பரிபூரண வாழ்வு

பரிபூரண வாழ்வு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
‘திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்’. – (யோவான் 10:10)

ஒருஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவன், அவனது ஊரில் சர்க்கஸ் என்பது வந்ததே கிடையாது. ஒரு முறை சர்க்கஸ் வரப்போகிறது என்று அவன் கேள்விப்பட்டான். அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது. அவனது தகப்பனிடம், ‘அப்பா நான் சர்க்கஸ் பார்க்க வேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டான். அவனது அப்பாவிற்கு தெரியும், சர்க்கஸை அவன் தன் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று. ஆகவே அவனை அனுப்ப தீர்மானம் செய்தார்.
.
‘உன்னுடைய வேலைகள், வீட்டில் இருக்கும் வேலைகள் எல்லாம் முடித்தால் ஞாயிற்றுக் கிழமை உன்னை அனுப்புவேன்’ என்றார். ஞாயிறு வந்தது, காலையிலேயே அவன் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து, தன்னிடம் உள்ள சிறந்த உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு, தகப்பனிடம் சென்று நின்றான். அவனது அப்பா தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் அவனிடம் நூறு ரூபாயைக் கொடுத்து ‘போய் பார்’ என்று சொன்னார்.
.
அந்த நூறு ரூபாயை அவன் பார்ப்பது அதுவே முதல் முறை. சந்தோஷமாய் அதை எடுத்துக் கொண்டு சர்க்கஸ் வர இருந்த இடத்திற்கு ஓடினான். அங்கு பார்த்தால் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரையும் தள்ளி, முண்டியடித்து உள்ளே சென்றுப் பார்த்தால், அங்கு சர்க்கஸ் ஊர்வலம் பரேட் நடந்துக் கொண்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மிருகங்கள், உயரே கம்புகளின் மேலே நின்று உயரமான மனிதர்களாக நடந்து கொண்டிருந்த சர்க்கஸ் மனிதர்கள் கோமாளிகள் என்று வரிசையாக சென்றுக் கொண்டிருந்தார்கள்.
.
அதை எல்லாம் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஒரு கோமாளி வந்தவுடன் அவன் கையில் தன்னிடமிருந்த நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, கைகளை தட்டி சிரித்து, அந்த பரேட் முடிந்தவுடன் தன் வீட்டிற்கு சென்று விட்டான். அவன் நினைத்தான், அதுதான் சர்க்கஸ் என்று. அதன்பின் சர்க்கஸ் கூடாரத்தில் நடக்க இருக்கிற காரியங்களுக்கே பணம் என்பது தெரியாமல், அவன் வீட்டிற்கு சென்றான்.
.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, நாம் கிறிஸ்து நமக்கு கொடுத்த பரிபூரண ஜீவியத்தில் வாழ்கின்றோமா?
.
பரிபூரண ஜீவன் மறுமை உலகத்திற்கு மாத்திரமல்ல, நாம் இப்போது வாழ்கிற இம்மையின் ஜீவியத்திற்கும் சேர்த்துதான். அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரை ஏற்றுக் கொண்டோம், இரட்சிக்கப்பட்டோம், இதுபோதும், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று அந்த சிறுவனைப் போல போய் விடுகிறோமா?
.
கர்த்தருக்குள் நாம் கணுக்கால் அளவு அல்ல, முழங்கால் அளவு அல்ல, இடுப்பளவும் அல்ல, நீச்சல் ஆழம் மூழ்கி அவருக்குள் நாம் அவர் கொடுக்கும் அபிஷேகத்தை, அவரைப் போல மாறுவதை, அவர் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்; என்று எதிர்ப்பார்க்கிறார். அதற்காகத்தான் கர்த்தர் நம்மை அவருடைய பிள்ளைகளாய் அழைத்திருக்கிறார்.
.
‘எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்’(1கொரிந்தியர் 2:9-10) என்று வசனம் கூறுகிறது. இந்த வசனத்தின்படி மனுஷர் அவர் நமக்கு உண்டு பண்ணியிருப்பதை காணவில்லை, ஆனால் தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் சாதாரண மனிதர்கள் அனுபவிக்காததை கர்த்தர் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினதை பெற்றிருக்கிறோம்?
.
தேவன் நமக்காகவே எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் கொடுக்கப்பட்ட கொஞ்சத்தில் திருப்தி அடையாமல், பரிசுத்தத்தில், அன்பில், பொறுமையில், சந்தோஷத்தில், சமாதானத்தில் அவர் கொடுக்கும் பரிபூரணத்தை பெற வேண்டும். ‘அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்’ (யோவான் 1:16) என்று வசனம் கூறுகிறது. அந்த கிருபையின் மேல் கிருபை பெற நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டு, நீச்சல் ஆழம் செல்வோமா?
.
நமக்கு கொடுக்கப்பட்டதிலும், நாம் பெற்றிருப்பதிலும் திருப்தி அடையாமல், தேவன் வாக்குதத்தம் செய்திருக்கிற பரிபூரணத்தை அவருக்குள் நீச்சல் ஆழம் சென்று பெற்றுக் கொள்வோமா? ஆமென் அல்லேலூயா! 

.
 
முழங்கால்கள் முடக்கியது
முழங்கால் அளவல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
கொண்டு செல்லும் இயேசுவே

.
விண்ணக காற்றே நீர்

என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல
என் மேல் வந்தமர்ந்திடும்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் பெற்றிருக்கும் ஆவிக்குரிய அனுபவங்களிலும், ஆசீர்வாதங்களிலும் திருப்தி அடைந்து நின்றுவிடாதபடி, கிறிஸ்துவைப் போல நாங்கள் எல்லாவிதத்திலும் மாறும்படி தொடர்ந்து முன்னேறும்படி கிருபை செய்தருளும். கிறிஸ்து வாக்குதத்தம் செய்த பரிபூரண ஜீவனை நாங்கள் பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பலனுள்ளதாயிருக்கிறது என்று வேத வசனம் சொல்லுகிறபடி, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறதை பெற்றுக் கொள்ளுகிறோம் என்று விசுவாசிக்கிறோம் தகப்பனே.
.
சகோதரன் ஆலன் சாமுவேலுக்காக ரேபிஸாக இருக்கும் என்று வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவருக்காக நாங்கள் ஜெபித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோமே, அப்பா அவரை இழந்து தவிக்கிற அவருடைய பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆறுதலை தருவீராக. மூன்று மாதங்களுக்கு முன்பாக நாய்க்குட்டி கடித்திருந்தாலும், அதை லேசாக எடுத்துக் கொண்டதால் உயிருக்கே ஆபத்தாகி விட்டதே அப்பா, எந்த காரியத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நாங்கள் இந்த காரியத்தின் மூலம் அறிந்துக் கொண்டோமே அதற்காக உமக்கு நன்றி. சகோதரனை இழந்த துக்கத்திலிருந்து குடும்பத்தார் வெளிவர கிருபை செய்யும். ஆறுதலை தந்தருளும். தேற்றியருளும்.
.
சகோதரி ஹெப்சி அவர்களின் பக்கத்துவீட்டு சகோதரி உடல் நிலை மோசமாகி ஐசியூவில் இருப்பதால், அந்த சகோதரன் மட்டும் கர்த்தரை ஏற்றுக் கொண்டிருப்பதால், தேவன் தாமே அந்த சகோதரியை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். எந்த வியாதியாக இருந்தாலும், சுகமளிக்கும் கிறிஸ்துவின் வல்லமை இப்போது அ;நத சகோதரியின் மேல் பாய்ந்து சென்று சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம் சீக்கிரமாய் எழுந்து, கர்த்தர் எனக்கு சுகம் கொடுத்தார் என்று சாட்சி சொல்ல கிருபை செய்யும்.
.
சகோதரி ஸ்மைலின் மூன்றாமாண்டு இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை, கடன் தொல்லை, தகப்பனாருக்கு தினமும் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், தாயாருக்கு சபைக்கு செல்ல விருப்பமில்லை, சின்ன வயதிலேயே வேலைக்கு செல்லும் அவர்களின் தம்பி என்று பலவித குழப்ப சூழ்நிலைக்குள் சென்றுக் கொண்டிருக்கும் இந்த குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, எல்லா குழப்பத்தையும் மாற்றுவீராக. எல்ஷடாயாகிய உம்மை உறுதியாக பிடித்துக் கொண்டு, உலகத்தின் மேல் வெற்றி எடுக்கவும், கர்த்தரே எங்களுக்கு தஞ்சம் என்று உம்மையே பற்றிக் கொள்ளவும் கிருபை செய்யும். இந்த குடும்பத்தில் ஒரு நல்ல மாறுதலை உண்டுப்பண்ணுவீராக. முதலாவது கர்த்தரை உறுதியாக பற்றிக் கொள்ளும்போது, மற்ற ஆசீர்வாதங்கள் வருமே, தேவனை பற்றிக் கொள்ளவும், உம்மை நேசிக்கிற நேசத்தையும் இந்த குடும்பம் கண்டுக் கொள்ள கிருபை செய்யும்.
.
சகோதரி ஜெனிட்டா இவாஞ்சலின் அவர்கள் எம்.இ படித்து முடித்திருப்பதால் ஒரு நல்ல காலேஜில் லெக்சரராக வேலை கிடைக்கவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும்.
.
ஷார்ஜாவில் இருக்கும் சகோதரன் ஸ்டீபன் ராஜ் அவர்களின் மனைவிகர்த்தருக்குள் வளர்ந்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். அந்த சகோதரியின் சகோதரி டெல்சிஅவர்களுக்கு டெலிவரி டைம்மாக இருப்பதால், சுகப்பிரசவத்தை கட்டளையிடுவீராக. 
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.