அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். – (எபேசியர் 5:28ன் பின்பகுதி).

நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.
.
அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது.
.
தேவன் ஒவ்வொருவருக்கும் அருமையான தோட்டத்தை போன்று திருமண வாழ்க்கையை தருகிறார். அதை அழகாக ஒரு நல்ல கனி தரும் தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. அதற்காக நேரம் எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, எரு இட்டு, களைகளை பிடுங்கி வேலி அடைத்து காத்து கொள்ளும்போது, அந்த தோட்டம் நல்ல கனிதரும் மரங்களையும், செடிகளையும் கொடுத்து அருமையான தோட்டமாக மாறுகிறது. அதுபோல குடும்பத்திற்காக நேரம் எடுத்து, மனைவி பிள்ளைகளுக்காக நேரம் கொடுத்து, அவர்களின் தேவைகளை சந்தித்து, தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குடும்பமாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, பிள்ளைகளுக்கு வேதத்தை குறித்து போதித்து, கர்த்தருடைய வழியில் நடத்தும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக உருவாகிறது.
.
அதே சமயத்தில் களைகளை வளரவிட்டு, தண்ணீர் கூட பாய்ச்சாமல் இருந்தால் அந்த தோட்டத்தின் செடிகள் வளரவது எப்படி? ஒரு அன்பான வார்த்தைக்கூட பேசாமல் ஒரு கணவன் இருந்தால் அவனை நம்பி வந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? எப்போது பார்த்தாலும் கோபம், கோபம், எதற்கெடுத்தாலும் கையை ஓங்குதல் போன்றவை இருந்தால் அந்த குடும்பம் எப்படி அழகான தோட்டமாக இருக்க முடியும்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மனைவியை அடிக்கிற கணவர்கள் எத்தனை பேர்? உண்மையிலேயே வேதனையான விஷயம்! வீட்டிலே சாட்சியை காத்து கொள்ளாமல் வெளியே போய் சாட்சி சொன்னால் அது யாருக்கும் பிரயோஜனமாயிருக்காது.
.
குடும்ப வாழ்க்கையிலே எப்போது வேண்டுமானாலும் சமாதானத்தை குலைக்கும் காரியங்கள் ஏற்படலாம். பிரச்சனை, கசப்பு, கோபம் வரலாம். ஆனால் அவற்றை உடனே களைந்து, மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு, உடனுக்குடன் சரி செய்து விடும்போது, அது மீண்டும் சந்தோஷத்தை கொடுக்கும் வீடாக மாறுகிறது.
.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மில் அன்புகூருவதால்தானே, வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறோம். அதை போலவே நாம் நம் மனைவியின் மீது அன்புகூர வேண்டும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கணவன் வேறு, மனைவி வேறு என்று இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை விட்டு கொடுத்து, மன்னித்து வாழும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக மாறி விடுகிறது.
.
பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் மன்னித்து விடாதிருக்கும் பட்சத்தில், களைகள் வளர்ந்து, முடசெடிகள் செழித்து, வளர்ந்து தோட்டத்தையே பாழாக்கி விடும். ஆகவே சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக நம் கோபம் மறையட்டும். மறுநாள் மறுநாள் என்று பிரச்சனையை இழுத்து கொண்டே போவாமானால், பிரச்சனைக்கு முடிவே வராது. வளரும் களைகளை அன்றே பிடுங்குவோம், பிரச்சனைக்கு உடனே முடிவு கட்டுவோம். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
செல்ல பிள்ளைகள் தந்தீரையா
அணைக்கும் கணவரை தந்தீரையா
அன்பு மனைவியை தந்தீரையா
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று குடும்பமாக அவனை சேர்த்து வைத்து அந்த குடும்பத்தில் பிரியப்படுகிற நல்லவரே, அந்த குடும்பத்தை ஒரு அழகிய தோட்டமாக மாற்றவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் குடும்பமாக வாழவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீரே தலைவராக இருந்து நடத்துவீராக. மனைவியை எந்த காரணத்தை கொண்டும் அடிக்காதபடிக்கு ஞானத்தை தருவீராக. தன் சொந்த சரீரத்தை சிநேகிப்பது போல மனைவியையும் நேசிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
அன்பு வாசக ஜெபக்குழுவினருக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள். யோபு தன் சிநேகிதருக்காக ஜெபித்தபோது, கர்த்தர் யோபின் சிறையிருப்பை மாற்றியதுப் போல நாம் நம் விசுவாச சகோதர சகோதரிகளுக்காக ஜெபிக்கும்போது கர்த்தர் நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
.
தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்டு, சகோதரன் இம்மானுவேல் ஏஞ்சலோ அவர்களின் வேலையிடத்தில் அவருடைய படிப்பிற்கேற்ற வேலையில்லாததால் மிகவும் சிரமப்படுவதாகவும், அதற்காக ஜெபிக்கவும் ஜனவரி 30-ம் தேதி கேட்டு எழுதியிருந்தார். நாமும் அதற்காக ஜெபித்தோம். நேற்று அவர் மகிழ்ச்சியோடு, தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, அவருடைய கஷ்டமான வேலையிலிருந்து அவர் படித்த வேலைகிடைக்க கிருபை செய்தார் என்று எழுதியிருக்கிறார். தொடர்ந்து அதைவிட சற்று இலகுவான வேலை தனக்கு கிடைக்கும் என்று விசுவாசிப்பதாக எழுதியிருப்பதால், தேவன் நம் ஜெபங்களை கேட்டு பதில் கொடுத்ததற்காக அவரை துதிப்போமா?
.
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.
.
சகோதரன் சேவியர் அவர்களுக்கு அவருடைய வேலையிடத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் மாறி, அவருடைய வேலையிடத்தில் அவருடைய நிலையில் அவருடைய வேலை அவருக்கு திரும்ப கிடைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். சுமுகமாக தன் வேலையிடத்தில் வேலை செய்யும்படியாகவும், மேலதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரி பிளோரா மார்கரேட் அவர்களின் கடனெல்லாம் சீக்கிரமாய் அடைபடவும், அவர்களுக்கும், அவர்களுடைய கணவருக்கும் அவர்களுடைய படிப்பிற்கேற்ற நல்ல வேலை கிடைக்கும்படியாகவும், அவர்கள் பிரச்சனையில்லாமல் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக. செழிப்பை கட்டளையிடுவீராக.
.
பாவத்தில் ஜீவிக்கிற ஆரானும், சாரோனும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தேவரீருடைய கரம் அவர்களை தொடர்ந்து பிடிப்பதாக. இரட்சிக்கும் கரம் அவர்களை இரட்சிப்பதாக. பாவ வழியில் இருந்து திருந்தி, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
.
சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால் தேவன் தாமே இரங்கி அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தேவன் அவர்கள் வாழ்வில் நலமானதை செய்வீராக. அதன் மூலம் முழுக்குடும்பமும் கர்த்தரே தேவன் என்று அறியும்படியாக தேவன் பெரிய காரியத்தை செய்தருளும்.
.
சகோதரி காருண்யா எலிசபெத் அவர்களின் தகப்பனார், அவர்கள் வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர், சர்க்கரை வியாதியினால் கால் யானைக்கால் போலாகி விட்டது என்றும், கண்ணில் கேட்டரேக்ட் ஆபரேஷன் செய்தும் கண் சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறபடியால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாய ஜெபிக்கிறோம். கண் பார்வை தெளிவாக தெரியும்படியாக ஜெபிக்கிறோம். சர்க்கரை அளவு இரத்தத்தில் குறையவும், அவர் பரிபூரண சுகத்தை பெறவும் ஜெபிக்கிறோம். சகோதரிக்கும் ஒரு வேலை சீக்கிரமாய் கிடைக்க கிருபை செய்வீராக. குடும்பத்தின் தேவைகளை சந்திப்பீராக. உம்மையன்றி யாரிடத்தில் செல்ல முடியும் தகப்பனே, நீரே யெகோவா யீரே, தேவைகளை சந்திப்பவர், அந்த குடும்பத்தில் பெரிய காரியங்ளை செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி ஜீவப்பிரியா அவர்கள் இந்த நாளில் செல்ல இருக்கும் இன்டர்வியூவில் உம்முடைய சித்தம் சகோதரியின் வாழ்வில் நிறைவேற ஜெபிக்கிறோம். தைரியமாய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும், அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்கவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.