமக்காக செலவழிக்க கிருபை செய்யும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.