என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். – (பிலிப்பியர் 4:19)
ஒரு முறை ஒரு வேலை வாய்ப்புக்கான இன்டர்வியூவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘நீங்கள் ஒரு புயலடிக்கும் இரவு நேரத்தில் ஒரு பஸ் நிற்கும் இடத்தில் ஒரு காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் காரில் ஒருவர் மட்டும் ஏறி கொள்ள இடம் இருக்கிறது. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஒரு வயதான பாட்டியம்மா, குளிரில் நடுங்கியபடி, இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் மரித்து விடுவார்கள் போல நின்று கொண்டிருக்கிறார்கள். மற்றவர், உங்களுடைய பழைய கால நண்பர், ஒரு முறை உங்கள் உயிரை காப்பாற்றியவர், மற்றவர் நீங்கள் விரும்பும் வண்ணம் இருக்கும் ஒரு பெண் (அல்லது ஆண்). இந்த மூன்று பேரில் யாரை நீங்கள் காரில் ஏற்றுவீர்கள்?’ என்று கேட்டிருந்தனர்.
.
அநேகர் என்ன எழுதுவது என்று திணறி கொண்டிருந்தனர். ஒருவர் மாத்திரம் சரியாக எழுதி, வேலையை தட்டி சென்றார். நீங்களாயிருந்தால் என்ன எழுதி இருப்பீர்கள் கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்!
.
பாவம் பாட்டியம்மா, நான் இப்போது ஏற்றி கொண்டு போகவில்லை என்றால் மரித்து போவார்கள். ஆனால் என்னை காப்பாற்றிய என் நண்பனை நான் இப்போது காப்பாற்றி, நன்றி கடனை தீர்த்து கொள்ளலாம், அல்லது, நான் விரும்பும் பெண் (ஆண்), இப்போது காப்பாற்றாவிட்டால், எப்போது காப்பாற்றுவது?
.
அந்த வேலையை தட்டி சென்ற வாலிபர், ‘என் காரின் சாவியை என் நண்பனிடம் கொடுத்து, பாட்டியம்மாவை நீ ஆஸ்பத்திரிக்கு கூட்டி கொண்டு போ என்று சொல்லி அவர்கள் இரண்டு பேரையும் அனுப்பி விட்டு, நான் விரும்பும் பெண்ணோடு பஸ்சுக்காக காத்திருந்திருப்பேன்’என்று எழுதியிருந்தார்.
.
இது நமக்கு ஒரு சிரிப்புக்காக எழுதப்பட்டிருந்தாலும், அநேக நேரங்களில் மற்றவர்களின் தேவைகளை நம்மால் சந்திக்க முடிவதில்லை. ஒரு சில நேரங்களில் மற்றவர்களுடைய தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவியாக இருக்க முடியும். ஆனால் அநேக நேரங்களில் அது நம்மால் முடிவதில்லை.
.
அது போல நம்முடைய தேவைகளும் நமக்கு அநேகம் உண்டு. அவை எல்லாவற்றையும் நம்மாலும் சந்திக்க முடிவதில்லை. யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்று சில வேளைகளில் நாம் ஏங்குகிறவர்களாக கூட இருந்திருக்கலாம்.
.
பிரியமானவர்களே, நமக்கு ஒரு தேவன் உண்டு. அவர் நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திப்பவர். அவருடைய நாமம் யெகோவா யீரே! ஆபிரகாமின் தேவையை சந்தித்த தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். தன்னுடைய ஒரே நேச மகனாக ஈசாக்கை பலிகொடுக்க தேவன் சொன்னபோது, கீழ்ப்படிந்து, அவனை பலி கொடுக்க ஆயத்தமானபோது, தேவன் அதை தடுத்தது மாத்திரமல்ல, பலியை கொடுக்க ஒரு ஆட்டையும் காண்பித்து கொடுத்தார்.
.
ஆம், நம் தேவன் நம்முடைய இக்கட்டான நிலைமைகளை அறிந்த தேவன். கடைசி நிமிஷத்திலும் உதவ அவரால் முடியும். நம் தேவைகளை எல்லாவற்றையும், நம்முடைய குறைவுகள் எல்லாவற்றையும், ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ என்ற வாக்குதத்தத்தின்படி, அவர் நிச்சயமாய் நிறைவாக்குவார்.
.
நம் குறைவுகளில், நம் தேவைகளில் அவரையே பற்றி கொள்வோம். தேவனே எனக்கு தாரும் என்று கேட்போம். என் தேவைகளை சந்திக்க வல்லவர் நீர் மாத்திரமே, நீரே சந்தித்தருளும் என்று அவரிடம் மன்றாடும்போது, தேவன் நம் குறைவுகளை நிறைவாக்கி, நம்மை சந்தோஷப்படுத்துவார். ஆமென் அல்லேலூயா!
.
யெகோவாயீரே எல்லாம் தருபவர்
போதுமானவர் அவர் அவர்
என் தேவைகள் எல்லாவற்றையும்
என் தேவன் தந்து என்னை ஆசீர்வதிப்பார்
தம்முடைய தூதர்கட்கு கட்டளையிட்டு
யெகோவாயீரே காத்து கொள்வார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுடைய எல்லா குறைகளையும், தேவைகளையும் அறிந்த தேவனே, அவைகளை நிறைவாக்க உம்மால் மட்டுமே கூடும் ஐயா. உலகத்தாரால் எங்கள் குறைகளை நீக்க முடியாது ஐயா. நீரே சந்தித்தருளும். நீரே நிறைவாக்கியருளும். எங்கள் இக்கட்டிலிருந்து எங்களை விடுவித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.