கோபம் நிஷ்டூரமுள்ளது

கோபம் நிஷ்டூரமுள்ளது

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. – (எபேசியர் 4:26).
அமெரிக்காவில் நடந்த மனதை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம் இது. புதிதாக வாங்கியுள்ள அழகிய காரை தன் மனைவியிடம் காண்பிப்பதற்காக அவளை வெளியே அழைத்து வந்தார் ஒரு கணவர். அங்கே அவர்களது நான்கு வயது மகன் ஒரு சுத்தியலை வைத்து அந்த காரில் அடித்து கொண்ருந்தான். அதைக் கண்ட தகப்பன் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார். அந்த சுத்தியலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது விரல்களில் ஒரு அடி அடித்தார். அவனது கை விரல்கள் நொறுங்கி போயின.
அவர் கோபம் குறைந்த போது தன் மகனுக்கு தான் ஏற்படுத்திய தீங்கிற்காக வருத்தப்பட்டார். உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனது நொறுங்கிய விரல்களின் எலும்புகளை பொருத்த முடியவில்லை. அவனது விரல்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மகன் மயக்கம் தெளிந்து கண் திறந்தபோது, அருகிலிருந்த தகப்பனை பார்த்து, ‘அப்பா, உங்கள் காரில் கீறல் உண்டுபண்ணினதற்கு என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான். தகப்பனின் உள்ளம் நொறுங்கியது. பின்பு தன் தகப்பனை பார்த்து, ‘என் கை விரல்கள் திரும்பவும் எப்போது வளரும்’ என்று கேட்டான். அவனது வார்த்தைகளை தகப்பனுடைய உள்ளத்தை மேலும் உடைத்தது. நேராக வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.
‘உக்கிரம் கொடுமையுள்ளது: கோபம் நிஷ்டூரமுள்ளது (நீதிமொழிகள் 27:4) என்று வேதம் கூறுவது எத்தனை உண்மை!  கோபம் பழிவாங்க துடிக்கிறது. ஆனால் மன்னிக்கும் சுபாவம் பழி வாங்கும் எண்ணத்தை தடுக்கிறது, கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும், பொறுமையிழந்து செய்யும் எந்த செயலும் நமக்கு இழப்பையே கொண்டு வரும். ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு நிமிடம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள பழகி கொள்வோம். நாம் செய்ய போகும் காரியம் சரிதானா என ஒரு நிமிடம் சிந்திப்போம். ‘யாவரும் கோபிப்பதற்கு தாமதமாயும் இருக்கக்கடவர்கள்’ என்று யாக்கோபு 1:19 கூறுகிறது. ஆம், அந்த தாமதத்திற்கு நம் கோபத்தை குறைக்கும் தன்மையுள்ளது. ஆகவே பொறுமையும் மன்னிக்கும் சுபாவமும் பூரணமாய் நம்மிடம் செயல்படும்போது கோபத்தின் நிஷ்டூரத்தையும் நாம் மேற்கொள்ள முடியும்.
பிரியமானவர்களே, கோபம் கொள்வது மனிதனின் இயற்கை. ஆனால் அந்த கோபத்திலே வெறுப்புடன் ஒருவரை பட்டென்று அடித்து விடுவது பாவம். மனித இயற்கை என்று கோபப்படுவோமானால், அப்படி கோபிப்பதற்கு தாமதமாய் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. நம் தேவனாகிய ஆண்டவரைக் குறித்து, ‘ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்’ (சங்கீதம் 86:15) என்று வாசிக்கிறோம். இதில் நீடிய பொறுமை என்பதற்கு ஆங்கிலத்தில் கோபப்படுவதற்கு தாமதிக்கிறவர் என்று போடப்பட்டிருக்கிறது. நம் தேவனுடைய குணாதிசயங்கள் நம் வாழ்விலும் காணப்பட வேண்டுமல்லவா?
பிரியமானவர்களே, சவுலின் கோபம் அவரை தான் ராஜாவாக இருக்கிறார் என்பதை மறந்து, தாவீதை துரத்தி காடு, மலை என்று அலைய வைத்தது. நாமும் நம் வாழ்வில் அநேக நன்மைகளை கோபப்பட்டு இழந்திருக்கலாம். இனி நம் வாழ்வில் பொறுமையை கையாளுவோம். கோபத்தில் அவசரப்பட்டு நமக்கு பாதகம் விளைவிக்கிற எந்த முடிவையும் எடுத்து, பின் வருத்தப்பட்டு கொண்டிருக்காதபடி, கோபம் வரும்போது, பொறுமையாயிருந்து, தேவ ஆவியானவரின் கிருபையால் பிறரது குற்றங்களை மன்னித்து மறப்போம். தேவன் தாமே நமக்கு அந்த கிருபைகளை கூட்டி கொடுப்பாராக! ஆமென்! அல்லேலூயா!
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னை திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்று தந்து நடத்த வேண்டும்
மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும் தூயோனே உமக்கே

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் உக்கிரம் கொடுமையுள்ளது: கோபம் நிஷ்டூரமுள்ளது என்பதை உணர்ந்த நாங்கள் தேவையற்ற கோபம் கொள்ளாதபடி எங்களை காத்து கொள்ளும்.  கோபம் கொண்டு பாவம் செய்யாதபடிக்கு பொறுமை எங்களை ஆளும்படி ஆவியானவர் ஒத்தாசை செய்வாராக. எங்கள் கோபத்தில் சில வேளைகளில் எடுத்த தவறான முடிவுகளுக்காக வருந்துகிறோம். இனி அவ்வாறு செய்யாதபடி தேவன் எங்களை காத்து கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.