நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் பாகம் – 2
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால் அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது. – (தானியேல் 2:1).
நேற்றைய தினத்தில் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனத்தை கண்டதாகவும், அவர் தன் தேசத்திலுள்ள ஞானிகளை வரவழைத்து சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்தி தரும்படி கேட்டபோது, அவர்களால் முடியாமற் போனதையும், தானியேல் தன் தேவனிடம் ஜெபித்தபோது அவர் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் இரவில் தரிசனத்தில் வெளிப்படுத்தினார் என்றும் பார்த்தோம். இன்று அந்த சொப்பனம் என்னவென்றும், அதன் அர்த்தம் என்னவென்றும் காண்போம்.
நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தை தானியேல் கூற ஆரம்பித்தார்: ‘ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று. சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம்’ (தானியேல் 2:31-36) என்று முழு சொப்பனத்தையும் கூறினார்.
அதின் அர்த்தம் பின்வருமாறு: தேவன் நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தை குறித்த வெளிப்பாட்டை கொடுத்தார். கி.மு.604ம் ஆண்டிலிருந்து பாபிலோனை நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்தார். தேவன் அவருக்கு சொப்பனத்தை கொடுத்தபோது, உலகிலுள்ள எல்லா தேசங்களையும் குறித்து சொல்லாமல், இஸ்ரவேலையும், வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்துவையும் மையப்படுத்தி, வரப்போகிற அந்திக்கிறிஸ்துவின் காலத்தையும் அவனோடு கிறிஸ்து செய்ய இருக்கிற பெரிய யுத்தமாகிய அர்மகெதானையும் குறித்து அவர் வெளிப்படுத்தினார்.
தேவன் இந்த சொப்பனத்தில் வரப்போகிற காலங்களை குறித்து மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி, தாமே முக்காலங்களையும் அறிந்தவர் என்றும், அவராலே அன்றி உலகத்தில் ஆட்சி ஏற்படுவதில்லை என்றும் நமக்கு திட்டவட்டமாக வெளிப்படுத்துகிறார்.
இந்த தரிசனத்தில் தேவன் ஐந்து புறஜாதியினர் இஸ்ரவேலை ஆளுவதை குறித்து வெளிப்படுத்தினார். முதலாவது பாபிலோனிய சாம்ராஜ்யம் – தலை பசும்பொன் – கி.மு. 625 – 539 (தானியேல் 2:1). இதில் பாபிலோனிய சாம்ராஜ்யம் இப்போதிருக்கிற ஈராக் தேசமாகும்.
இரண்டாவது மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் – மார்பும், அதின் புயங்களும் வெள்ளி – கி.மு. 539 – 331. மேதிய பெர்சிய சாம்ராஜ்யங்களை தரியு ராஜாவும், கோரேஸ் ராஜாவம் அரசாண்டதாக வேதத்தில் பார்க்கிறோம். (எஸ்றா 1:1, 5:7)
மூன்றாவது கிரேக்க சாம்ராஜ்யம் – வயிறும் தொடையும் வெண்கலம் – கி.மு. 331 – 164 (தானியேல் 10:10) கிரேக்க சாம்ராஜ்யம். அதை அலெக்ஸாண்டர் தி கிரேட் என்னும் அரசனும், அவரோடு கூட நான்கு தளபதிகள் டாலமி, லிசிமேக்கஸ், கசாண்டர் மற்றும் செல்யூகஸ் ஆண்டதாக நாம் சரித்திரத்தில் படித்திருக்கிறோம்.
நான்காவது ரோம சாம்ராஜ்யம் இரும்பு பாதம் – கி;.மு. 164 – கி.பி.70
நான்காவது ராஜ்யத்திற்கும், ஐந்தாவது ராஜ்யத்திற்கும் இடைபட்ட காலத்தில் சபை எழும்பியதும், இஸ்ரவேல் வீழ்ச்சி அடைந்ததும் – கி.பி. 32 – 72 சபையை இன்னும் இஸ்ரவேலர் ஏற்று கொள்ளாததும், இஸ்ரவேல் சொந்த தேசத்தை பெற்றதும் கி.பி. 32 – இந்நாள்வரையும் இருந்து வருகிறது.
நான்காவது ராஜ்யத்திற்கும், ஐந்தாவது ராஜ்யத்திற்கும் இடைபட்ட காலத்தில் சபை எழும்பியதும், இஸ்ரவேல் வீழ்ச்சி அடைந்ததும் – கி.பி. 32 – 72 சபையை இன்னும் இஸ்ரவேலர் ஏற்று கொள்ளாததும், இஸ்ரவேல் சொந்த தேசத்தை பெற்றதும் கி.பி. 32 – இந்நாள்வரையும் இருந்து வருகிறது.
அந்திகிறிஸ்துவின் ராஜ்யம் பாதி இரும்பும், பாதி களிம்புமானது – அது வரப்போகிற ஏழு வருட காலங்களை குறிக்கும். கிருபையின் காலம் அல்லது சபையின் காலம் முடிவடையும்போது, இஸ்ரவேலரின் கண்கள் கிறிஸ்துவை மேசியாவாக காணும். கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் என்பது கிறிஸ்துவை குறிக்கும். இயேசுகிறிஸ்து அர்மெகெதானில் அந்திக்கிறிஸ்துவோடு போராடி, 1000 வருடங்கள் இந்த உலகத்தில் ஆட்சி செய்வார் என்பதை 35ஆவது வசனத்தில் காண்கிறோம்.
இதுவரை நான்கு ராஜ்யங்கள் வந்து, இஸ்ரவேலை ஆண்டுவிட்டு கடந்து விட்டன. கி.பி. 70-ல் தீத்து ராயன் (ரோம அரசன்) தன் சேனைகளோடு வந்து, இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசன கூற்றின்படி எருசலேமின் தேவாலயத்தை ஒரு கல்லின் மேல் மறு கல் இராதபடி, இடித்து, எருசலேமை தீக்கிரையாக்கி போட்டான். இஸ்ரவேலர் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டார்கள். 1948 ஆம் ஆண்டு, இஸ்ரவேல் ஒரு தேசமாக உருவானது. சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எருசலேமில் சேர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேசம் சொந்தமானாலும், கி.பி. 586-ல் இருந்து, எருசலேம் அவர்கள் கையில் வராமல் இருந்தது. ஆனால் சுமார் 2552 வருடங்களுக்கு பின் 1967-ல் ஆறுநாட்கள் அரபியரோடு நடந்த யுத்தத்தில் இஸ்ரவேல் எருசலேமை மீண்டும் கைப்பற்றியது. அல்லேலூயா! இந்த சத்தியங்களை தானியேல் விவரித்தபோது, அவர் எந்த பயமும் இல்லாமல், தான் சொன்ன அத்தனையும் உறுதியானது என்பதாக, இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று, எந்தவித தயக்கமோ கலக்கமோ இன்றி மிகவும் தெளிவாக கூறினார். அதை கேட்ட நேபுகாத்நேச்சார் மலைத்து போய் தான் ஒரு சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி என்பதையும் மறந்து, தானியேலுக்கு முன் முகங்குப்புற விழுந்து வணங்கி, அவருக்கு தூபம் காட்டவும் காணிக்கை கொடுக்கவும் கட்டளையிட்டார்.
ஆம் பிரியமானவர்களே, ஒரு உண்மையுள்ள தேவ மனிதனுக்கு முன், ஒரு ஜெப வீரனுக்கு முன் ஒரு இராஜாவாக இருந்தாலும், தேவ கிருபை வெளிப்படும்போது, அவன் அவனை பணிந்து கொள்வான் என்பது இந்த சம்பவத்திலிருந்து நமக்கு வெளிப்படுகிறதல்லவா? நம் தேவன் சகலத்தையும் படைத்தவர், மறைபொருளை வெளிப்படுத்துகிறவர், அவருக்கு முன்பாக எதுவும் மறைந்திருக்க மாட்டாது. அத்தகைய தேவனை தொழுது கொள்கிற நாம், எதை குறித்தும் கவலைப்பட தேவையில்லை. சரித்திரத்தில் நடக்க இருக்கிற காரியங்களை இத்தனை துல்லியமாக எத்தனையோ வருடங்களுக்கு முன்பே நமக்கு வெளிப்படுத்தி கொடுத்த நம் தேவனுக்கு நிகரானவர் யாருண்டு? அவரே உன்னத தேவன், அவரே உயர்ந்தவர். அவரே உண்மையான தெய்வம்! நாம் அவருடைய பார்வையில் உண்மையுள்ளவர்களாக, அவரே தெய்வம் என்று வைராக்கியம் கொள்ளும்போது, அவர் நமக்காக வைராக்கியம் கொண்டு, தமது நாமத்தை நம் மூலமாக உயர்த்துகிறார்.
அந்த புறஜாதி ராஜா ‘தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கி றார்: என்றான் (தானியேல் 2:47). மட்டுமல்ல, தானியேலை மிகவும் உயர்த்தி, அவரோடு கூட அவரது மூன்று நண்பர்களையும் கூட ராஜ்யத்தில் உயர்த்தினார் என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதல் நான்கு ராஜ்யங்கள் கடந்து, ஐந்தாவது அரசாகிய அந்திக்கிறிஸ்துவின் நாட்களை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அவனது வருகைக்கு எல்லாம் ஆயத்தமாகி விட்டன. ஆனால் நாம் நம் தேவனின் இரண்டாவது வருகைக்கு ஆயத்தமாகி இருக்கிறோமா? அந்திக்கிறிஸ்துவின் நாட்களில் வர இருக்கும் உபத்திரவ மற்றும் மகா உபத்திர நாட்களுக்கு நாம் தப்பிக்க கர்த்தரையே அண்டிக்கொள்வோம். ஆயத்தப்படுவோம், மற்றவர்களை ஆயத்தப்படுத்துவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! மாரநாதா!
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தானியேல் தீர்க்கதரிசியின் மூலம், உலகில் நடக்க இருக்கும் சம்பவங்களை துல்லியமாக எங்களுக்கு எழுதி கொடுத்தீரே உம்மை போல தேவன் யார் உண்டு தகப்பனே! மறைபொருளை வெளிப்படுத்துகிறவரும், நீரே எல்லா தேவர்களுக்கும் தேவனுமாய் ஒருவராய் சகலவற்றையும் ஆளுகிறவராக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். நாட்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறபடியால், ஐந்தாவது ராஜ்யம் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த நாட்களில் நாங்கள் கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு ஆயத்தப்படவும், மற்றவர்களை ஆயத்தப்படுத்தவும் கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.