நொறுங்குண்ட இருதயம்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். – (சங்கீதம் 51:17)
நவீன காலத்து மிஷனெரிகளின் தந்தை என அழைக்கப்ப்ட்ட வில்லியம் கேரியின் வாழ்வில் ஒருநாள் மதிய வேளையில் அவரது அச்சகத்திலும் சேமிப்பு அறையிலும் அக்கினி ஜீவாலை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அச்சு இயந்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. எதிர்பாராத இந்த இழப்பினால் அவரால் தாங்கி கொள்ள இயலாத ஒரு ஏமாற்றம். அவரது இருதயம் நொறுங்கி போனது.
கேரி மிகச்சிறந்த மொழி பெயர்ப்பாளர். முழு வேதத்தை 20 மொழிகளிலும், புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழி பெயர்க்க காரணமாயிருந்தவர். வேதத்தின் சில பகுதிகளை 12க்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழி பெயர்த்தார். இவ்வாறு தான் மொழி பெயர்த்த அநேக முக்கிய எழுத்து சுருள்களை தன் சேமிப்பு அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இது ஒரு நாள் இரண்டு நாள் முயற்சியல்ல, பல ஆண்டுகள் இரவு பகலாய் கண் விழித்து செய்த கடினமான மற்றும் விடா முயற்சியின் பயன்கள். அன்று அவர் எழுதியதை சேமித்து வைக்க கம்ப்யூட்டர் வசதியோ, எழுத்துபணியை எளிதாக்க ஜெராக்ஸ் வசதியோ இல்லை. கட்டுகடடாக எழுதி வரிசைப்படி அடுக்கி வைததிருந்த எல்லா முக்கிய தாள்களும் அந்தோ இரண்டு மணி நேரத்திற்குள் சாம்பலாய் கிடந்தன. என்ன ஒரு இழப்பு!
இந்த பேரழிவை குறித்து தன் நண்பர் அன்ரூமுரேக்கு, ஒரு கடிதத்தை எழுதினார். அதில், ‘திரும்பவும் இந்த நிலம் உழப்பட வேண்டும். ஆனால் நாங்கள் முற்றிலும் சோர்ந்து விடாதபடி காக்கப்பட்டு வருகிறோம். சகலத்தையும் ஆளுகை செய்யும் தேவனின் தெய்வீக தன்மையையும் ஞானத்தையும் நான் சிந்தித்து பார்க்கும்போது ஆறுதலை பெற்று கொள்கிறேன். போன ஞாயிற்றுக்கிழமை சங்கீதம் 46:10 ல் கூறப்பட்டுள்ள ‘நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்’ என்ற வசனத்தை தியானித்து என்னுடைய உபத்திரவத்தின் மத்தியில் என்னை பெலப்படுத்தி கொண்டேன். தேவன் நமக்கு செய்யக்கூடிய எல்லாவிதமான காரியங்களையும், நாம் அமைதியுடன் ஏற்று கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும். என்ற கருத்தை என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து சிந்தனை செய்கிறேன்’ என எழுதியிருந்தார். நஷ்டத்தின் மத்தியிலும் தேவன் மீது அவர் வைத்திருந்த அசையாத நம்பிக்கையை பாருங்கள்.
பிரியமானவர்களே, வில்லியம் கேரியின் இந்த மனநிலை நம்மை உற்சாகப்படுத்தட்டும். செழிப்பின் நேரத்தில் தேவனை மனதார துதிப்பது எளிது. ஆனால் தோல்வியில், நஷ்டத்தில், வியாதியில், கடனில், கண்ணீரில், அவர் மேல் நம்பிக்கை வைப்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மிகச் சிறந்த விதையை விதைத்து மிக சிறந்த அறுவடையை எதிர்ப்பார்க்கும் விவசாயி தன் நிலத்தை மிக நன்றாக அல்லது இன்னும் ஒரு முறை கூட உழுவான். உங்கள் இருதயம் என்னும் நிலம் உழப்பட்டு நொறுக்கப்படும் போது மட்டுமே தேவன் தமது இதய பாரத்தையும், ஏக்கத்தையும் விதைக்க முடியும். நொறுக்கப்படும் வரை இருதயமானாலும் நிலமானாலும் கடினமாகத்தான் இருக்கும். நொறுக்கப்பட்ட நிலம் தன்னிடமுள்ள தாவரத்தை புயல், மழை, வெயில் என எது வந்தாலும் அழுகிவிடாமல், காய்ந்து விடாமல், காப்பது போல நொறுக்கப்பட்ட இதயம் என்ன வந்தாலும் தேவனை நம்பும். அவரது அன்பில் சந்தேகப்படாது பொறுமையாய் அமர்ந்திருந்து இன்னும் அவரை அறிந்து கொள்ளவே முயற்சிக்கும்.
நொறுக்கப்பட்ட இதயத்திலிருந்து மிகவும் அருமையான பூக்களாக அருமையான கருத்துகளும், பாடல்களும் புறப்பட்டு வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். தங்கள் விலையேறப்பெற்ற அனுபவங்களிலிருந்து பரிசுத்தவான்கள் எழுதி வைத்த பாடல்களை நாம் இன்றும் பாடுகிறோம். அவை நாம் துன்பமான பாதைகளில் செல்லும்போது நம்முடைய இருதய புண்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது, அமையப்போகிறது.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்ற வசனத்தின்படி நம்முடைய இருதயம் நொறுங்கும்போது தேவனால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் அங்கு இறங்கி வந்து கண்ணீரை துடைத்து, தேவைகளை சந்திப்பார். வில்லயம் கேரி தான் நொறுங்குண்ட நிலையில் தேவனை நோக்கி பார்த்து, ஆறுதலை பெற்று கொண்டது போல, தான் இரவு பகலாக ஆண்டுகளாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலான போது, அவர் இருதயம் உடைந்து போகாமல், கர்த்தரையே பற்றி கொண்டு, தன்னை பலப்படுத்தி கொண்டது போல நாமும் நம் இழப்பிலும், நஷ்டததிலும், துன்பத்திலும் கர்த்தரையே சார்ந்து கொள்வோம். அவர் நம்மை திடப்படுத்தி பெலப்படுத்தி இரண்டத்தனையாக திருப்பி தருவார். ஆமென் அல்லேலூயா!
நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார்
கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்… கலங்கிடவே வேண்டாம்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நொறுங்குண்ட ஆவியை புறக்கணியாத தேவன் நீரையா! எங்கள் இருதயத்தின் பாடுகளை அறிந்தவரே, எங்கள் இழப்புகளையும், நஷ்டங்களையும் அறிந்தவரே, நீரே எங்களை ஆறுதல் படுத்துவீராக. கண்ணீரை துடைப்பீராக. காயங்களை கட்டுவீராக. எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவீராக. இரண்டத்தனை நன்மைகளை கட்டளையிடுவீராக. உம்மையே நாங்கள் சார்ந்து கொள்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.