தள்ளப்பட்ட கல்

தள்ளப்பட்ட கல்

‘அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்’ – (1 சாமுவேல் 2:6).
காய்கறி கடையில் நம் எல்லாராலும் விரும்பி வாங்கப்படாத காய் அது. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான தோற்றமும் அதற்கு கிடையாது. சுவையால் தன் பக்கம் மக்களை இழுக்கும் சக்தியும் அதற்கு கிடையாது. ஆனால் திருஷ்டிகழிப்பதில் நம்பிக்கையுள்ள மக்களால் கடைகளில் தொங்க விடப்படவும், ரோட்டில் போட்டு உடைக்கப்பட்டும் வாகனங்களால் நசுக்கப்பட்டும் அனாதையாய் கிடக்கும் காய்தான் அது! அது என்ன காய்? பூசணிக்காய்!!! பூசணிக்காய் மாதிரி குண்டாகிக் கொண்டே போகிறாயே! என்று கிண்டல் செய்யப்படும் காயும் அதுதான்.
 
ஆனால் அதை மலேசியா பல்கலை கழகத்தின் தொழில் நுட்பத்துறை பேராசிரியை ‘ நூர் அஜியா அப்துல் அஜீல்’ ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். நாம் அற்பமாக எண்ணும் பூசணிக்காயில் ஒருவித ஸ்டார்ச் உள்ளதாகவும், இந்த ஸ்டார்ச்சுகள் ‘புரோப்யோனிக்’ அமிலத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை என்றும், இந்த அமிலம் புற்று நோயை உருவாக்கும் செல்களை பலவீனப்படுத்தி அழித்து விடுகின்றதாகவும், கண்டுபிடித்துள்ளார். மேலும் பூசணிக்காயில் அதிக அளவு நார்ச்சத்தும், தாது உப்புகளும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
‘வீடு கட்டுகிறவர்களால் ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று’ என்ற வசனத்தின்படி புறக்கணிக்கப்பட்ட அநேகரை தேவன் ஒரு கூட்ட ஜனங்களுக்கு தலைவனாக மாற்றியுள்ளார். சகோதரர்களால் பொறாமையினிமித்தம் புறக்கணிக்கப்பட்டு, ஆடைகள் உறியப்பட்டு, குழியில் தள்ளப்பட்ட யோசேப்பை தேவன் எகிப்தின் அதிபதியாக்கினார். பெற்ற தகப்பனாரின் நினைவில் கூட இல்லாத ஆடு மேய்த்த தாவீதை இஸ்ரவேலின் இராஜாவாக்கினார்.
 
நாட்டை விட்டு பயந்து ஓட்டம் பிடித்த மோசேயை இஸ்ரவேலரை மேய்க்கும் மேப்பனாக்கினார். ஆம், பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்துகிறவர் நம் தேவன். மனிதன் முகத்தை பார்க்கிறான், தேவனோ நமது உள்ளத்தை காண்கின்றவர். நமது இருதயத்தின் உண்மையின்படி, அவர் ஒரு நாள் நிச்சயம் நம்மை உயர்த்துவார். உண்மையும் தாழ்மையுமுள்ளவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை.  பசியுள்ளவர்களை நன்மையினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பி விடுகிறவர் அவர் (லூக்கா 1: 52,53). மேலும் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார். – (1கொரிந்தியர் 1:27-29).
 
ஆம், தள்ளப்பட்டவர்களை தலைவராக்குவது தேவனுக்கு பிரியம். ஓரங்கட்டப்பட்டோரை ஓங்க செய்வது தேவனது விருப்பம். இதை வாசிக்கிற நீங்கள் வேலை ஸ்தலத்திலோ, குடும்பத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ தள்ளப்பட்டவராக இருக்கிறீர்களோ? உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையினால் நெருங்கின உறவினரே கண்டும் காணாமல் இருக்கிறார்களோ? தேவன் உங்களை உயர்த்த வல்லவர். ஆகாது என்று தள்ளப்பட்ட உங்களது மன வேதனை அவருக்கு நன்கு புரியும். ஏனெனில் தம் சொந்த ஜனங்களான யூதர்களால் அவர் வெறுக்கப்பட்டார். புறம்பே தள்ளப்பட்டார், அடிக்கப்பட்டார், துப்பப்பட்டார். ஆகவே உங்களது உள்ளத்தை நன்கு புரிந்து கொண்ட நம் இயேசு உங்களை குடுமபத்திற்கே தலைக்கல்லாக மாற்றுவார். அதுவரை அவரது பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள். ஆமென் அல்லேலூயா!
 
தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா…
 
பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்…
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
 
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா..
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா 

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும், நாங்கள் ஒருவேளை தள்ளப்பட்ட கல்லைப்போல காணப்பட்டாலும், தேவரீர் எங்களை தள்ளாதவராக, எங்களை ஏற்ற நேரத்தில் உயர்த்துகிறவராக இருப்பதற்காக உமக்கு நன்றி. ஏங்கள் உள்ளத்தை அறிந்திருக்கிற தேவன், மற்றவர்கள் வேண்டாம் என்று எங்களை தள்ளி வெறுத்தாலும், எங்களை அணைத்து கொண்டு, எங்களை எடுத்து நிறுத்துவதற்காக உமக்கு நன்றி.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.