‘நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?’ – மத்தேயு 13:33.
. எங்களுடைய நகரிலே ஒரு பெரிய பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. எனது நண்பர்களுடன் நானும் அங்கு சென்றிருந்தேன். கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளின் மத்தியில் சிறு சிறு கடைகளும் அனைத்துவிதமான விளையாட்டுகளும், விதவிதமான திண்பண்டங்களும் பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தன.
.
இதில் ஒரு பிரமாண்டமான, மிகவும் வித்தியாசமான ராட்டினமொன்று (Giant Wheel) அனைவரது பார்வையையும் தன் வசமாக்கிக் கொண்டிருந்தது. அதன் விசேஷம் என்னவென்றால், ஏறுபவரின் உடம்பு பெல்டினால் இறுக கட்டப்பட்டு ஒரு சிறு அறைக்குள் அமர்ந்து கொண்டவுடன் கதவு மூடப்படுகிறது. பின்பு மேலும் கீழும் சிறிது சிறிதாக ஆட்டி பின் படுவேகமாக அசைக்கப்பட்டு தலைகீழாக ஐந்து நொடிக்கள் நின்று விடுகிறது. இதைக் கண்ட எனது நண்பனுக்கு அதில் ஏறவேண்டுமென்று மிகவும் ஆசை. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று கூறினான். நாங்களும் ஆசையுடனும், பரபரப்புடனும் ஏறி அமர்ந்தோம். ராட்டினம் தன் வேலையை ஆரம்பித்தது. இறுதியில் என் நண்பர் கத்தி கதறி ஆண்டவரே! ஆண்டவரே! என்று கதறி அழுதேவிட்டார். அதிலிருந்து இறங்கிய பின்பும் சிறது நேரத்திற்கு அந்த பயத்திலிருந்து வெளிவர இயலவில்லை.
.
நண்பர்களே! இது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சிதான். இருப்பினும் ராட்டிணத்திலிருந்து இறங்கிய என் மனத்திற்குள் மனித மூளையினால் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரத்திலே ஒருவித மரண பயம் இருக்குமென்றால் சாத்தானுடைய நரகம் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். அப்பப்பா! எப்பாடு பட்டாவது பரலோகம் சேர்ந்துவிட வேண்டுமென்று என் மனம் வாஞ்சித்தது.
.
அருமையானவர்களே! ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இப்படிப்பட்ட சிறு சிறு பயங்கள் ஏற்படும்போது நாம் தப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை நரகத்திற்கு சென்றுவிட்டால் திரும்பி வரவே முடியாதல்லவா!
.
நரகம் என்பது உண்மை! பரலோகமென்பது நிச்சயம். நமது உலக வாழ்வின் நடத்தை அதில் ஒன்றை நமக்கு தீர்மானிக்கும். வாலிபனே! உனது பாதை நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்குமென்றால், தயவு செய்து யோசித்து உன் பாதையை மாற்றிக் கொள். பக்தன் பாடுகிறார் :
.
“பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம்
நீ பெற வேண்டும்”
.
|