ஐந்து விரல் ஜெபம்

ஐந்து விரல் ஜெபம்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். –

(லூக்கா 18:1ன் முதல் பகுதி)

நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால்

எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகாமல்

ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாதலால் நாம்

தொடர்ந்து ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கு நாம் மனதில்

வைத்து கொண்டு ஜெபிக்க தக்கதாக எளிதான முறையில் ஞாபகம் வைக்க

சில குறிப்புகளை தருகிறோம். அதை பின்பற்றி நாம் எளிதாக ஐந்திலிருந்து

பத்து நிமிடங்கள் ஜெபித்துவிடலாம். நாம் கார் ஓட்டும் போது சிக்னலுக்காக

காத்திருக்கும்போதோ, வேலையிடத்தில் சிறிது ஓய்வெடுக்கும்போதோ, இந்த

சிறிய ஜெபத்தை நாம் செய்யலாம். நமது கரத்தை எடுத்து கொள்வோம். அதை

ஜெபிக்க கூப்பும்போது,

1. முதலாவது நமக்கு அருகில் இருப்பது பெருவிரல்: பெருவிரல் நமக்கு

அருகில் இருப்பதால், நமக்கு நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய

நண்பர்கள், நமக்கு நெருங்கிய ஊழியர்கள் என்று நெருங்கியவர்களுக்காக

ஜெபிக்கலாம். நமது ஞாபகத்தில் அவர்கள் இருப்பதால் அவர்களை

நினைத்து எளிதாக ஜெபிக்கலாம். மற்றும் பெருவிரல் முதல் விரலாக

இருப்பதால், தேவன் ஏற்ப்படுத்திய ஊழிய முறைப்படி முதல் ஊழியமாகிய

அப்போஸ்தல ஊழியத்தை செயபவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

2. இரண்டாவதாக இருப்பது சுட்டிகாட்டும் விரல்: நமக்கு போதிக்கும்

ஆசிரியர்கள், நமக்கு உடல் நிலையை சுட்டிகாட்டி வழிகாட்டும்

வைத்தியர்கள் என்று இவர்களுக்காக ஜெபிக்கலாம். மற்றும் சுட்டி காட்டும்

விரல் நீ செய்வது தவறு என்று ஒருவரை சுட்டி காட்டி திருத்துவதால்,

திருத்தும் ஊழயித்தை செய்யும் கிறிஸ்துவுக்குள் உண்மையான

தீர்க்கதரிசிகளுக்காக ஜெபிக்க வேண்டும்.

3. மூன்றாவது இருப்பது உயரமான விரல்: அது நம்மை ஆள்பவர்களையும்,

நமக்கு மேலான யாவரையும் குறிக்கிறது. நமது ஜனாதிபதி, பிரதம மந்திரி,

மற்ற மந்திரிகள், முதன் மந்திரி, நமது வேலையிடத்தில் நமக்கு மேலாக

இருப்பவர்கள், இவர்களை ஞாபகத்தில் கொண்டு வந்து ஜெபிக்கலாம்.

சுவிசேஷ வேலை செய்பவர்கள் பிரதான வேலையை செய்வதால் அவர்களை

இந்த நேரத்தில் நினைவில் கொண்டு வந்து ஜெபிக்க வேண்டும்.

4. நான்காவது இருப்பது மோதிர விரல்: இதை பெலவீன விரல் என்றும்

சொல்வார்கள். பியானோ கற்று கொடுப்பவர்களுக்கு தெரியும். இந்த விரல்

பெலவீனமானது என்று. ஆகவே நமது சமுதாயத்தில்

பெலவீனமானவர்களை, வியாதியில் இருப்பவர்களை, கஷ்டத்தில்

இருப்பவர்களை நினைத்து ஜெபிக்க வேண்டும். அதை போல, மோதிர விரல்

மேய்ப்பர்களை குறிக்கிறது. சபைகளை மேய்க்கின்ற பாஸ்டர்களை

நினைத்து நாம் ஜெபிக்க வேண்டும்.

5. கடைசியில் இருப்பது சுண்டு விரல்: சுண்டு விரல் நம்முடைய தேவைகளை

குறிக்கிறதாக இருக்கிறது. இப்போது நமது தேவைகளை கர்த்தரிடம் சொல்லி

கடைசியாக நமக்காக ஜெபிக்க வேண்டும். நமக்கு காதில் ஏதாவது

குடையும்போது, இந்த சுண்டு விரலே நம் காதிற்குள் சென்று குடைய வைக்க

முடியும். அதுப்போல சுண்டு விரல் போதகர்களை குறிக்கிறது. அவர்களின்

போதகமே நமது காதிற்குள் செல்லுகிறபடியால், நாம் இந்த சமயத்தில்

போதகர்களை நினைத்து ஜெபிக்க வேண்டும்.

‘பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின்

வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி

அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத்

தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும்

போதகராகவும் ஏற்படுத்தினார்’ (எபேசியர் 4:12-13) என்று கர்த்தர் கொடுத்த

ஊழிய முறையை நாம் இந்த இடத்தில் பார்க்கிறோம். இவைகளை நாம்

ஒவ்வொரு விரலுக்கு ஈடாக நினைத்து, அந்த ஊழியம் செய்பவர்களுக்காக

ஜெபிக்கும்போது, கர்த்தருடைய இராஜ்யம் பரவுவதற்கும், பரிசுத்தவான்கள்

சீர் பொருந்தும் பொருட்டும் நாம் தொடர்ந்து ஜெபிப்பதற்கு ஏதுவாகும்.

அதினால் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்.

நாம் தினமும் இத்தகைய ஜெபத்தை ஒரு ஐந்து நிமிடங்கள், அல்லது பத்து

நிமிடங்கள் ஜெபிக்கும்போது அது எத்தனை பெரிய மாற்றத்தை சபைகளில்

ஏற்படுத்தும்! நமது தேசத்தில் ஏற்படுத்தும்! தினமும் நமது விரல்களை

நினைவு கூர்ந்து ஜெபித்து, தேசத்தையும் சபைகளையும் ஜெபத்தால்

அசைப்போமாக! தேவனின் நாமம் மகிமைப்படுவதாக! ஆமென்

அல்லேலூயா!

தேசத்தை ஆள்பவர்க்காய் மறவாமல் ஜெபித்திடுவோம்

அதிகாரம் உடையவர்க்காய் அவசியம் ஜெபித்திடுவோம்

ஏழைகள் எளியவர்க்காய் உருக்கமாய் ஜெபித்திடுவோம்

நியாயங்கள் நிலைத்திடவே விண்ணப்பம் செய்திடுவோம்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தி வரும் நல்ல தகப்பனே, எங்களை

அதிகமாய் ஜெபிக்க ஏவுகிறவரே, எங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் நாங்கள்

ஜெபிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஜெப ஆவியினால் எங்களை நிரப்பும்.

ஐந்து விரல்களை கொண்டு ஐந்து வகையான ஜெபத்தை நாங்கள்

செய்யும்படியாக எங்களுக்கு கற்று கொடுத்த தயவிற்காக நன்றி. நாங்கள்

தொடர்ந்து ஊழியர்களுக்காகவும், சபைகளுக்காகவும்,

போதகர்களுக்காகவும், எங்களை ஆளுபவர்களுக்காகவும் ஜெபித்து,

உம்முடைய பதிலை பெற்று, நன்மையான காரியங்களை பெற்று கொள்ள

கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில்

கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்

ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.