அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. – (யாத்திராகமம் 8:10).
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்கும்பொருட்டு, மோசேயை கர்த்தர் பார்வோனிடத்தில் அனுப்புகிறார். அவன் அவர்களை அனுப்ப மறுத்தபோது, பத்து வாதைகளால் கர்த்தர் எகிப்தை வாதித்தார். அதில் இரண்டாவது வாதையாக தவளைகளை தேசம் முழுவதும் வரப்பண்ணி, வாதித்தார்.
. ‘மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார். அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது’ (யாத்திராகமம் 8:5-6). தவளைகள் எகிப்து தேசத்தை மூடிக் கொண்டது. எதை எடுத்தாலும், எங்கு பார்த்தாலும் தவளைகள்! தவளைகள்! . கற்பனை செய்துப்பார்த்தால், அங்கு ஒரு பெண் மாவு பிசையும்படி பாத்திரத்தை எடுக்கிறாள், தவளை தாவி வந்து பாத்திரத்தில் குதிக்கிறது, படுக்கையில் போய் படுத்தால் தவளைகளால் படுக்கை நிறைந்திருக்கிறது, தள்ளிவிட்டு படுத்தால், மீண்டும் அநேக தவளைகள் குதித்து வந்து விழுகிறது. . வசனம் சொல்கிறது, ‘நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்’ (யாத்திராகமம் 8:3)சிறுப்பிள்ளைகள் பயந்து அலறுகிறார்கள், பெண்கள் தள்ளிவிட்டுப் பார்க்கிறார்கள், ஆண்கள் அடித்து சாகடிக்கிறார்கள், அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதை அடித்துக் கொல்கிறார்களோ, அதற்கு அதிகமாய் தவளைகள் வந்து நிரம்பின. மட்டுமல்ல, அவைகள் அவர்கள் மேல் ஏறி, கத்துகின்றன. ஒரு சிறிய எறும்பு நம்மேல் ஏறினாலே அதை எப்படி தட்டி விடுகிறோம், தவளைகள் ஏறி, குதித்து விளையாடுகின்றன. அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, தண்ணீர் குடிக்க முடியவில்லை, எங்கு பார்த்தாலும், தவளைகள் தவளைகள் தவளைகள்! . மிஸ்டர் பீன்ஸ் அவர்களுடைய கார்ட்டூனில் ஒரு தடவை தவளை முட்டைகளை எடுத்து வந்து தன்னுடைய பாத்ரூமில தண்ணீரில் விட்டு வைத்து, அவர் வெளியே போய் விட்டு வருவதற்குள் எல்லாம் தவளைகளாகி, வீடு நிரம்பி, எதையும் செய்ய முடியாமல், கடைசியாக பாடுபட்டு, தவளைகளை ஒரு பஸ்ஸில் ஏற்றி விடுகிறார். அதை இந்த வசனத்தின்படிதான் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். . ஒரு பல்லி வீட்டிற்குள் வந்து விட்டதென்றால் அதை துரத்துவதற்கு அத்தனை பாடுபடுகிற நாம், வீடு முழுவதும் அருவருப்பான தவளைகளால் நிறைந்திருந்தால் என்ன செய்ய முடியும்? எல்லாரும் பார்வோனிடம் போய் முறையிடச் சென்றால், பார்வோனே அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருக்கிறார். . கடைசியாக ‘பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தih நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்’ (யாத்திராகமம் 8:8) என்று அவர்களை அழைப்பிக்கிறார்;. எப்படியாவது இந்த தவளைகள் எங்களை விட்டுப் போனால் போதும் என்று நினைக்கிறான் என்று நாம் நினைத்தால் அது தவறு. ஏனென்றால் வசனம் சொல்கிறது, ‘அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான். அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது’ என்று மோசே சொல்கிறார். . ஜனங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள், தவளைகள் எப்படியாவது தங்களை விட்டு போனால் போதும் என்று நினைக்கிறார்கள், மோசேயும் சொல்கிறார், ‘நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக’ என்று. அதற்கு பார்வோன் சொன்ன வார்த்தை மிகவும் ஆச்சரியமானது, ஜனங்கள் படும் பாடுகளும், தானும் தன் குடும்பமும் படும் பாடுகளும் அவனுக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை, ‘நாளைக்கு’ என்று சொல்கிறார். கர்த்தர் உடனே விடுவிக்க விரும்பினாலும், பார்வோனின் பதில், நாளைக்கு என்பதால் கர்த்தராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு இரவையும்கூட தவளைகளோடு கழிக்க நினைத்த பார்வோனின் இருதயம் எப்படிப்பட்டது பாருங்கள்! . பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் கூட எத்தனையோ தவளைகள் நம்முடைய குடும்பத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. துன்பங்கள், துயரங்கள், வியாதிகள், மனவருத்தங்கள், கஷ்டங்கள் பாவங்கள், சாபங்கள் போன்ற அநேக தவளைகள் நம் வாழ்வை ஆக்கிரமித்து, நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்க வைக்கின்றன. நம்மை உண்டாக்கின ஆண்டவர் நம்மை அவற்றிலிருந்து விடுவிக்க அதுவும் உடனடியாக விடுதலையாக்க தயாராக இருக்கிறார். ஆனால் நாமும் பார்வோன் சொன்னதுப்போல நாளைக்கு என்று சொல்வோமானால் அது எத்தனை புத்தியீனமாய் இருக்கும் என்று யோசித்துப் பார்ப்போம். அது, ஆண்டவரே நான் இன்னும் ஒரு நாளையும் கூட என் பாவ வாழ்வில் கழிக்கட்டும், இன்னும் ஒரு நாளையும் கூட என் வியாதியோடும், கஷ்டங்களோடும் சகிக்கட்டும், நீர் நாளை வந்து என்னை குணமாக்கும், நாளை வந்து எனக்கு உதவி செய்யும் என்று சொல்வதுப் போலல்லவா? . நமக்கு உதவி செய்யும் கன்மலையாக கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். ‘எப்போது நான் வந்து உன்னிடத்திலுள்ள உன் தவளைகளை நீக்கி விடட்டும்’ என்று கேட்கும் கர்த்தரிடம் நம்முடைய தேவைகளை சொல்லி, இன்றே விடுதலை பெறுவோமா? பாவங்களை அறிக்கையிட்டு, இன்றே விடுதலை பெறுவோமா? இன்னுமொரு நாள் தவளைகளோடு உறங்காதபடி, உடனே விடுதலை பெற்றுக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா! .
உதவி வரும் கன்மலை நோக்கி பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்
. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் |