மேன்மைபாராட்டுதல்

மேன்மைபாராட்டுதல்

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். – (எரேமியா 9:23-24).
இந்த உலகம் சாம்பியன்களை வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. சினிமா நடிகர்களும், நடிகைகளும், தாங்கள் ஏழைகளுக்கு கொடுப்பதை பிரசித்திப்படுத்தி, மற்றவர்கள் தாங்கள் கொடையாளிகள் என்று பாராட்ட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். அரசியல் வாதிகள் தாங்கள் செய்த, செய்ய இருக்கும் நல திட்டங்களை அடிக்கடி பேசி, அடிக்கடி வெளியிட்டு எப்படியாவது தாங்கள் புகழ் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். விளையாட்டு வீரர்களும் தாங்கள் எப்படியாவது புகழ் பெற வேண்டும் என்று கடும் முயற்சி எடுக்கிறார்கள். உலகம் தங்களை பாராட்ட வேண்டும் என்று பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
 
சில வேளைகளில் நமக்கு ஒரு நல்ல யோசனையோ, ஒரு நல்ல கருத்தோ தோன்றினால் அதை எப்படியாவது சொல்லி, மற்றவர்கள் முன்பாக நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நாம் பிரயத்தனம் செய்வது உண்டு. சிலர் தங்களுடைய பிள்ளைகளை குறித்து பெருமையாக பேசுவதுண்டு. மிகவும் ஞானம் நிறைந்தவன், மிகவும் தாலந்து உள்ளவன் என்று. சிலர் தங்களுடைய வேலையை குறித்து பெருமை பாராட்டுவதுண்டு, சிலர் தங்களுடைய ஜாதியைக்குறித்தும், சிலர் தங்களுடைய பெற்றோரின் பெருமையைக்குறித்தும் பேசுவதுண்டு.
 
‘என் அருள் நாதா இயேசுவே’ என்ற பழைய காலத்து பாமாலை பாட்டை நாம் இன்று கேட்டாலும் நம் கண்களில் கண்ணீர் வரும். அதில்:
 
என் அருள் நாதா இயேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
 
என்ற அந்த பாடல் 1707 ஆம் ஆண்டு ஐசக் வாட்ஸ் என்பவர் இராப்போஜன நேரத்தில் பாடும்படியாக அவரால் எழுதப்பட்டது. அதை பாடின ஆயிரமான பாடல்களை எழுதின சார்லஸ் வெஸ்லி தான் எழுதின எல்லா பாடல்களையும் விட இந்த பாடல் மிக சிறந்தது என்று எழுதினார்.
 
ஆம் சிலுவையின் காட்சியை பார்க்கையில் நம்முடைய எல்லா செல்வாக்கும், எல்லா படிப்பும், நம்முடைய எல்லா புகழும் நம்முடைய எல்லா ஞானமும் பராக்கிரமமும் ஒன்றுமில்லையல்லவா? நாம் எதை குறித்து இப்போது மேன்மை பாராட்டி கொண்டிருக்கிறோம்? ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம் என்று வேதம் கூறுகிறது.
 
பின் நாம் எதை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும்? மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சிலுவையில் தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் இரட்சிப்பை பெற வேண்டும் என்பதற்காக  கொடிய சிலுவையில் பாடுகள் பட்டு, தம் மாசற்ற இரத்தத்தை சிந்தி நமக்காக மரித்த கிறிஸ்துவின் சிலுவை காட்சியை பார்க்கும்போது நாம் நம்மை குறித்து மேன்மை பாராட்ட என்ன உண்டு? என்ன இருக்கிறது? ஆம், பவுல் சொன்னதைப்போல ‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக’ (கலாத்தியர் 6:14) என்று சொல்வோமா? இந்த பாமாலையை தழுவி எழுதப்பட்டதுதான் ‘விந்தை கிறிஸ்தேசு இராஜா’ என்ற பாடலும் என்று நான் நினைக்கிறேன். ஆம், நம்முடைய ஞானம், கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை, குப்பை என்று உணர்வோம், நமக்காக மரித்த கிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே நாம் மேன்மை பாராட்டுவோமாக! ஆமென் அல்லேலூயா!
 
விந்தை கிறிஸ்தேசு இராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்த பூவில் 
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி 
செல்வாக்குகள் மிகவிருப்பினும்
குருசை நோக்கி பார்க்க எனக்கு  
உரிய பெருமை யாவும் அற்பமே


ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய எந்த காரியங்களும், செயல்களும் மேன்மைக்குரியது அல்ல தகப்பனே, சிலுவை காட்சியை பார்க்கும்போது எங்களுடைய எந்த மேன்மைகளும்  ஒன்றுமேயில்லை ஐயா. கிறிஸ்துவின் சிலுவை அன்பிற்காக நன்றி செலுத்துகிறோம். எங்களை தாழ்த்துகிறோம். சிலுவையை குறித்தே மேன்மை பாராட்டுகிறோம். நாங்கள் எங்களை தாழ்த்தவும், நீர் எங்களிலே மேன்மைப்படவும் அர்ப்பணிக்கிறோம்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.