இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். – (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).
. கர்னல் இங்கர்சால் ஒரு பெரிய நாத்திகவாதி. கடவுளே இல்லை என்று சொல்லி அநேக புத்தக்களை எழுதினார். மாத்திரமல்ல, அநேக கிறிஸ்தவ ஊழியர்களை தர்க்கத்திற்கு அழைப்பது அவருடைய வழக்கமாயிருந்தது.
.
ஒருமுறை அந்த நாத்திகவாதி நடத்திய புத்திசாலிகளின் பாசறைக்கு தேவ ஊழியரான ஹென்றிவார்டு சென்றிருந்தார். தன்னுடைய நாத்திகவாத கூட்டத்திற்கு அந்த போதகர் வந்திருப்பதை பார்த்ததும் கர்னலுக்கு இன்னும் உற்சாகம் வந்து விட்டது. கடவுள் இல்லை என்பதற்கு தன்னுடைய வாதத்தை அடுக்கடுக்காக அடுக்கி திறம்பட பேசினார். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாது. கடவுள் என்பதே ஒரு பெரிய தத்துவம் என்று பல உதாரணங்கள், கதைகள் மூலமாக விளக்கி சொல்லி கொண்டே இருந்தார்.
.
ஆனால் போதகரோ ஒன்றும் பேசாமல் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். கூட்டத்திலுள்ளவர்கள் எல்லாரும் போதகர் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்படி கேட்டார்கள். அதற்கு அந்த முதிய போதகர் எழுந்து, ‘நான் இந்த கூட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது, ஒரு சம்பவம் நடந்தது. நான் ஒரு முக்கியமான ரோடு வழியாக வந்து கொண்டிருந்தேன். அங்கே இரண்டு கால்களும் ஊனமான ஒரு மனுஷன் தன் கையின் இடுக்கிலே இரண்டு ஊன்று கோல்களை வைத்து கஷ்டப்பட்டு அநத ரோடடை கடக்க முயற்சித்தான். அந்த ரோடு பள்ளமாக, சேறும் சகதியுமாக இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு முரடன் ஓடி வந்தான். ‘உனக்கு ஏன் இந்த ஊன்றுகோல்?’ என்று சொல்லி, அந்த முடவனுடைய இரண்டு கோல்களையும் பிடுங்கி கொண்டு ஓட ஆரம்பித்தான். பாவம் அந்த முடவன், அழுக்குதண்ணீரில் விழுந்து பரிதாபமாய் கதறினான். அந்த கூககுரல் இன்னும் என் காதில் கேட்டு கொண்டிருக்கிறது’ என்று கூறினார்.
.
உடனே அந்த நாத்திகவாதி கோபத்துடன், ‘அந்த முரடன் சுத்த அயோக்கிய பயலாக இருக்க வேண்டும், ஈவு இரக்கமில்லாத அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்’ என்று கூறினார். ஜனங்களும் யார் அவன்? என்று கேட்டனர் போதகர் உணர்ச்சி வசத்துடன், அங்கிருந்த மக்களை பார்த்து ‘ நான் உண்மையை சொல்லுகிறேன். மனிதனுடைய ஆத்துமாக ஊனமடைந்திருக்கிறது. அவன் எப்படியாவது கடவுள் பக்தி என்ற ஊன்று கோலை ஊன்றி எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் எனதருமை நாத்திகவாதிகளான கர்னல் போன்றவர்களோ, தேவ பக்தி என்ற ஊன்று கோல்களை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் மனித ஆத்துமா நம்பிக்கையில்லாமல் தவிக்கிறது. மனித ஆத்துமாவுக்குள்ளே இருக்கும் கிறிஸ்தவத்தை பிடுங்குவதுதான் உங்கள் தொழிலானால் அதை மனம் நிறைந்த அளவுக்கு செய்யுங்கள். மரத்தை வளர்ப்பது கடினம், நீங்களோ அதை வெட்டி வீழ்த்துகிறீர்கள்’ என்றார். அவர் பேசி முடித்தவுடன் பெரும் அமைதி நிலவியது.
.
இந்த நாட்களில் தேவையற்ற புத்தகங்களை படித்து, தேவன் இல்லை என்கிற எண்ணம் வாலிபர் பலருக்கு உருவாகி இருக்கிறது. அவர்கள் தேவையுள்ள புத்தகமாகிய வேதத்தை விட்டுவிட்டு, தேவையற்ற, குப்பையும், ஒன்றுக்கும் உதவாததுமாகிய தத்துவங்களை ஏற்று கொண்டு, தங்களுக்கே கேடு விளைவித்து கொண்டிருக்கிறார்கள்.
.
மனிதன் படைக்கப்படும்போதே அவனுடைய இருதயத்தில் தேவனை தேடும்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் தேவன் இல்லை என்று சொல்லும்போது, அந்த இடம் வெற்றிடமாக மாறி விடுகிறது. வெற்றிடமாக உள்ள அந்த இடத்தில் வேறு எதை வைத்தாலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.
.
மற்றும், உண்மையான தேவனை அவன் கண்டுபிடிக்கும் வரை அவனது இருதயத்தில் வெற்றிடமே காணப்படுகிறது. அதை அவன் நிரப்புவதற்காக எங்கெங்கோ தேவனை தேடி அலைகிறான். ‘இருக்கின்ற இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே’ என்று பண்டைய புலவன் பாடி வைத்து போனான். ஆம், அவர் இருக்கும் இடம் நம் இருதயமே. அதில் அவரை அழையாதபடி, இல்லாத இடங்களை நோக்கி, எங்கெங்கோ சென்று, தவமிருந்து அந்த தெய்வத்தை, தன்னுடைய வெற்றிடமாகிய இருதயத்தில் வைக்கும்படி தேடி கொண்டிருக்கிறான். உண்மையான தெய்வம், அவர்கள் தேடி செல்லும் இடங்களில் அல்ல என்ற உண்மையை அந்த மனிதன் அறிந்து கொள்வது மிகவும் கடினமானதொன்றாகும்.
.
மனிதனை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு என்பதை அவன் அறிந்தானானால் எத்தனை நலமாயிருக்கும்! மற்ற தெய்வங்களை தேடி அவன் ஒவ்வொரு இடமாக செல்கிறான். ஆனால், நம்மை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு. அவர் தான் இயேசுகிறிஸ்து. ‘நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்’ –(யோவான் 15:16) என்று சொன்ன ஒரே தேவன் இயேசுகிறிஸ்து மட்டும்தான். நாம் இருக்கிற இடத்தை தேடி வந்து, தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டு, இப்போது நீங்கள் படிக்கும் இந்த வார்த்தைகள் மூலம் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாரே, நீங்கள் அவரை தேடி போகவில்லை, அவர் உங்களை தேடி வந்திருக்கிறார். நீங்கள் அவரை ஏற்று கொள்ளும்போது, அவர் உங்களுக்குள்ளே வந்து உங்கள் வாழ்க்கையை மாற்றி, வெறுமையாயிருக்கிற காலியிடத்தை நிரப்பி, உங்களை அற்புதமாக நடத்துவார். ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்’ – (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) என்று நம் இருதய கதவை தட்டி கொண்டிருக்கும் தேவனுக்கு நம் இருதய கதவுகளை திறப்போமா? நாம் திறக்கும்பட்சத்தில் அவர் உள்ளே பிரவேசித்து, நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே
...
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மீட்பரும் தேவனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ
.
|