ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;
பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. – 2
கொரிந்தியர் 5:17).
.
அந்த பட்டணத்திற்கு புதிதாக வந்த நபர், சாப்பிடும்படி அருகிலுள்ள பெரிய
ஹோட்டலுக்குள் நுழைந்தார். ஹோட்டல் பெரியதாக இருந்தாலும் மக்கள்
கூட்டம் எதுவும் தென்படவில்லை. வெளியே பார்வைக்கு ஹோட்டல்
நன்றாக இருந்தாலும் உள்ளே சுத்தம் இல்லை. தேவையான வெளிச்சம்
இல்லாதபடி ஒரே இருட்டாக இருந்தது. எந்த மேஜைக்கு சென்றாலும்
ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தன. தவிர்க்க முடியாத நிலையில்
சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட தொடங்கினார். ஆனாலும் குழம்பின்
வாசைன குமட்டி கொண்டு வரவே அரைகுறையாக சாப்பிட்டு கைகழுவி
விட்டு வெளியே வந்தார். எவ்வளவு பெரிய கட்டிடம், பெரிய போர்டு
இருந்தாலும் உள்ளே எதுவும் நன்றாக இல்லையே என்றெண்ணிக்
கொண்டு தன் ஊருக்கு பஸ் ஏறினார்.
.
இரண்டு வருடங்களுக்கு பிறகு, அதே நபர் அந்த பட்டணத்திற்கு வந்தார்.
உடனே இரண்டு வருடங்களுக்கு முன்பு தனக்கேற்ப்பட்ட கசப்பான
அனுபவத்தை மறுபடியும் நினைத்தவராய் பஸ் ஸ்டேண்டிற்கு
எதிரேயிருக்கிற அந்த ஹோட்டலை பார்த்தார். அவருடைய கண்களை
அவராலேயே நம்ப முடியவில்லை.. ஏனெனில் ஹோட்டலின் முன்புறம்
நிறைய கார்கள், பைக்குகள், மனிதர்கள் என்று கூட்டம் அலைமோதி
கொண்டிருந்தது. அநேகருக்கு உள்ளே இடம் போதவில்லையாகையால்
இடத்திற்காக வெளியே காத்து கொண்டு நின்றனர். உள்ளே
நுழைந்தவருக்கு இன்னும் அதிக ஆச்சரியம். வண்ண வண்ண
விளக்குகளுடன் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு மனிதர்களால்
நிரம்பியிருந்தது. என்னவொரு மாற்றம்! இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈ
விரட்டி கொண்டிருந்தார்கள். இப்போதோ தலைகீழ் மாற்றம் யாரையாவது
விசாரித்து காரணமறியலாமென்றால் கூட்டத்தில் முடியவில்லை.
அப்பொழுதுதான் அங்கு தொங்கி கொண்டிருந்த புதிய போர்டு ஒன்று
தென்பட்டது. அதில் புதிய நிர்வகத்தின் கீழ் (Under New Management)
இந்த ஹோட்டல் இயங்குகிறது என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புதிய
மாற்றதத்திற்கு காரணம் புதிய மெனேஜ்மென்ட்.
.
அன்பு சகோதரனே, சகோதரியே, நீ சாத்தானின் முழு (பாவத்தின்)
அதிகாரத்தின் கீழ் இருப்பாயானால், உன் வாழ்விற்கு மதிப்பில்லாமல்
மரியாதை இல்லாமல் ஆவிக்குரிய குருட்டாட்டத்தில், பாவத்தினால்
கட்டப்பட்டு, நஷ்டமடைந்த மனிதனை போல் காணப்படுவாய். வெளியே
நல்லவனை போல, பக்திமானை போல, எல்லாருக்கும்
பயன்படுகிறவர்களை போல இருந்தாலும் உள்ளேயோ எல்லாவித பாவ
கறைகளினாலும், நாற்றமெடுக்கும் வாழ்வினாலும் மோசமான நிலையில்
காணப்படுவாய்.
.
ஓரு நல்ல முதலாளி மோசமான நிலையில் உள்ள ஒரு ஹோட்டலை நல்ல
நிலைக்கு மாற்ற முடியுமானால் நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து
உன் வாழ்வை மாற்ற எவ்வளவு வல்லமையுளள்வர் என்பதை நாம் எண்ணி
பார்க்க வேண்டும். எனவே இந்நாளில் புதிய முதலாளியாகிய
இயேசுகிறிஸ்துவிடம் முழுமனதோடு உன் வாழ்க்கையை நடத்தும்படி
கேட்கும்போது, அவர் வந்து உன் வாழ்க்கையை ஆளுகை செய்வார்.
பழைய முதலாளியாகிய சாத்தானுக்கு முழுமையாக விடை கொடுத்து
விட்டு உன் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்பு கொடு. அவர் வந்து உன்
வாழ்க்கையை நடத்தும்போது, உன் வாழ்க்கை வித்தியாசமாய் மாறும். ஒரு
பிரகாசமான எதிர்காலத்தை, நித்திய ஜீவனை பெற்று கொள்வாய்.
‘அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை
அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல,
இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை
நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள்
அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே
அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு
மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு,
தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக்
கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்’ – (ரோமர் 6:19-22).
.
அந்த அற்புதம் நடந்த கதை
மிக ஆச்சரிய அற்புதமே
அற்புதங்களிலெல்லாம் சிறந்த
ஆச்சரிய அற்புதமே
அற்புதங்களிலெல்லாம் சிறந்த ஆச்சரிய அற்புதமே
நடத்தியவர் தேவன்
நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை
அனுபவம் புதுமையதால்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல
வேளைக்காக உம்மை துதிக்கிறோம். இதுவரை என்னை ஆண்டு
கொண்டிருந்த சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து என்னை
விடுவிக்கும்படியாக புதிய எஜமானராகிய இயேசுகிறிஸ்துவிற்கு என்னை
ஒப்பு கொடுக்கிறேன். அவரே என்னை ஆண்டு கொண்டு, என் வாழ்வை
எடுத்து நடத்துவாராக. என் வாழ்க்கையில் காணப்படும்
அலங்கோலங்களை மாற்றி, அலங்காரமானதாக உள்ளேயும் வெளியேயும்
காணப்பட தக்கதாக என்னை மாற்றுவாராக. என்னை முற்றிலும்
அவருடைய கரத்தில் அர்ப்பணிக்கிறேன். என்னை ஏற்று கொண்டு
வழிநடத்த போகிற தயவிற்காக கோடி நன்றி தகப்பனே. எங்கள்
ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே
ஆமென்.