புயலின் மத்தியிலும் அமைதி

புயலின் மத்தியிலும் அமைதி

அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி,படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. – (மாற்கு 4:37).
இயேசுகிறிஸ்து கடலோரத்தில் நின்று கூடியிருந்த திரளான ஜனத்திற்கு போதகம் செய்து விதையை குறித்த உவமையை அவர்களுக்கு போதித்தார். அப்பொழுது ஏற்கனவே சாயங்காலம் ஆனபடியினாலே, அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, தம்முடைய சீஷர்களிடம், வாருங்கள் அக்கரைக்கு போவோம் (35ம் வசனம்) என்று அழைத்தார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது (36ம் வசனம்). அவர்கள் அப்படி போகும்போது, பலத்த சுழல்காற்று உண்டாகி,படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று (37ம் வசனம்).
 
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணiயை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள்மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள் (38ம் வசனம்). சீஷர்கள் ஒரு காரியத்தை மறந்து போனார்கள். அவர்கள் மரித்தால், இயேசுகிறிஸ்துவும் அவர்களோடு மரிப்பார் என்பதையும் இயேசு கூட இருந்தால் தாங்கள் எப்படி மரிக்க முடியும்? என்பதையும் மறந்தார்கள்.
 
இயேசுகிறிஸ்துதான் சீஷர்களை அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்று அழைக்கிறார். அதன்படி அவர்கள் அக்கரைக்கு போக முற்பட்டபோது, கடலில் சென்று கொண்டிருக்கிறபோது, திடீரென்று பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு மூழ்கி விடுமோ என்று எண்ணும் அளவு அலைகள் வந்து படகின் மேல் மோத ஆரம்பித்தது. இயேசுவோடு இருந்த சீஷர்கள் மீனவர்கள். அவர்களுடைய முக்கிய தொழிலே மீன் பிடிப்பதாகத்தான் இருந்தது. அவர்கள் அதற்காக எத்தனை முறை படகில் பிரயாணம் செய்திருக்கக்கூடும்? இப்படிப்பட்டதான புயலையும் அவர்கள் காணாமலா இருந்திருப்பார்கள்? அப்படி இருந்தும், பலத்த காற்று படகில் மோதினவுடனே அவர்கள் பயந்து போனார்கள். ஐயோ நாம் மூழ்க போகிறோமே என்கிற பயம் அவர்களுக்குள் வந்தது. இயேசுகிறிஸ்து இருக்கிற படகு எப்படி மூழ்க முடியும் என்கிற எண்ணம் புயலை பார்த்தவுடன் அவர்களுக்கு மறந்து போனது. அநேக அற்புதங்களை பார்த்த அவர்களுக்கு புயலை பார்த்தவுடன் எல்லாமே மறந்து போனது. இப்போது முன்னால் இருப்பது படகும், புயலும், காற்றும்தான்.
 
ஆனால் இயேசுகிறிஸ்துவோ இதை ஒன்றும் குறித்தும் கவலை இல்லாமல், அக்கடா என்று தலையணை வைத்து நித்திரையாயிருந்தார் என்று வசனம் சொல்கிறது. சீஷர்கள் சத்தமில்லாமலா என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்திருப்பார்கள்? நிச்சயமாக இல்லை, ஒரேயடியாக என்ன செய்வது என்று கத்தி இருப்பார்கள். அலைகளின் இரைச்சலினால் அவர்கள் பேசுவது யாருக்கும் கேட்காத பட்சத்தில், என்ன செய்வது என்று மிகவும் சத்தமாய் பேசியிருப்பார்கள். ஆனால் அலைகளின் ஆரவார சத்தத்தையோ, சீஷர்களின் பயத்தின் கதறுதலையோ கேட்காதபடி, இயேசுகிறிஸ்து நித்திரையாயிருந்தார்.
 
நம்முடைய வாழ்விலும், இந்த புயல் போன்ற காரியங்கள் ஏற்படும்போது, நாம் எப்படி இருக்கிறோம்? சீஷர்களை போல நாங்கள் மூழ்கி போகிறோமே, நீரோ தூங்கி கொண்டிருக்கிறீரே, நாங்கள் மூழ்குவது உமக்கு கவலையில்லையா என்று இயேசுகிறிஸ்துவிடம் போராடி கேட்டு கொண்டிருக்கிறோமா? அல்லது அவரைப் போல அமைதியாக இருக்கிறோமா?
 
இயேசுகிறிஸ்து ஏன் அப்படி அமைதியாயிருந்தார்? ஏனெனில் அவருடைய ஐக்கியம் பிதாவோடு எப்போதும் இருந்தது. பிதாவின் சித்தமில்லாமல், தம் வாழ்வில் எந்த காரியமும் நடக்காது என்று உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் அவர் எதைக் குறித்தும் அவர் கலங்காமல் அமைதியாக இருந்தார்.
 
நம் வாழ்வும் கர்த்தருடைய கரத்தில் இருந்தால், நம்மை சுற்றி எத்தனை புயல் வீசட்டும், காற்று அடிக்கட்டும், பிரச்சனைகள் மாறி மாறி வந்தாலும், நமக்கு ஒரு அடைக்கலம் உண்டு என்பதை மறந்து போகக்கூடாது. நாம் அவருடைய கரத்தில் இருப்பதால், எந்த புயலும், காற்றும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆழமான விசுவாசம் நம் இருதயத்தில் இருக்க வேண்டும்.
 
சீஷர்கள் பயந்து அவரை எழுப்பியபோது, அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று (39ம் வசனம்) அல்லேலூயா! அவர் எழுந்து, காற்றை அதட்டியவுடன், அத்தனை நேரம் ஆரவாரித்துக் கொண்டு, படகை மூழ்க செய்யும்படியாக அலைக்கழித்த அலைகளும், காற்றும் நின்றுபோய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அல்லேலூயா!
 
நம் வாழ்விலும் வீசும் புயல் போன்ற சோதனைகளிலும், துன்பங்களிலும், துயரங்களிலும், பயங்களிலும் இயேசுகிறிஸ்து ஒரு வார்த்தை சொன்னால் போதும், எல்லாம் அமைதலாகி, அடங்கி போகும். எல்லாமே மாறிப்போகும். பிரச்சனைகள் மாறும், துன்பங்கள் மாறும், வியாதிகள் மாறும், எல்லாமே அமைதலாகி போகும்.
 
காற்றும் கடலும் அமைதியானப்பின் அவர் சீஷர்களை பார்த்து, ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார் (40ம் வசனம்).
 
நாமும் கூட கர்த்தாவே என் பிரச்சனைகளை பாரும், நாங்கள் இப்படியே மடிந்து போவது உமது சித்தமா பயந்து போகும்போது, கர்த்தர் நம் பிரச்சனைகளை மாற்றுவது மாத்திரமல்ல, உங்களுடைய விசுவாசம் எங்கே போனது? ஏன் இப்படி பயப்பட்டீர்கள்? நான் இருப்பது உங்களுக்கு மறந்து போனதா? ஏன் ஒரு அருமையான இரட்சகர் இருப்பதையே நீங்கள் மறந்து, இப்படி பதறி போனீர்கள் என்று கேட்பார். நம்மை நித்திய ஜீவனுக்கென்று அழைத்தவர் உபத்திரவங்கள், சோதனைகள் நடுவில், நம்மை விட்டுவிட்டுபோவாரா? நிச்சயமாக இல்லை, நம்மை கரைசேர்க்கும் வரை நம்மோடுக்கூடத்தான் இருப்பார்.
 
ஆம் பிரியமானவர்களே, நம்முடைய காலங்களும், நம்முடைய காரியங்களும் கர்த்தருடைய கரத்தில் இருக்கும்போது, நாம் எதைக்குறித்தும் கலங்க தேவையில்லை. அவர் அமைதியாக தூங்குவது போல இருந்தாலும், ஏற்ற நேரத்தில் வந்து, பிரச்சனைகளை மாற்றி, அமைதிப்படுத்துவார். ஆனால் நமக்கு அவர் மேல் முற்றிலும் விசுவாசம் தேவை. அப்போது நாம் நம்முடைய புயல் போன்ற பிரச்சனைகளின் மத்தியிலும் புன்னகைக்க முடியும். அப்படி இல்லாதபடி நாம் பதறிப் போகக்கூடாது. இயேசுகிறிஸ்து பிதாவானவரோடு எப’போதும் ஐக்கியம் வைத்திருருந்தபடியால், அவர் பதறிப்போகவில்லை. அவர் அமைதியாக இருந்தார். அதுப்போல நம்முடைய ஐக்கியமும் கர்த்தரோடு இருக்குமானால், என்னதான் நேர்ந்தாலும் நாம் பயப்பட மாட்டோம். ஏனெனில் காற்றையும் கடலையும் அதட்டி, அமைதிப்படுத்தினவர் நம் வாழ்வின் பிரச்சனைகளையும் அமைதிப்படுத்துவார். ஆமென் அல்லேலூயா! 
 
அலைகள் படகின் மேல் மோதியே ஆழ்த்தினாலும்
கடல் மேல் நடந்து வந்து கர்த்தரே என்னை தூக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார்
அஞ்சிடேன் அஞ்சிடேன் என் இயேசு என்னோடிருப்பதால் 

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் காலங்கள் உம்முடைய கரத்தில் இருப்பதால், எங்களுடைய பிரச்சனைகளை கண்டு நாங்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் காற்றையும் கடலையும் அதட்டினவர் எங்களோடு இருப்பதால், எங்களுடைய பிரச்சனைகளையும் அமைதிப்படுத்த அவரால் கூடும் என்று ஆழமான விசுவாசத்தை எங்களுக்குள்ளே வர்த்திக்க செய்வீராக. அந்த நாளில் சீஷர்களை போல நாங்கள் பதறிப் போகாதபடி கர்த்தருக்குள் அமைதியாக இருக்க கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.