..நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். – (1 பேதுரு 5:5).
. கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால், யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனமாயிருக்க வேண்டும். வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணங்கள் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.
.
டி.எல். மூடி என்ற தேவ ஊழியர் ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில், மிக பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும், ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, ‘இன்று மிக பிரமாதமாக பேசினீர்கள்’ என்று பாராட்டினார். உடனே மூடி, ‘இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்’ என்றார். அந்த நபர் குழம்பிப்போய் தனக்கு முன் எவரையும் காணாததினால், ‘எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?’ என்று கேட்டார். மூடி கூறினார், ‘நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, ‘மூடியாரே, இன்று உம் பிரசங்கம் அபாரம் என்று பாராட்டினான்’ என்றார்.
.
மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம், சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.
.
பொதுவாக, வேத வசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி இருக்க ஜாக்கிரதையாக இருப்போம். ஆனால் சில நேரங்களில் நற்காரியத்தை தேவ நாமத்தின் மகிமைக்ககாக செய்யும்போது, அதை பிறர் பாராட்டும்போது, நம்மையும் அறியாமல் பெருமையான எண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறது. மறுமுறை இத்தகைய நற்காரியம் செய்யும்போது, மனிதர்களின் பாராட்டை எதிர்ப்பார்க்கிறோம். அவாகள் பாராட்டாத போது செய்த செயல்களின் மீதும், பிறர் மீதும் சலிப்பு ஏற்படுகிறது.
.
ஆகவேதான் பிலிப்பியர் 2:3-ல் பவுல் கூறுகிறார், ‘ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் ஜீவனத்தின் பெருமையை மாம்சத்தின் இச்சையோடும், கண்களின் இச்சையோடும் பட்டியலிட்டுள்ளார்.
.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்த வாழ விரும்பும் ஒவ்வொருவரையும் பிசாசு தந்திரமாய் பாவத்தில் விழ வைக்க எண்ணுகிறான். அதில் குறிப்பாக மாயையான தாழ்மை என்னும் மறைமுக பெருமையையும் புகுத்தி விடுகிறான். சாத்தானின் இப்படிப்பட்ட தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் அதை இனம் கண்டறிந்து எதிர்த்து நிற்க முடியும். ஆகவே வேத வசனத்தை தெளிவாய் அறிந்தவர்களாக ஜெபத்திலே எப்போதும் விழிப்பாயிருக்க தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
பெருமையின் ஆவியை எடுத்தீரே
பொறுமையின் ஆவியை கொடுத்தீரே
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே
கண்ணோக்கி பாரும் தேவா – என்னை
கண்ணோக்கி பாரும் தேவா
.
|