பாவமாகிய கொடிய விஷம்
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். – (ரோமர் 6:23)
பச்சை பசேலென்றிருந்த மிளகாய் தோட்டத்தில் செடிகளனைத்தும் காற்றில் அழகாய் அசைந்து கொண்டிருந்தன. அவைகளை காப்பதற்காக சுற்றிலும் முள் வேலி இடப்பட்டிருந்தது. தோட்டத்தின் ஒரு புறம் இரயில் தண்டவாளமும், மறுபறம் ரோடும் அமைந்து இத்தோட்டத்திற்கு மேலும் அழகு சேர்த்தன. எப்பொழுதும் போல அன்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் தோட்டக்காரர்.
திடீரென முள்வேலிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு அவரின் காலில் கடித்தது. அவர் அதை அடிக்கும் முன் அது வேலியை தாண்டியது. இவர் சுற்றி வந்து அதை அடிக்க போனபோது அது தோட்டத்திற்குள் புகுந்தது. அப்படி பாம்பை தேடியதில் காலமும் நேரமும் வீணானது. பாம்பின் விஷத்தை வெளியேற்ற வேண்டும் என்ற ஆத்திமில்லாதவராக அசட்டையுடன் காணப்பட்டார் அத்தோட்டகக்hரர். சிறிது நேரத்தில் அவருக்குள் ஏதோ செய்யவே சத்தமிட்டார். அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மயக்கமடைந்தார்.
அவரை தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தோ பரிதாபம்! மருத்துவமனை வாசலிலேயே அவர் மரித்துப் போனார். செய்தித்தாளில் அதை வாசித்தவர்கள் தோட்டக்காரரின் அலட்சியத்தை எண்ணி வருந்தினர். அவர் தன் ஜீவனை காப்பாற்றியிருக்கலாம், ஆனால் அவரோ அதை இழந்து போனார். காரணம் என்ன? 1. தன் உடம்பில் விஷம் ஏறியிருந்ததை அறிந்தும் கால தாமதம் செய்தார். 2. பிறரது உதவியையும் நாடவில்லை. 3. முதலுதவி செய்வதையும் சிகிச்சை பெறுவதையும் அசட்டை செய்தார். விளைவு விபரீதமானது.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் சாத்தான் என்ற கொடிய வலுசர்பபதினால் கடிபட்டவர்களே. அதனிமித்தம் பாவம் என்னும் விஷம் நம் சிந்தையில், செயலில் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. அதாவது ஒருவன் பாவம் செய்வதால் மட்டும்; பாவியாகவில்லை. அவன் பாவியாகவே பிறக்கிறான். ஆம், பாவம் நம்மில் விஷத்தை போல உள்ளது, அதினின்று நாம் விடுபட கவனமற்றிருப்போமானால் அது நம் ஆத்துமாவை நித்திய மரணத்திற்கு நேராய் கொண்டு சென்று விடும்.
முதலாவதாக நாம், நிர்ப்பந்தமான மனுஷன் நான், இந்த பாவ சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார் (ரோமர் 7:24) என்ற உணர்வோடு தீவிரமாய் செய்ல்பட வேண்டும்.
அடுத்ததாக சகல பாவத்தையும் கழுவி சுத்திகரிக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை நேராய் கடந்து வர வேண்டும். பாவமாகிய விஷத்தை போக்க வல்லமையுள்ளது இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தம் மாத்திரமே! ஆண்டவரே, என் பாவங்களை போக்க வல்லவரே, உம்முடைய இரத்தத்தால் என்னை கழுவி சுத்திகரித்தருளும் என்று அவரிடம் நாம் கேட்கும்போது, நிச்சயமாக நம்மை கழுவி அவர் சுத்திகரிக்க வல்லவர். ‘நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’ (1யோவான் 11:8-9)
நாளை நாளை என்று காலதாமதம் பண்ணாமல், அவ்வப்போது வரும் எச்சரிப்பின் சத்தத்தை அசட்டை பண்ணாமல், தீவிரமாய் ஆண்டவரிடம் கிட்டி சேரும்போது நமது ஜீவனை காத்துக் கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியும். ‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்’. ஆமென் அல்லேலூயா!
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாவத்தை விஷம் என்று அறியாமலே உலகில் அநேகர் தங்களை அதற்கு அடிமைகளாக வாழ்ந்து, அந்த விஷத்தினாலே மரித்து கொண்டிருக்கிறார்களே ஐயா. ஒவ்வொருவரும் கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பை பெற்று கொள்ள வேண்டுமே. பாவ விஷத்திலிருந்து வெளியேறி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டுமே தகப்பனே. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் என்பதை உணர்ந்து, அந்த கிருபையை பெற்றுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.