மிகவும் குறைவு

மிகவும் குறைவு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
‘கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக’ – (2தீமோத்தேயு 3:1).
.
இந்த நாட்களில் உலகத்தில் காண்கின்ற அநேக காரியங்கள் மிகவும் வித்தியாசமானது.
.
மிகப்பெரிய கட்டிடங்களை காண்கிறோம், ஆனால் அதற்குள் இருப்பவர்களுக்கோ உள்ளது மிகவும் குறுகிய மனப்பான்மை.
.
அதிகமாய் செலவழிக்கிறோம், ஆனால் பணத்திற்கு தகுந்த பொருட்கள் கிடைப்பதில்லை, கொஞ்சமாகத்தான் பெறுகிறோம்.
.
பெரிய பெரிய வீடுகள் உடையவர்களாயிருக்கிறோம், ஆனால் குடும்பமோ சிறியது. வசதிகள் அதிகம், ஆனால் அனுபவிக்க நேரமோ குறைவு.
.
மிகவும் நேரம் கழித்து தூங்க போகிறோம், மிகவும் நேரம் கழித்து எழுந்தாலும், மிகவும் அசதி என்றே எழுந்தரிக்கிறோம். அதிகமான நேரத்தை டிவி பார்க்க ஒதுக்குகிறோம், ஆனால் ஜெபிப்பதற்கு கொடுக்கும் நேரமோ மிகவும் குறைவு.
.
அதிகமாய் பேசுகிறோம், ஆனால் அன்பு செலுத்துவதோ மிகவும் குறைவு.
.
சந்திரனுக்கு போய் விட்டு வந்துவிட்டோம், ஆனால் பக்கத்து வீட்டுக்கு போவது மிகவும் கடினம்.
.
நிறைய திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் சாதித்ததோ மிகவும் குறைவு.
.
எல்லாவற்றிலும் அவசரத்தைக் காட்டுகிறோம், ஆனால் காத்திருப்பது மிகவும் கடினம். அதிக சம்பளம், ஆனால் சமாதானமோ குறைவு, அதிக பிரயாசம், ஆனால் வெற்றியோ குறைவு.
.
உலக சமாதானத்திற்கு பேச்சு வார்த்தை ஆனால் உள்நாட்டில் தீராத போர்.
.
அதிகமான உணவு பொருட்கள், ஆனால் சத்துள்ள உணவு மிகவும் குறைவு. வியாதியை கொண்டு வருவதே அதிகம்.
.
இரண்டு பேரின் சம்பாத்தியம் உண்டு, ஆனால் விவாக ரத்துக்கள் அதிகம், அழகிய வீடுகள், ஆனால் உடைந்த இருதயங்கள்.
.
இப்படிப்பட்டதாக இந்த உலகம் இந்த நாட்களில் காணப்படுகிறது. கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், தாமரை இலையில் பட்ட தண்ணீரைப் போல இந்த உலகத்தோடு இணைந்து வாழாமல், நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்ற விசுவாசத்தோடு வாழ வேண்டும்.
.
ஏனோக்கு தன் குடும்பத்தோடு இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், அவர் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்று வேதம் கூறுகிறது. ‘விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்’ (எபிரேயர் 11:5). இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நாம் தேவனோடு சஞ்சரிக்க முடியும், தேவனுக்கு பிரியமாய் இருக்க முடியும் என்பதற்கு அடையாளமாக ஏனோக்கின் சரித்திரம் நமக்கு சாட்சியாக இருக்கிறது.
.
பிரியமானவர்களே, இந்த உலகம் எப்படிச் சென்றாலும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், கர்த்தரோடு சஞ்சரித்தவர்களாக, அவரோடு இணைந்து வாழ்வோமானால், வரும் கோபத்திற்கு நாம் தப்பிக்க முடியும். அவரோடு நித்திய நித்தியமாய் வாழ முடியும். அப்படிப்பட்டதான வாழ்வை வாஞ்சிப்போம். ஏனோக்கைப் போல நாமும் எடுத்துக் கொள்ளப்படுவோம். ஆமென் அல்லேலூயா!
 
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
.
விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் காண்கிற அநேக காரியங்கள் நிலையற்றதாய், வேண்டப்படாததாய் இந்த உலகில் இருக்கிறதே, இவற்றை நாங்கள் நம்பி பின்வாங்கிப் போய்விடாதபடி, கர்த்தருக்குள் சஞ்சரித்த ஏனோக்கைப் போல வாழ்ந்து, கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட கிருபை செய்யும். இந்த உலகம் எங்களுக்கு சதம அல்ல என்று பரதேசிகளாய் இந்த உலகத்தில் வாழ்ந்து உம்முடைய வருகைக்கு காத்திருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு பதில் தருகிறவரே உமக்கே எங்கள் துதிகளை ஏறெடுக்கிறோம். இப்போதும் எங்கள் விண்ணப்பங்களை கேட்டு பதில் தருவீராக
.
நர்ஸாக பணிபுரியும் சகோதரி ஸ்டெல்லா கிரேசி அவர்கள் வேலைக்காக முயற்சிக்கிற வெளிநாட்டில் ஒரு வேலை கிடைக்கும்படி கிருபை செய்வீராக. அதனால் அவர்களுடைய கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு, நல்ல வாழ்வு அமைய கிருபை செய்வீராக. அவர்களுடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும்.
.
சகோதரி பிரிதா அவர்களின் வாழ்விலும் உள்ளத்திலும் காணப்படும் எல்லா மன உளைச்சல்களையும் மாற்றுவீராக. உலகம் தரக்கூடாத சமாதானத்தினால் அவர்களுடைய இருதயத்தை நிரப்புவீராக. அவர்களுடைய வேலையிடத்தில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றுவீராக. சமாதானமான ஒரு வாழ்வை கட்டளையிடும். உமக்கென்று உண்மையான சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
.
துபாயிலிருக்கும் சகோதரன் கில்பர்ட் தாமஸ் அவர்களுக்கு அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். தேவைகளை சந்திப்பீராக.
.
சகோதரி ஜெர்லின் ஜேக்சன் அவர்களுக்கு ஐந்து வருடங்களாக இருந்த வயிற்று வலியிலிருந்து அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு சுகத்தை கொடுத்தீரே உமக்கு கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். தொடர்ந்து சுகமாய் வாழ கிருபை செய்யும். உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.