‘திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்’. – (யோவான் 10:10)
. ஒருஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவன், அவனது ஊரில் சர்க்கஸ் என்பது வந்ததே கிடையாது. ஒரு முறை சர்க்கஸ் வரப்போகிறது என்று அவன் கேள்விப்பட்டான். அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது. அவனது தகப்பனிடம், ‘அப்பா நான் சர்க்கஸ் பார்க்க வேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டான். அவனது அப்பாவிற்கு தெரியும், சர்க்கஸை அவன் தன் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று. ஆகவே அவனை அனுப்ப தீர்மானம் செய்தார். . ‘உன்னுடைய வேலைகள், வீட்டில் இருக்கும் வேலைகள் எல்லாம் முடித்தால் ஞாயிற்றுக் கிழமை உன்னை அனுப்புவேன்’ என்றார். ஞாயிறு வந்தது, காலையிலேயே அவன் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து, தன்னிடம் உள்ள சிறந்த உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு, தகப்பனிடம் சென்று நின்றான். அவனது அப்பா தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் அவனிடம் நூறு ரூபாயைக் கொடுத்து ‘போய் பார்’ என்று சொன்னார். . அந்த நூறு ரூபாயை அவன் பார்ப்பது அதுவே முதல் முறை. சந்தோஷமாய் அதை எடுத்துக் கொண்டு சர்க்கஸ் வர இருந்த இடத்திற்கு ஓடினான். அங்கு பார்த்தால் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரையும் தள்ளி, முண்டியடித்து உள்ளே சென்றுப் பார்த்தால், அங்கு சர்க்கஸ் ஊர்வலம் பரேட் நடந்துக் கொண்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மிருகங்கள், உயரே கம்புகளின் மேலே நின்று உயரமான மனிதர்களாக நடந்து கொண்டிருந்த சர்க்கஸ் மனிதர்கள் கோமாளிகள் என்று வரிசையாக சென்றுக் கொண்டிருந்தார்கள். . அதை எல்லாம் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஒரு கோமாளி வந்தவுடன் அவன் கையில் தன்னிடமிருந்த நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, கைகளை தட்டி சிரித்து, அந்த பரேட் முடிந்தவுடன் தன் வீட்டிற்கு சென்று விட்டான். அவன் நினைத்தான், அதுதான் சர்க்கஸ் என்று. அதன்பின் சர்க்கஸ் கூடாரத்தில் நடக்க இருக்கிற காரியங்களுக்கே பணம் என்பது தெரியாமல், அவன் வீட்டிற்கு சென்றான். . திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, நாம் கிறிஸ்து நமக்கு கொடுத்த பரிபூரண ஜீவியத்தில் வாழ்கின்றோமா? . பரிபூரண ஜீவன் மறுமை உலகத்திற்கு மாத்திரமல்ல, நாம் இப்போது வாழ்கிற இம்மையின் ஜீவியத்திற்கும் சேர்த்துதான். அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரை ஏற்றுக் கொண்டோம், இரட்சிக்கப்பட்டோம், இதுபோதும், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று அந்த சிறுவனைப் போல போய் விடுகிறோமா? . கர்த்தருக்குள் நாம் கணுக்கால் அளவு அல்ல, முழங்கால் அளவு அல்ல, இடுப்பளவும் அல்ல, நீச்சல் ஆழம் மூழ்கி அவருக்குள் நாம் அவர் கொடுக்கும் அபிஷேகத்தை, அவரைப் போல மாறுவதை, அவர் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்; என்று எதிர்ப்பார்க்கிறார். அதற்காகத்தான் கர்த்தர் நம்மை அவருடைய பிள்ளைகளாய் அழைத்திருக்கிறார். . ‘எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்’(1கொரிந்தியர் 2:9-10) என்று வசனம் கூறுகிறது. இந்த வசனத்தின்படி மனுஷர் அவர் நமக்கு உண்டு பண்ணியிருப்பதை காணவில்லை, ஆனால் தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் சாதாரண மனிதர்கள் அனுபவிக்காததை கர்த்தர் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினதை பெற்றிருக்கிறோம்? . தேவன் நமக்காகவே எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் கொடுக்கப்பட்ட கொஞ்சத்தில் திருப்தி அடையாமல், பரிசுத்தத்தில், அன்பில், பொறுமையில், சந்தோஷத்தில், சமாதானத்தில் அவர் கொடுக்கும் பரிபூரணத்தை பெற வேண்டும். ‘அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்’ (யோவான் 1:16) என்று வசனம் கூறுகிறது. அந்த கிருபையின் மேல் கிருபை பெற நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டு, நீச்சல் ஆழம் செல்வோமா? . நமக்கு கொடுக்கப்பட்டதிலும், நாம் பெற்றிருப்பதிலும் திருப்தி அடையாமல், தேவன் வாக்குதத்தம் செய்திருக்கிற பரிபூரணத்தை அவருக்குள் நீச்சல் ஆழம் சென்று பெற்றுக் கொள்வோமா? ஆமென் அல்லேலூயா! .
முழங்கால்கள் முடக்கியது
முழங்கால் அளவல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
கொண்டு செல்லும் இயேசுவே
. விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் வெண்புறாவைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் |