உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. – (1யோவான் 2:15).
.
தங்கள் வழக்கம் போல காட்டு வாத்துக்கள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஒரு V வடிவிலே பறப்பதை கீழே இருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அவைகள் இருந்தன.
.
அந்த வாத்துகளோடு பறந்து கொண்டிருந்த சேனி என்ற வாத்து கீழே பார்த்தது. அப்பொழுது வாத்துக்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை கண்டது. அங்கு அநேக வாத்துக்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் சோளத்தை ஆவலோடு பொறுக்கி தின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், அவைகளோடு தானும் சென்று உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த எண்ணம் வந்த உடன், அது மற்ற வாத்துக்கள் சொல்வது ஒன்றும் கேட்காமல், ஒரு டைவ் அடித்து, கீழே மற்ற வாத்துக்களுடன் சேர்ந்து கொண்டது. அவைகளோடு சேர்ந்து, சோளத்தையும், மற்ற தானியங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. அது நினைத்தது, ‘திரும்ப என் கூட்ட வாத்துக்கள் வரும்போது, அவைகளோடு நான் சேர்ந்து கொள்வேன்’ என்று.
.
கொஞ்ச மாதங்கள் கழித்து, அந்த கூட்ட வாத்துக்கள், மேற்கு நோக்கி வர ஆரம்பித்தன. கீழே இருந்த சேனி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, பறக்க ஆரம்பித்தது. ஆனால் அது அங்கு சாப்பிட்டு சாப்பிட்டு, எடை கூடி, அதனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்க முடியவில்லை. அது திரும்ப திரும்ப முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அதன் கூட்டத்தில் இருந்த பறவைகள், அதை தாண்டி பறந்து சென்று விட்டன. சேனி, ‘நான் மறுபடியும் இவர்கள் வரும்போது எப்படியாவது அவர்களோடு சேர்ந்து விடுவேன்’ என்று எண்ணி கொண்டது.
.
அடுத்த முறையும் வந்தது. சேனி அவர்களோடு பறக்க ஆசைப்பட்டது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை, காரணம் அதனுடைய எடையும், பறக்காமலேயே இருந்தபடியால் அதனுடைய சிறகுகள் சக்தியையும் இழந்து விட்டன. அதனுடைய தோழ வாத்துக்கள் ஒவ்வொரு முறையும் சேனியை அழைத்தபடி பறந்து கொண்டிருந்தன. ஆனால் சேனியால் திரும்பவும் பறக்கவே முடியவில்லை.
.
மாதங்கள் ஆக, ஆக தோழ வாத்துக்கள் கூப்பிட்டாலும், அது அதை கவனிக்காமற் போக ஆரம்பித்தது. அது தான் ஒரு முறை உயர பறந்த வாத்து என்பதை மறந்து, ஒரு பண்ணை வாத்தாகவே மாறி விட்டது.
.
நாமும் கூட உயர பறப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனோடு உறவாடும்படியாக, அவர் வரும்போது அவரோடு மறுரூபமடைந்து, பறப்பவர்களாக மாறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும்போது அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்போது நம் கவனம் உலக காரியங்களில் ஈடுபாடு கொள்கிறதோ, அப்போது, நாம் நம் தரிசனத்தை இழந்தவர்களாக, அவைகளிலேயே சிக்கி கொள்கிறோம். மீண்டும் நாம் வரவேண்டும் என்று ஆசித்தாலும் வரமுடியாதபடி, அவை நம்மை இழுக்க ஆரம்பிக்கின்றன. உலக பாரங்களும், ஆசை இச்சைகளும் நம்மை மேலே பறக்க விடாதபடி தடை செய்து விடுகின்றன.
.
லோத்தின் மனைவி பின்னால் திரும்பி பார்க்காதே என்று எச்சரிக்கப்பட்டும், உலக இச்சைகளும், உலக இன்பங்களும் அவளை திரும்பி பார்க்க வைத்து விடுகின்றன. கர்த்தருக்கு பயந்த, கர்த்தரால் கைபிடித்து, அழிவிற்கு தப்ப வைக்கப்பட்ட குடும்பம், உலக ஆசையால், நினைத்து பார்க்கவே கூசும் அளவிற்கு பயங்கர பாவ வாழ்க்கைக்குள் கடந்து செல்ல வேண்டி வந்தது. அந்த மனைவி திரும்பி பார்க்காமல் இருந்திருந்தால், ஒரு அருமையான குடும்பமாக, ஒரு எடுத்துகாட்டான குடும்பமாக லோத்தின் குடும்பம் வேதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் உலகத்தின் மேல் வைத்த ஆசை அந்த குடும்பத்தையே நாசமடைய வைத்தது.
.
‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்’ என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அவைகளில் அன்பு வைத்தால் அந்த வாத்து எப்படி தான் ஆசைபட்டாலும் பறக்கவே முடியாமற் போயிற்றோ அந்த நிலை ஏற்படலாம். ‘இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது’ (2பேதுரு 3:7) என்று வேதம் கூறுகிறது. ஆகையால் ஒரு நாள் வானமும் பூமியும் அழிந்து போகும், இவை என்றும் நிலைத்திருப்பதில்லை. அதன் மேல் பற்று வைத்திருப்போர் நிலை என்னவாகும் என்பதை நாம் அறிவோம். கர்த்தர் மேல் நாம் பற்று வைப்போம், உலகத்தின் மேலும், அதின் ஆசை இச்சைகள் மேலும் நம் பற்றை வைக்காதபடி, கர்த்தர் வரும்போது நாம் அவரோடு பறக்கும்படியாக, எந்த உலக பாரங்களும், எந்த பற்றும் நம்மை தடை செய்யாதபடி நம்மை காத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாரங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
..
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
|