…
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1கொரிந்தியர் 6:20)
ஒரு அமெரிக்கர் பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த சாதாரணமான ஒரு கடையில் கழுத்தில் அணியும் நெக்லஸ் ஒன்றை வாங்கினார். அதை எடுத்து கொண்டு அமெரிக்க வந்த போது, கஸ்டம்ஸில் மிக அதிகமாக அதற்கு வரியை போட்டார்கள். ‘என்ன தெரியவில்லையே, நான் வாங்கினதற்கும் மேலாக எத்தனையோ மடங்கு வரி போட்டிருக்கிறார்களே’ என்று நினைத்தவராய், அதை ஒரு நகை வியாபாரியிடம் கொண்டு ‘இதன் விலை எவ்வளவு’ என்று கேட்டார். அதை நன்கு ஆராய்ந்த வியாபாரி 25,000 டாலர்கள் கொடுப்பதாக கூறினார்.
.
இவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இதில் என்னவோ இருக்கிறது என்று நினைத்தவராக, ஒரு நிபுணரிடம் கொண்டு போய் காண்பித்தார். அதை அவர் சோதித்து பார்த்த போது, அது ஏன் அத்தனை விலை என்பதற்கான காரணத்தை கூறினார்.
.
அமெரிக்கரிடம் ஒரு பூதக்கண்ணாடியை கொடுத்து, ‘இப்போது அதில் பொறிக்கப்பட்டிருப்பதை பாருங்கள்’ என்று கூறினார். அவர் அதை பார்த்த போது, அதில், ‘நெப்போலியன் பானபார்ட் ஜோசபினுக்கு கொடுக்கும் பரிசு’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பெயரே அந்த நெக்லஸிற்கு அத்தனை பெரிய விலையை கொடுத்திருந்தது.
.
பிரியமானவர்களே, நாம் கூட மிகவும் விலைமதிக்க முடியாதவர்கள். நாம் செய்கிற சில நன்மையான காரியங்களினாலோ, நாம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதினாலோ அல்ல. நம்மை கிரயத்திற்கு கொண்டவர் மிகவும் உயர்ந்தவர், சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதால் நாம் விலையேறப்பெற்றவர்கள். தமது சொந்த இரத்தத்தை சிந்தி, கிறிஸ்து நம்மை தமக்காக சம்பாதித்தார். கிறிஸ்துவை நாம் ஏற்றுக் கொண்டவுடன் நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று நம் மேல் ஆவியானவர் அச்சாரமாக முத்திரை குத்திவிட்டபடியால், நாம் விலையேறப்பெற்றவர்கள்! விசேஷித்தவர்கள்!
.
அப்படி விலையேறப்பெற்ற நாம், சாதாரண மற்றவர்கள் செய்கிறது போல உலகப்பிரகாரமான காரியங்களில் ஈடுபட்டு, நம்முடைய தகுதியை இழந்து போகக்கூடாது. உதாரணத்திற்கு நாம் விலையுயர்ந்த வெளியே செல்வதற்காக போடும் உடையை உடுத்தி கொண்டு, சமையறைக்குள்ளோ, தோட்டத்திலோ வேலை செய்வதற்கு போவதில்லை. நாம் அணிந்திருக்கிற விலையுயர்ந்ததை பொறுத்துத்தான் நாம் சில காரியங்களை செய்யவோ, சில இடங்களுக்கு செல்லவோ தீர்மானிப்போம்.
.
அதுபோல, கிறிஸ்துவை நம்மில் உடையவர்களாகிய நாம், இந்த சரீரத்தில் தேவையற்ற காரியங்களை செய்ய கூடாது. கிறிஸ்துவை உடையவர்கள் புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ, விபச்சாரம் செய்வதோ ஒருபோதும் கூடவே கூடாது. ‘எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்’ (வசனம் 12)ல் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்வது போல நாமும் எல்லாவற்றையும் செய்ய அதிகாரம் இருந்தாலும், எதற்கும் அடிமைப்படாமல் கிரயத்திற்கு நம்மை கொண்டவரை வெட்கப்படுத்தாமல், அவருக்காக பரிசுத்தமாக வாழ வேண்டும்.
.
‘நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?’ (வசனம் 19) என்று எழுதியிருக்கிறது போல நாம் நம்முடையவர்கள் அல்ல, நாம் கர்த்தருக்கே உரியவர்கள். துணிந்து எந்த பாவ காரியத்தையும் செய்ய நமக்கு உரிமை இல்லை, அதிகாரம் இல்லை. ஆகவே எதற்கும் அடிமைப்படாமல், நம்மை தம் சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த கிறிஸ்துவுக்கு மகிமையாக வாழ்வோமாக! ஆமென் அல்லேலூயா!
.
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் அது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் கிறிஸ்துவை உடையவர்களாய் இருப்பதால் நாங்கள் விலையேறப்பெற்றவர்கள் என்பதை உணராமல் எங்கள் விருப்பத்திற்கு நாங்கள் வாழ்ந்த காரியங்களை எங்களுக்கு மன்னியும். நாங்கள் எங்களுடையவர்கள் அல்ல, கிறிஸ்துவினுடையவர்கள் என்பதால் எதற்கும் அடிமைப்படாமல், கர்த்தருக்கென்று சாட்சிகளாக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.